அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

X. செங்கால் மனிதர்கள்

சிவந்த மண்ணில் கடைகள் இல்லாததால் காலியான பொருட்களை பக்கத்து வீட்டில் வாங்கித்தான் சமைப்பார்கள். அடிக்கடி யாராவது ஒரு பையனோ பெண்ணோ வந்து "அம்மா.. கொஞ்சம் உப்பு கேட்டாங்க.. புளி கேட்டாங்க", என்று கேட்பது வழக்கம். நானும் போயிருக்கிறேன் இந்தக் கடன்வாங்கும் ஊர்வலம்.

'பால் பள்ளி' என்ற ஒரு பாலகர் பள்ளிக்கூடம் மட்டுமே சிவந்தமண்ணில் இருந்தது. குழந்தைகள் விளையாட வசதிகள் இருந்தன். மத்தியானம் மூன்று மணிபோல சுடச் சுட, பால் பொடி இட்டுக்காய்ச்சிய பால் வழங்கப்பட்டது. ஒரிரு ஆண்டுகளிலேயே 'பால் பள்ளி' மூடப்பட்டது.

யூ. எஸ் ஏய்ட் (USAID), என்ற அமெரிக்க தொண்டு நிறுவனம் கோதுமையும், பால் பொடியும் வழங்கும் நிலையமொன்றை நடத்தி வந்தது. பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

படிப்புக்கு, முட்டம் அல்லது கடியபட்டிணம்தான் செல்லவேண்டும். தினமும் சிவந்தமண்ணிலிருந்து, பின்னப்பட்ட கூடைகளில் புத்தகங்களை சுமந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. இந்த நேரங்களில் கொத்தாய் பூக்கும் ஒரு காட்டுச்செடியின் மலர்களில் தேனுறிஞ்சிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து பென்சில் பெட்டியில் (அப்போது ஜியாமெட்டரி பாக்ஸ்) அடைத்துக்கொள்வோம். இந்த மலர்களைப்பறித்து நாங்களே தேனுறுஞ்சுவதும் உண்டு. இந்தச்செடிகளில் பழம் கரு ஊதா நிறமாகப் பழுக்கும். இதை சுவைத்தால் நாக்கும் கருநீலமாகும்.

கோவக்காயை சமயலுக்கு பயன்படுதுவதில்லை. ஆனால் வேலியில் கிளியின் மூக்குபோல சிவந்து பழுத்திருக்கும் கோவைப்பழங்களை சுவைத்திருக்கிறேன். கள்ளிச்செடிகளின் புளித்த சுவையுடைய பழங்களை கவனமாகப் பிரித்து உண்டிருக்கிறோம். பல பெயர் தெரியாத செடிககளில் காய்க்கும் பழங்களும் காய்களும்கூட தின்பதுண்டு.

ஊருக்கு பால்பொடி ஏற்றிவரும் லாறி ஓட்டுனர் சிவந்தமண்காரர். பள்ளி விட்டு வரும் நேரம், ஒருநாள், அந்த லாறியில் ஏறி பால்கட்டிகளை வாயில்போட்டு மேல்வாய், கீழ்வாய் ஒட்ட ஒட்ட தின்றது ஞாபகத்திலிருக்கிறது.

முட்டத்தில் பெயர்போன படகு கட்டும் கம்பனி (Boat Building Center), சிவந்த மண்ணில்தான் இருக்கின்றது. வளையும் தன்மயுள்ள, ப்ளை வுட் (Ply wood) மரப்பலகை கொண்டு செய்யப்பட்டன இந்த படகுகள். இப்போது குமரியின் கடற்கரைகளில் கட்டுமரங்களை இந்தப் படகுகள் பதிலாடியிருக்கின்றன(replace). வேலைநாட்களில் செம்பு ஆணிகளை அறையும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்த படகுகட்டும் நிலயமும் ஒரு பன்னாட்டு உதவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டது. ஃபாதர் ஜில்லே எனெ அழக்கப்பட்ட பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த்த பாதிரியார்தான் சிவந்தமண் கோவிலில் பூசை செய்வார். இவருக்கு தமிழ் சொல்லித்தந்தவர்கள் விளையாட்டக கெட்டவார்த்தைகள் சிலவும் சொல்லித்தந்தது கிராமங்களுக்கே உரிய நகைச்சுவை. 'சமாதானம்' என்பதை இவர் 'சாமானம்' என்று கூற கோவிலென்றும் பாரமல் ஊரே சிரிக்கும்.

இவரின் நீலக்கண்களும் வெள்ளைத்தோலும் வியப்பூட்டின. சிறுவனாக அவரைப்பிடித்து தொங்கி விளையாடிய ஞாபகம், இப்போதும் பசுமை. நான் பார்த்த வெள்ளைக்காரர்களிலேயே வேட்டி கட்டிக்கொண்டவர் இவர் ஒருவர்தான். பஞ்சாயத்துக்குச் செல்லும் நாட்டாமை போல நேர்த்தியாக கட்டியிருப்பார்.

பெரிய/புனித வெள்ளிக்கிழமை அன்று பாடப்படும் "திருச்சிலுவை மரம் இதோ இதிலேதான் தொங்கியது.. உலகத்தின் இரட்சணியம்" என்ற பாடலை இவர்போல யாரும் பாடக் கேள்விப்பட்டதில்லை.

பல போராட்டங்களுக்குப்பிறகு சிவந்தமண் ஊருக்குத் தண்ணீர் வந்தது. ஊர் குழாயில் சாயுங்காலம் ஐந்து மணிக்கு தண்ணீர் வரும். பெரியவர்கள் தண்ணீர் பிடிக்கும் நேரம் சிறுவர்கள் விளயாட்டு துவங்கும். ஆண் பெண் என்ற பேதமின்றி சிறுவர்கள் ஒன்றாய், கண்ணாமூச்சியோ, நொண்டியடித்தோ விளையாடுவது வழக்கம்.

ஊரைச்சுற்றியுள்ள செம்மண்காடுகளில் விளையாடுவது மாபெரும் பொழுதுபோக்கு. இந்தப்பள்ளங்களில் வடக்கு நோக்கி நடந்தால் அவரற்றின் துவக்கம் தரையில் விழுந்திருக்கும் சிறிய கீற்று என்பது புலப்படும். சில பருவங்களில் இங்கே அடைமழை பெய்யும். அப்போது பெருக்கெடுத்து ஓடிவரும் செம்மணல் நீரில் ஓடிக்கோண்டோ உருண்டு கொண்டோ குளிக்கலாம்.

மழைக்குளியலென்பது சிவந்தமண்ணில் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாகவே இருந்தது. மழை ஓயும்வரை குளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து கொஞ்சம் நல்ல நீரில் குளிக்கவேண்டும். உலகின் மிகப்பெரிய ஷவரில் குளியல், நினைத்தாலே சுகம்.

'செங்கால் மனிதர்களான' சிவந்தமண் மக்களின் ஜீவிதம் சுகமானது. எத்தனை வசதி குறைவுகளிருந்தாலும், முட்டம் மற்றும் கடியபட்டிணத்திலிருந்த நெருக்கடி வாழ்க்கை இங்கில்லை. ஒரு கிராமத்தையே உருவாக்கி நிலைநிறுத்தும் சமபொறுப்பிருந்தது இங்கிருந்த எல்லா பெரியவர்களுக்கும். அதை செம்மையாகவே செய்தனர்.


பெரிய ஊர்களில் இருந்த சட்டதிட்ட கட்டுப்பாடுகள் எதுவுமில்லமலிருந்தது சிவந்தமண்ணில். எந்தக்களைப்போடும், கவலையோடும் வீட்டுக்குவந்தாலும் இளைப்பாறி இதம் பெறலாம்.

வண்டி ஒட்டமேதுமில்லாத தெருக்களில் பயமின்றி ஆடித்திரிந்திருந்தோம். இன்று நினைக்கயில் சிவந்தமண், சில கட்டுக்கதைகளில் குட்டிமனிதர்கள் மெய்மறந்து துள்ளிவிளையாடும் கற்பனை இடமென்றே தோன்றுகிறது. எங்கே போயிற்று அந்த களங்கமில்லா குழந்தை மனம்?

இந்தக்கிராமங்களை விட்டு வருபவர்கள் உடல்கள் மட்டுமே நகரங்களில் உலவுகின்றன. உணர்வுகள் ஊரில் மரமோடு மரமாக, செடியோடு செடியாக, புதரோடு புதராக விளைந்துகிடக்கின்றன.

Labels:

10 Comments:

At 9:27 PM, Anonymous Anonymous said...

Nice

 
At 7:18 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

Thanks John. Please continue reading and continue offering feedback.

 
At 11:36 AM, Anonymous Anonymous said...

செங்கால் மனிதர்கள் மிகவும் பொருத்தமான புனைப்பெயர்.. இதைத்தான் சொன்னா புரியவா போகுது அனுபவிச்சு பார்த்தாதான் புரியும்னு சொல்லுவாங்களோ...

வாழ்த்துக்கள்...

 
At 4:15 AM, Blogger ரவி said...

பழைய நினைவுகளை கிளறும், நெஞ்சைத்தொடும் "பதிவு"..."பதிவு" என்பதை அழுத்தமாக சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்...

 
At 5:45 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி ரவி.. இப்ப இந்தப் பின்னூட்டத்த போட்டு என் பழைய (பதிவு) நினைவுகள தூண்டிட்டீங்க.

:)

 
At 12:17 AM, Blogger G.Ragavan said...

செங்கால் நாராய் போலச் செங்கால் மனிதர்களா! நாரைச் சிவப்பு இயல்பிலேயே உள்ளது. மனிதர்களின் கால் தடம் சிவப்பது மண்ணைத் தொட்டு. நல்ல நினைவுப் பதிவு.

கோவைக்காயைத் தமிழகத்தில் பொதுவாகச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இங்கே கர்நாடகத்தில் தொண்டேகாய் என்ற பெயரில் அழைத்து சமையலில் மிகுவாகப் பயன்படுத்துகிறார்கள்.

// இவருக்கு தமிழ் சொல்லித்தந்தவர்கள் விளையாட்டக கெட்டவார்த்தைகள் சிலவும் சொல்லித்தந்தது கிராமங்களுக்கே உரிய நகைச்சுவை. 'சமாதானம்' என்பதை இவர் 'சாமானம்' என்று கூற கோவிலென்றும் பாரமல் ஊரே சிரிக்கும். //

:-)))))))))))) உலகத்துக்கே சமாதனம் உண்டாகட்டும்.

மொத்தத்தில் நல்லதொரு நினைவுப் பதிவு. உங்கள் தவம் கலைந்ததில் மகிழ்ச்சியே. :-)

 
At 9:40 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜி.ரா பதிவு போட்டு வருஷக் கணக்காகிறது. அதன்பின்னும் தேடிப் பிடித்து பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். நன்றி.

இதுபோன்ற நினைவுகளை மறக்கமுடியுமா என்ன?

 
At 10:04 AM, Blogger தருமி said...

ஒரு மாதிரி மனச தொடுது... அது உங்கள் எழுத்தினாலா.. இல்லை நாமெல்லோரும் தொலைத்துவிட்ட நம் இளமைக் கால நினைவுகளா.. இல்லை, காலத்தால் அடித்துச் செல்லப்பட்ட 'பழைய கதைடா பேராண்டி" என்ற flash back-ஆ...புரியவில்லை...

எனக்கும் எங்க பாட்டையா வீட்டு முன்னால் மழைக் காலத்தில் பொங்கிப் பிரவாகமாக வரும் வெள்ளம் நினைவுக்கு வருகிறது. என்னாச்சு அந்த வெள்ளம்..? எங்கு போச்சு அந்த வெள்ளம்..?

ஸ்ஸ்...அப்பாடா...கண்ணக் கட்டுதே...

 
At 10:14 AM, Blogger ramachandranusha(உஷா) said...

ஒரு மாதிரி மனச தொடுது... அது உங்கள் எழுத்தினாலா.. இல்லை நாமெல்லோரும் தொலைத்துவிட்ட நம் இளமைக் கால நினைவுகளா.. இல்லை, காலத்தால் அடித்துச் செல்லப்பட்ட 'பழைய கதைடா பேராண்டி" என்ற flash back-ஆ...புரியவில்லை...//

அதேதான். அவ்வளவு ஏங்கிப்போகிறோம்
பெரூமூச்சுடன்,
உஷா

 
At 10:14 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

தருமி,
நன்றி. இந்தப் பதிவுகள திரும்பிப் படிப்பதே எனக்கு சிரமமாயிருக்கும், பலநேரங்களில் க்கண்கள் குளமாவதே இதற்குக் காரணம்.

புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருக்குமே இது பொதுவான உணர்வாத்தான் இருக்கும்.

ஆட்டோகிராப் சேரனப் போல நியாபகம் வருதேன்னு பாட்டுப் பாடிட்டு சைக்கிள் ஓட்டிட்டுப் போகவேண்டியதுதான்.
:)

 

Post a Comment

<< Home