அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XV. அப்பாவா? மாமாவா?

சொந்த ஊரைவிட்டு வெளியேறிப் போவது எத்தனை சோகமான அனுபவம் என்பது நம்மில் பலருக்கும் பழக்கமானது. எத்தனை சுகங்களை இழக்க நேரிடுகிறது? எத்தனை ஞாபகங்களை களையவேண்டியுள்ளது? எத்தனை மனிதர்களை மறக்கவேண்டியுள்ளது? இதிலும் நம் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு நாம் மட்டும் போகவேண்டுமென்றால்?!

நம்மூர் மீனவர்களுக்கு மத்திய கிழக்கு (வளைகுடா) நாடுகளில் வேலை கிடைக்கிறது. செல்வம் தேடி போகும் இவர்களின் சோகங்கள் பல.

குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 2 அல்லது 3 மாத விடுமுறை. இதில் ஊருக்கு வந்து கல்யாணம், காதுகுத்து, கருமாதி என எல்லா கடமைகளும் நிறைவேற்றிவிட்டுப் போகவேண்டும்.

இப்படி திருமணமாகி ஒரு மாதத்திலேயே மனைவியை விட்டுவிட்டுச்செல்லும் இளைஞர்கள் எத்தனையோபேர். அடுத்த மாதம் புதுப்பெண் கருத்தரித்திருப்பது கடிதம் மூலம் (முன்பெல்லாம் ஊரில் தொலைபேசி இல்லை) தெரிவிக்கப்படும். பின்பு அவர் பதில்கடிதம் வந்து சேருமுன் இந்தப்பெண் தாய் வீட்டுக்குப்போய், குழந்தையும் பெற்றெடுத்துவிடுவார்.

தந்தைமுகம் பார்க்காமலேயே இந்தக் குழந்தை வளரும். குழந்தைக்கு ஒருவயது முடிந்தபின் தந்தை வந்து பார்த்துவிட்டு, பாரின் பொம்மைகளும் இனிப்புகளும், பொம்மை படம்போட்ட பனிய்ன்களும் கொடுத்துவிட்டு திரும்பப்போய்விடுவார். அடுத்தமுறை இவர் ஊர் வரும்போது. இது அப்பாவா மாமாவா என இந்தப் பிள்ளைக்கு சந்தேகம் பிறக்கும்.

நான் சிறுவனாக இருந்தபோது முட்டத்தில் தனியாரிடத்தில் தொலைபேசி ஒன்றிரண்டுதானிருக்கும். கடிதங்கள் ஊரிலிருந்து வெளிநாடு போகிறவர்கள் எடுத்துச்செல்வதும், அங்கிருந்து வருபவர்கள் கொண்டுவருவதும் வழக்கம். அப்போது ஊரில் புகைப்படம் எடுத்துவைக்கும் பழக்கம் கூடக்குறைவு. பிஞ்சுக்குழந்தைகள் தந்த்தையின் வழிகாட்டலின்றி, தந்தையை அடையாளம் காட்டக்கூட இயலாமல் வளர்வது மாபெரும் சோகம்.

ஒன்றிரண்டு லட்சம் கடன்பட்டு விசா வாங்கி வெளிநாட்டுக்குப்போய் ஒன்றுமில்லாமல் திரும்பியவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனாளிகளாகவே வாழ்ந்த கதையும் உண்டு. இதில் முதலாளியிடம் அடி உதை வாங்கி ஓடிவந்தவர்களும் அடக்கம்.

ஃபாரின் போகிறவர்கள் எல்லோருக்கும் நல்ல வருமானம் கிட்டுவதுமில்லை. கஷ்டப்பட்டு வெறும் 5 அல்லது 7 ஆயிரம் மட்டும் ஊருக்கு அனுப்புபவர்கள் பலர். கூழோ, கஞ்சியோ ஊரிலேயே பிழைப்பு நடத்துவோம் என இருப்பவர்களும் பிறரின் செல்வச் செழிப்பான வாழ்வைக்கண்டு தூண்டப்படுகின்றனர்.

என் உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருக்கும்போது இறந்துபோனார். ஊரில் இளம் மனைவி. மிகவும் கஷ்டப்பட்டு சிலநாட்களுக்குப்பின் அவரது உடல் ஊர்வந்து சேர்ந்தது, அடைக்கப்பட்ட மருத்துவப் பெட்டியில். அதைத் திறக்கவும் அனுமதியில்லை. அவரின் முகத்தைக் கூட பார்க்கமுடியாமல் கதறியவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்லக்கூடும்?

இதில் இன்னொரு சோகம், இறந்தவர் எப்படி இறந்தார் என்பது எப்போதும் மர்மமாகவே இருக்கும்.

நாகரீகம், வளர்ச்சி என்ற பெயரில் நம் தேவைகளை நாமே வளர்த்துக்கொள்கிறோம். இவற்றை நிவர்த்தி செய்ய நாம் இழப்பவைகள் விலைமதிப்பில்லாதவை.

முன்பொரு பதிவில் கேட்டதை திரும்பக் கேட்கத்தோன்றுகிறது. ஊரில் 2000 சம்பளம் வாங்குபவருக்கும் சென்னையில் 20000 வாங்குபவருக்கும் தாங்கள் பெறும் சந்தோஷத்தில் வித்தியாசமிருக்கிறதா? இந்த சந்தோஷங்களை நாம் பெற்றுக்கொள்ளும் முறை வேண்டுமானால் வித்தியாசப்படலாம்.

பணத்திற்காக பாசத்தையும், தனத்திற்க்காக தாம்பத்யத்தையும், பொருட்செல்வத்திற்காக பிள்ளை செல்வத்தையும் தியாகம் செய்வதா?

என் உறவினர் இன்னொருவர், திருமணமாவதற்குமுன் வெளிநாடு போயிருந்தார். இப்போது அவர் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இன்றுவரை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்து போகிறார். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்களின் விறுப்பு வெறுப்புகளையும், அந்தப் பெண்கள் செய்யும் தியாகத்தையும் யாரும் எண்ணுவதில்லை? இவ்வளவு வருமானம் பார்த்தவருக்கு ஊரில் வந்து என்ன செய்வது என்பதே புதிராயிருக்கிறது.

பல நேரங்களில் குடும்பத்தில் சுக துக்கங்களில் இவர்களால் பங்குகொள்ள முடியாமல் போகிறது. பலரும் குடும்ப சுமைகளை ஏற்கத் தயங்கி திரும்பிச் செல்கிறார்கள்.

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?'

Labels:

4 Comments:

At 1:45 AM, Blogger G.Ragavan said...

நல்ல சிந்தனை. ஆசைகள் வளர வளர..அவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிமுறைகளைத் தேடுகிறோம். சில சமயங்களில் நமக்கு மிகவும் பிடித்தவைகளை விட்டு விடுகிறோம்.

புலம் பெயர்தல் என்பது தனியளாகச் செய்வதில் பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. அதிலும் திருமணம் செய்தவர்கள் நிலமை இன்னும் மோசம். அந்தப் பெண்ணின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அவள் எல்லோரும் போற்ற தன்னைக் கற்புக்கரசியாகப் பாதுகாத்துக் கொள்வதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். உணர்ச்சிகளைக் கொன்று வென்று....என்ன ஒரு வாழ்க்கை அந்தப் பெண்ணிற்கு...ச்சே!

 
At 7:18 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பெண்களைப்பற்றிய இந்தப்பரிமாணத்தை யாருமே யோசித்துப்பார்பதில்லை என்பதுதான் கொடுமை.

 
At 8:08 AM, Blogger மகேஸ் said...

மனைவியையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து, பணம் சம்பாதித்து என்ன கண்டார்கள். ஒருவர் சராசரியாக 70 வயது வரை வாழ்வாரானால், முதல் 25 வருடங்கள், கல்வி மற்றும் வேலை தேடுவதிலேயே போய்விடுகிறது. கடைசி 15 வருடங்கள், உடல் தளர்ந்து பலம் இழந்து போய் விடுகிற்றோம். மீதம் உள்ள 30 வருடங்கள் தான் வாழ்க்கை. அதை அனுபவிக்காமல் வெளிநாட்டில் தனியாக உழைத்து, வாழ்க்கையில் என்ன சுகத்தைக் காண்கிறோம். ஆனால் அந்த ஒருவரின் தியாகத்தால், குடும்பம் முன்னேறி, அவரின் சந்ததிகள் அதைப் பாதுகாத்து வந்தால், அவர்களின் தியாகத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைகிறது. எனவே இது ஒரு முடிவிலாத விவாதமாகும் எனத் தோன்றுகிறது.

 
At 9:22 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சரியாகச் சொன்னீர்கள் மகெஸ்...
முடிவில்லா விவாதம்தான் இது.

 

Post a Comment

<< Home