அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

VII. நான்டா, ஒங்கப்பன்டா

கடல் மணலில் கபடி ஆடுவது ஒரு சுவையான அனுபவம். நல்ல உடற்பயிற்சியும்கூட. கபடி ஆடுவது, பல கலாச்சார அடையாளங்களைப் போல, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

முட்டத்தில், நாங்கள் கடல் குளிக்கப் போகும் நாட்களில் கடல்மணலில் கால்களால் கோடுகிழித்து கபடி ஆட்டம் களைகட்டும்.

சமதளங்களில் ஓடுவதைவிட கடல்மணலில் ஓடுவது கடினமாக இருக்கும், ஆனால் கபடியில் கீழே விழும்போது உடலில் மண் ஒட்டாத இடங்களே இல்லை, மீசை உட்பட. கடற்கரை மணல் பரிசுத்தமாயிருப்பதை இப்படி உருண்டு பார்த்தும் உணரலாம்.

தோராயமாக முப்பதுக்குப் பத்து என்ற அளவில் வரையப்பட்ட செவ்வகக் கட்டத்தை இரண்டாகப் பிரித்து நடுக்கோடிட்டு, பக்கத்திற்கு ஐந்து முதல் ஆறுபேர் உள்ள அணி விளையாடும். ஒரு அணியிலிருந்து ஓருவர் மூச்சு விடாமல் பாடி வந்து அடுத்த அணியிலிருந்து யாரையாவது தொட்டுவிட்டு திரும்பி அவரது அணிக்கு வந்து விட்டால், அவர் தொட்டு வந்தவர்கள் வெளியேறுவார்கள். இப்படிப் பாடி வரும் நபரை நடுக்கோட்டைத்தொட விடாமல் பிடிப்பது எதிர் குழுவின் குறி. அப்படிச் செய்துவிட்டால் அவர் வெளியேறவேண்டும்.

ஆட்கள் வெளியேற வெளியேற ஒரு குழு வலுவிழந்து போகும். கடைசி நபர் அவுட் ஆகும்போது எதிர்குழு வெற்றி பெரும்.

கணினியில், மின் துப்பாக்கிகளால் நிழல்மனிதர்களைக் கொன்று விளையாடிப் பழக்கமுடையவர்களுக்காகவும், பரிட்சைக்குப் பின், க்ளிப் வத்த அட்டையை வைத்தாவது கிரிக்கட் மட்டுமே ஆடிப்பழக்கமுடையவர்களுக்காகவும் கபடி பற்றிய இந்தக் குறிப்பு.

மூச்சுவிட்டாமல் பாடிவரும் பாடல்கள் பலவிதம்.இதில் 'நான்டா ஒங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா' எனத்துவங்கும் பாடல் பிரசித்தம். வெறும் 'கபடி, கபடி' என்ப் பாடினாலும் போதுமானது. 'கபாடி... கபாடி' என மெதுவகப் பாடுபவரும், மின்னல்போல் 'கபடிக்கபடிக்கபடிக்கபடிக்' என பாடிப்போகிறவரும் உண்டு. இதில் முயற்சியேதும் இல்லாமல் வெறுமனே பாடிப்போபவர்களைத் தடுக்க 'தொடு கோடு' எனப்படும் கோடு வரையப்படுவதும் உண்டு. எதிரணிக்குப் பாடி வருபவர், குறைந்த பட்சம் இந்த கோட்டையாவது தொட்டுச் செல்லவேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தேசிய விளையாட்டு. இந்தியில் கபடியென்றால் 'மூச்சைப் பிடி' என்று அர்த்தம்.
முட்டத்தின் செம்மண் காடுகளில் கபடி விளையாடிவிட்டு வீடுவரும்போது உடல் செந்நிறமாகியிருக்கும்.

'உப்பு அடுக்குவது' இன்னொரு விளையாட்டு. மணல் இருக்கும் இடங்களில் மட்டுமே இந்த விளையாட்டு சாதகம். நான்குக்கு பத்தடி கணக்கில் ஒரு செவ்வகக் கட்டம். நீளவாக்கில் ஒருமுனையில் உப்படுக்குபவர், மறுமுனையில் எதிரணி ஆள், கையில் பந்துடன். 'ரெடி' சொன்னவுடன் உப்படுக்குபவர், ஆடுகளத்தின் நீளவக்குக் கோட்டின் மேல், இருகைகளையும் கும்பிடுவதுபோலக் குவித்து குறுக்காய், மணலை அடுக்கிக்கொண்டே செல்வார்.

பந்துவைத்திருக்கும் எதிராளி இவர்மீது பந்தைக் குறிபார்த்து எறிவார். பந்து உப்படுக்குபவர் மேல் பட்டால் அவர் வெளியேறி அவர் குழுவிலிருந்து இன்னொருவர் வந்து மீதி கோட்டில் உப்படுக்குவார். தன்னை நோக்கி வரும் பந்தை உப்படுக்குபவர் கையில் பிடித்து தூரமாய் எறிந்துவிடலாம்.

பந்துவைத்திருக்கும் எதிராளியின் குழுவில் உள்ளவர்கள் இதுபோல எறியப்படும் பந்துகளையும், உப்படுக்குபவர்மேல் படாமல் வரும் பந்துகளையும், எடுத்து மறுமுனயில் பந்தெறிபவருக்குத் திருப்பித் தரவேண்டும். இதன் இடைப்பட்ட நேரங்களில் உப்பு அடுக்கிச் செல்லவேண்டும்.

செவ்வகத்தின் இரு நீளக் கோடுகளிலும் உப்படுக்கியபின் அந்தக் குழு வெற்றி பெறுகின்றது. ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் ஒருமுழ இடைவெளிக்குக் குறைவாக இருக்கவேண்டும். முழுக்கவனமும் செலுத்தி விளயாடும் விளையாட்டு இது. பந்தின் மீது கண்வைத்துக் கொண்டே உப்படுக்கவேண்டும். பந்து எதிர்முனையில் இருப்பவரிடம் வந்தவுடன் பின்வாங்க வேண்டும், எப்போதும் கோட்டுக்குள் ஒரு காலாவது இருக்கவேண்டும்.

'மட்டைப்பந்து', அமெரிக்காவில் பிரபலமான 'பேஸ் பால்' போன்ற விளையாட்டு. காய்ந்த, தென்னை மர மட்டை சுழற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். இதை கிரிக்கட் மட்டைபோல வெட்டி, துணியை நூலால் இறுகக்கட்டி செய்யப்பட்ட பந்து கொண்டு விளயாடும் விளையாட்டு.

பந்தடிக்க வருபவருக்கு மூன்று முறை பந்து எறியப்படுகிறது. பந்தை அடிக்க வகையில்லாமல் எறிந்தால் அது எண்ணத்தில் சேர்க்கப்படுவதில்லை. பந்தை அடித்துவிட்டு ஓடி வட்டக் கோர்வையில் குறிக்கப்பட்டிருக்கும் சிறு கட்டங்கள் (Box) ஒன்றில் நிற்கவேண்டும். இதற்குமுன் அவர்மீது எதிர் குழு பந்தெறிந்து வெளியேற்றலாம். குறிக்கப்பட்டுள்ள மூன்று கட்டங்களையும் கடந்து அவர் துவங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தால் ஒரு ஓட்டம்.

ஏழு ஓட்டுத்துண்டுகளை அடுக்கிவைத்து, அதை பந்தெறிந்து கலைத்து, எதிரணியினர் தன்மீது பந்தெறியாதபடி சென்று அந்த ஓட்டுத்துண்டுகளை திரும்ப அடுக்குவது 'செவன்டீஸ்' எனப்படும் விளையாட்டு.

ஒருவரைக் குனியவைத்து அவர்முதுகில் கையைவைத்து நம் உடலின் வேறெந்த பகுதியும் அவர்மேல் படாமல் அவரைத் தாண்டவேண்டும். ஒரு நிலையில் தாண்டியபின் குனிந்து நிற்பவர் சற்று நிமிர்ந்து அடுத்த நிலைக்கு செல்வார். இது ஒரு விளையாட்டு.

சவுக்கு - காத்தாடி- மரக்கிளைகளை வெட்டி கில்லியும் ஆடுவதுண்டு. 'குட்டிபுள்ளை' என இது அழைக்கப்பட்டது.

மழைப் பருவத்தில் செம்மண் குழங்களின் சேற்றால் படகு செய்து, காயவைத்து கட்டி இழுத்துச் செல்லும் பிள்ளைகளை பார்க்கலாம். இந்தக் களிமண் கொண்டு சிறிய வீட்டு உபயோகப் பொருட்களை விளையாடாகச் செய்து, மணலில் கோடிட்டு, "இது வரவேற்ப்பறை, இது சமையலறை" என 'வீடு கட்டி' ஆடுவதும் உண்டு.

நொங்கு கிடைக்கும் நாட்களில், சீவி சதை எடுக்கப்பட்ட நொங்குகள் இரண்டை குச்சியில் இணைத்து, சக்கரம் பூட்டிய வண்டி போல ஓட்டுவது வழக்கம்.

தரையில் கட்டங்களிட்டு ஒரு ஓட்டுத்துண்டை ஒவ்வொரு கட்டமாகப் போட்டு ஒற்றைக்காலில் நொண்டியடித்து ஆடும் ஆட்டமும் உண்டு. இதில் பெண்கள் பிரபலம்.

பஸ்களில் குறைவாகப்போயிருந்தாலும், கிடைக்கும் பயணச்சீட்டுகளைக் கொண்டு, முனைகள் கட்டப்பட்ட கயிற்றிற்குள் குழந்தைகள் நின்று, முன்னால் நிற்பவர் ஓட்டுனராகவும் பின்னால் நிற்பவர் நடத்துனராகவும் பாவித்து ஊரைச்சுற்றி பயணிப்பது குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு.

கடற்கரையில் பெரியவர்கள் சீட்டு விளையாட ஓய்வெடுக்க கூடங்கள் இருக்கும். 'சீட்டுப் பிரை' எனப் பெயர். இந்த ஓலை வெய்தக் கூடங்களில் உறங்குவது சகல ரோக நிவாரணம் தரும். வயிறு நிறைய உண்டுவிட்டு, கடற்கரையில், நிழலில், கடல் மணலைப்பரப்பி, ஒரு துணித் துண்டை விரித்து உறங்குவது மனதை தூய்மைப்படுத்தும் மருத்துவம்.

இரு மூங்கில் கழிகளுக்கு நடுவே வெள்ளைத்துணி கட்டி திரைப்படங்கள் காண்பிப்பது ஊருக்குப் பொதுவான பொழுதுபோக்கு. திருவிழாக்கள் மட்டுமல்லாமல் பிறப்பு தொடங்கி இறப்புவரை வரும் எந்த வைபோகமானாலும் திரைப்படம் காண்பிப்பது சில கடற்கரை ஊர்களின் வழக்கமாயிருந்தது. இதில், மழைபெய்தோ, திரை கிழிந்தோ, ப்ரொஜெக்டர் எரிந்தோ பாதியிலேயே நின்று போன படங்கள் ஏராளம். திரையரங்குகளில் காண்பிக்கப்படுவதற்கு முன்பே ஊரில் காண்பிக்கப்பட்ட படங்களும் உண்டு. ஒவ்வொரு சுருள் மாற்றும்போதும் வரும் இடைவெளிகளில் கடலை, முறுக்கு வியாபாரம் கொடி கட்டும்.

திரைப்படம் போடும் குழு வரும்வரை கட்டிய வெள்ளைத்திரையையே பார்த்து காத்திருக்கும் நேரங்கள், படம் பார்ப்பதைவிட இனிமையாகக் கழிந்தன.

Labels:

1 Comments:

At 12:21 AM, Blogger ஜோ/Joe said...

நீங்கள் சொன்ன எல்லா விளையாட்டுக்களும் நான் விளையாடியிருக்கிறேன் .அதிலும் 'உப்படுக்குதல்' கடற்கரைக்கே உரிய எனக்கு பிடித்த விளையாட்டு.

 

Post a Comment

<< Home