அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XIII. அழைக்கப்பட்ட நண்பர்கள்

முன்பெல்லாம் முட்டத்தில் திருமணங்கள் வீட்டிலேயே நடத்தப்பட்டன. நாகர்கோவிலில்தான் மண்டப வசதி இருந்தது, அந்தச் செலவுகளும் அலைச்சலும் எல்லோருக்கும் சாத்தியமாகாததால் ஊரிலேயே திருமணம்.

வீட்டிற்குமுன், தெருவை அடைத்துக்கொண்டு பந்தல் போடப்படும். ஒரு வாரத்திற்கு, தெருவில் போக்குவரத்து அடைபடும். கடல் மணல், பந்தலின் உள் பரப்பட்டிருக்கும். இந்தப் பந்தல்களுக்குள் ஒரு மணம் பரவும். திருமணம் முடிந்ததும் காணாமல் போய்விடும் அந்த மணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பே பந்தலில் மின்விளக்கு அலங்காரம் ஒளிரும். கொண்டை வைத்த ஒலிபரப்பி (குழல் ஒலிப்பான்) கட்டப்பட்டு முதலில் கிறித்துவப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'விண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகின்றார்', புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் பொதுவாக முதற் பாடல்.

இசைத்தட்டுகள்தான் அப்போது. சின்னதாகவும் பெரியதாகவும் கறுப்புத் தட்டுகள், சில சிவப்புதட்டுகளும் உண்டு. தட்டுக்கள் சுழலும்போது தூசியிலோ கீறலிலோ சிக்கித் தவிக்கும் பாடல்கள் பல. இப்படி சிக்கிய ஒலியுணர் முள்ளைத்தூக்கி அடுத்த வரியில் போடுவது ஒரு கலை. கொஞ்சம் தவறினாலும் பாடல் பல வரிகள் கடந்துவிடும்.

குர்பானி முதல் குடியிருந்த கோவில் வரை பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எம். ஜி. ஆர் ரசிகர்கள் அதிகமாயிருந்ததால் வாத்தியார் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் திருமணங்களும் உண்டு. சிலநேரம் மலையாளப் பாடல்கள் ஒலிப்பதும் உண்டு. செம்மீனின், 'பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே கண்ணாளே' மனதில் ஒலிக்கிறது.

கல்யாணப்பந்தலருகே சிறுவர்கள் விளையாட்டு எப்போதும் நடக்கும். பாடல்களுக்கு நளினம் பிடிப்பது இவர்களின் இரவுநேரத்துப் பொழுதுபோக்கு.

உயிரைப்பணயம் வைத்து, மின்சாரக் கம்பியில் கொக்கி போட்டு மின்னிணைப்பு பெறுவதில் இந்த ரேடியோ செட்காரர்கள் நிபுணர்கள். சில திருமணங்களுக்கும் அப்படியே மின்சாரம் பெறப்படும்.

இந்தப் பந்தல்களில் சீட்டாடுவது ஆண்களுக்கு பொழுது போக்கு. சிலநேரங்களில் இந்த விளையாட்டுக்களில் எழும் சண்டைகளில் கல்யாணங்களே நின்றுபோகும்போலத் தோன்றும்.

சினிமாவில் வருவதுபோல மணப்பெண் கவுனெல்லாம் உடுப்பதில்லை. பட்டுச் சேலை காற்றாடத்தான் கல்யாணம். தலையில் 'ரீத்' எனப்படும் ஒரு அலங்காரமும், தலை துவங்கி பின்புறம் கீழாக வலைபோன்ற துணியில் ஒரு அலங்காரமும் செய்யப்படும். இந்த நீளமான 'நெட்' துணி கீழே விழாமல் பிடிக்க ஒரு வாண்டு நியமிக்கப்படும்.

மாப்பிள்ளை கோட் சூட், அல்லது பட்டு வேட்டி பட்டு சட்டை. பெண்ணின் சகோதரர் மாப்பிள்ளைக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

தங்கத்தில்தான் தாலி. பொதுவாக கன்னியாகுமரி கடரற்கரைகலில் தங்கத்தை கயிறுபோல முறுக்கி செய்யப்பட்டிருக்கும் தாலிச்செயின் பிரபலம். இந்தத் தங்கத்தாலியின் திருகாணியையோ அல்லது கொக்கியையோ மாட்டுவதற்கு ஒரு நாடகமே நடக்கும்.

திருமணத்தின்போது மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவர் மற்றவர் பேரைச்சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

"ஜோசப் ஆகிய நான் மேரியாகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும், நோயிலும் ...உனக்கு பிரமாணிக்கமாயிருப்பேன் என வாக்குறுதியளிக்கிறேன்" எனும் பொருள்பட ஒரு ஒப்பந்தம் வாசிக்கப்படுகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணும், இரு சாட்சிகளும், திருமணம் செய்து வைத்த பாதிரியாரும் கையொப்பமிட்டு திருமணங்கள் கோவில்களில் பதிவு செய்யப்படுகின்றன.

திருமண பூசை முடிந்தபின் 'பேண்ட் வாத்திய'க் குழு இசை ஆரவாரங்களோடு பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். புதிதாய் வரும் மணப்பெண்ணை வரவேர்க்க 'மணமகளே மருமகளே வா வா' பாடல் போடப்படும்.

கல்யாணப்பந்தலில், கீழே பெஞ்களைப் பரப்பி, சேலைகளைத் தொடுத்து மேடை அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேசையில் சர்கரை அலங்காரத்தில் கல்யாண கேக் ஜொலிக்கும். கீழே பெரிதாய் துவங்கி மேலே சிறித்தாய் மூன்று முதல் நான்கு தட்டுகளில் கேக் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதில் மேலுள்ள சின்ன வட்டம் மட்டும்தான் கேக் என்பதை பின்னொருநாள் ஏமாற்றத்தோடு தெரிந்துகொண்டேன்.

கேக்கை மந்திரித்து பாதிரியார் புதுத்தம்பதியரை வாழ்த்துவது முடிந்ததும் தம்பதிகள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டுவது வழக்கம். கேக் வெட்டியதும் பந்தலில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேக்கும் பழரசமும் வழங்கப்படும்.

ஊர் பெருசுகள் சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்தி பேச விளைவார்கள். நண்பர்களின் வாழ்த்து மடல் சட்டம்(Frame) போடப்பட்டு வாசிக்கப்படும். இது துண்டுப் பிரசுரமக வினியோகிக்கப்படுவதும் ஊண்டு. தோழிகளின் பாட்டு, குழந்தைகளின் ஆட்டம் என திருமண வரவெற்பு நடந்துகொண்டிருக்கும்போதே முதல் பந்தி துவங்கும்.

பிரியாணி பிரபலாமவதற்குமுன்பு சாப்பாடுதான் விளம்ப்பப்பட்டது. கேரள மணம் வீசும் கல்யாணச்சாப்பாடு.

தேங்காய் போட்ட பருப்புக்குளம்போடு துவங்கும் பந்தி. இதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்பதுமுண்டு. அடுத்து சாம்பார், ரசம் மோர் எனத் தொடரும். பருப்பும், பயறும் போட்ட பாயாசம் அல்லது சேமியா அல்லது அடை பாயாசம். பாயாசத்தில் பழத்தைப்பிழிந்து இலையை வழித்து நக்கினால்தான் திருமணச்சாப்பாடு நிறைவுபெறும். மணக்கும் மலையாள அவியல் இல்லாமல் இருக்காது இந்த சாப்பட்டில். தேங்காயில்லாத பதார்த்தம் ஊறுகாய் மட்டும்தான்.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு முகச்சவரம் செய்யும் சடங்கு நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுச்சாப்பாடு போடப்படும். ஏற்கனவே சவரம் செய்யப்பட்ட மணமகன் முகத்தில் பால் தடவி சவரம் செய்வது போல நடக்கும் ஒரு சடங்கு. 'முகத்துவலை' (முகத்து வேலை மறுவியிருக்கிறது) என அழைக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வழக்கம் என்றே நினைக்கிறேன்.

இந்தச்சடங்கு துவங்குவதை ஒருவர் மைக் செட்டில் ஒலிபரப்புவார். கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் இதே அறிவுப்புத்தான், 'மாப்பிளைக்கு முகத்துவேலை ஆரம்பிக்க இருப்பதால்... அழைக்கப்பட்ட நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'.

இன்னும் சில திருமணங்கள் இப்படி தெருமணக்க, ஊர்மணக்க நடைபெறுகின்றன.

Labels:

20 Comments:

At 12:06 PM, Blogger ஜோ/Joe said...

//எம். ஜி. ஆர் ரசிகர்கள் அதிகமாயிருந்ததால் வாத்தியார் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் திருமணங்களும் உண்டு. //

நம்ம ஊரிலும் இதே தான் .ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு .இரவு 7 மணிக்கு பாட்டு நிறுத்தப்பட்டு "முருகா! செந்தூர் வாழ் செல்வக் குமரா" என நடிகர் திலகம் குரலில் ஒலிக்கும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனம் ஒலிக்கும் .எத்தனை முறையானாலும் இதனை முழுவதுமாக ஒரு பெரிய கூட்டம் செவிமடுத்துக் கொண்டிருக்கும்

 
At 12:42 PM, Blogger kirukan said...

It happens almost in the same way in my town.

 
At 12:48 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஆகா..கதவசனத்த வுட்டுட்டேனே. வீ.பா.க பொம்மன், திருவிளையாடல், விதி, கெளரவம் வசனங்கள் இன்னும் மனப்பாடமாக நெஞ்சில் நிற்கின்றன.

பின்னூட்டமிட்டு ஞாபகப்படூத்தியதற்கு நன்றி ஜோ.

கிறுக்கன், உங்கள் ஊர் எது?

 
At 11:02 AM, Anonymous Anonymous said...

முட்டத்தை வைத்து நாவல் ஏதாவது எழுதுவீர்களா?

 
At 6:18 AM, Anonymous Anonymous said...

Nalla eedupaattudan ezhudhukireergal..

Good documentation.
I enjoy your posts...
Keep writing..

 
At 6:33 AM, Blogger ramachandranusha(உஷா) said...

சிறில், திருவிளையாடல்தானே ஒவ்வொரு ரீல் முடிந்ததும், குய்யா என்று என்று ஒரு சத்தம் வரும் ?

இப்படித்தான், எங்க வீட்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார்கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள், அந்த நாள் ஞாபகங்கள், உம்ம்ம்ம் :-)

 
At 7:21 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

Thank you for all yuour encouragement. I'm almost exuhausted. I might end this blog soon. But I will keep blogging. Please extedn the same support.

 
At 2:08 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

உஷா, அதே குய்யா சத்தம் வரும் திருவிளயாடலேதான்...

கே.வி. மஹாதேவன் பாடல்கள் சூப்பர். நானும் நண்பர் ஒருவரும் அமெரிக்கத்தெஉர்க்களி காரில் போகும்போது சத்தமாகப்பாடும் பாடல் 'ஒரு நாள் போதுமா' பால முரளி கிருஷ்ணா குரல்.

அதுசரி அந்த முதல வயிலிருந்து வாய எடுங்க முதல (ஐ..ரெண்டு முதல).

 
At 12:33 AM, Blogger G.Ragavan said...

ஒரு பண்பாட்டை மற்றவர்களோடு பகிர்வது என்பது மிகக் கடினம். ஆனா ஒங்க ஊர்ப் பண்பாட்டை அழகாச் சொல்லீருக்கீங்க.

எங்கூர்ப்பக்கமும் கிருஸ்தவங்க தாலியக் கட்ட மாட்டாங்க. மாட்டுவாங்க. இந்து நாடர்கள் கலியாணத்துலயும் அப்படித்தான். அவங்க தாலிச்சரடும் நீங்க சொல்றாப்புல தண்டியா தரமா முறுக்கிக்கிட்டு இருக்கும்.

இப்பல்லாம் கலியாணச் சாப்பாட்டு வகைகளே மாறிப் போச்சு. தங்கைகளோட நிச்சயதார்த்தம் எங்க பட்டிக்காட்டுல நடந்தது. ராத்திரிதான் நடக்கும். ஆனா ஊர்ச்சமையல் ஆளக் கூப்புடாம, கோயில்பட்டீல இருந்து சமையக்காரரு வரவழைச்சு, வழக்கமா போடுற சாப்பாடு போடாம, வித்தியாசமா தோசை, வெஜிடபிள் பிரியாணி, அது இதுன்னு போட்டு கடைசீல ஐஸ்கிரீம். எல்லாரும் விரும்பிச் சாப்பிட்டாங்க. அப்புறம் பாருங்க.....அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரா ஐஸ்கிரீம் வெக்கத் தொடங்கீட்டாங்க.

 
At 7:24 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

G.R.
பாராட்டிக்கு நன்றி. இப்பெல்லாம் பல மாற்றங்கள் வந்திருக்கு. ஊரிலேயே மண்டபம் கட்டியிருக்காங்க..பிரியாணி இல்லாம கல்யாணம் பண்றதே இல்ல.

 
At 10:03 PM, Blogger ஜோ/Joe said...

சிறில்,
நம்ம ஊருல கல்யாணத்துக்கு முந்திய நாள் மாப்பிள்ளை வீட்டு விருந்தில் போடும் 'புரோட்டா,இறச்சி' பற்றி ஒரு பதிவே போடலாம்

 
At 11:52 PM, Blogger Unknown said...

சிறில் அய்யோ.. கலக்கிறிங்க போங்க., இவ்வளவு நாள் எங்க இருந்திங்க?.,

//செம்மீனின், 'பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே கண்ணாளே' மனதில் ஒலிக்கிறது.//
அட இதிலயும் மீனுதானா?.

//உயிரைப்பணயம் வைத்து, மின்சாரக் கம்பியில் கொக்கி போட்டு மின்னிணைப்பு பெறுவதில் இந்த ரேடியோ செட்காரர்கள் நிபுணர்கள். சில திருமணங்களுக்கும் அப்படியே மின்சாரம் பெறப்படும்//
எல்லா ஊர்லயும் பாவம் இவங்க இப்படித்தான் இருப்பாங்க போல?.

//இந்தப் பந்தல்களில் சீட்டாடுவது ஆண்களுக்கு பொழுது போக்கு. சிலநேரங்களில் இந்த விளையாட்டுக்களில் எழும் சண்டைகளில் கல்யாணங்களே நின்றுபோகும்போலத் தோன்றும்//.
அட., இதிலயும் எங்க பக்கம் மாதிரித்தான்., ஆனா சண்டை நடக்கத்தான் செய்யும்., குத்துப் பட்டு ஒழுகுகிற ரத்ததோட மணமக்களை ஆசிர்வதித்த ஆளை நான் பார்த்திருக்கிறேன்.

//தலையில் 'ரீத்' எனப்படும் ஒரு அலங்காரமும்//
இந்த ரீத்தால என் தோழியின் திருமணம் ஒன்றில் நடந்த கதை நினைவுக்கு வருகிறது.

//இதில் மேலுள்ள சின்ன வட்டம் மட்டும்தான் கேக் என்பதை பின்னொருநாள் ஏமாற்றத்தோடு தெரிந்துகொண்டேன்//
ஹா! ஹா!!

//ஊர் பெருசுகள் சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்தி பேச விளைவார்கள். நண்பர்களின் வாழ்த்து மடல் சட்டம்(Fரமெ) போடப்பட்டு வாசிக்கப்படும்//.
வழி நெடுக ஒட்டப்படும் போஸ்டர் அங்க இல்லையா?

//இன்னும் சில திருமணங்கள் இப்படி தெருமணக்க, ஊர்மணக்க நடைபெறுகின்றன//.
கலக்கல் பதிவு!!. மதி., சீக்கிரம் இவர நட்சத்திரமாக்குங்கப்பா.... மனம் நிறையச் செய்த பதிவு. நன்றி. நண்பரே.

 
At 4:26 AM, Blogger மணியன் said...

நான் கேரளாவில் சில திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு திருமணம் தேவாலயத்தில் நடைபெறும். பிறகு அவர்கள் வீட்டுபக்கத்தில் நீங்கள் கூறியதைப் போல பந்தலில் புது மணமக்களை வரவேற்று கேக் வெட்டுவார்கள். குழந்தைகள் பாட்டு, நடனம் நடக்கும்.

 
At 7:14 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜோ, ஒவ்வொரு தடவையும் நான் விட்டத அழகாப் பிடிக்கிறீங்க.

ப்ரோட்டா இறச்சி..ம்..ம்

மணியன்... உண்மை, கேரளாவிற்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் கலாச்சார ஒற்றுமைகள் சில உண்டு. முக்கியமாக கேரளாவின் தெற்குப்பகுதி.

அப்டிப்போடு...
ரெம்பநன்றி உங்கள் பாராட்டுக்கு... இந்தத்தொடர எப்பவோமுடிச்சிருப்பேன் உங்களப் போன்றவர்களின் பின்னூட்டங்கள்தான் நான் தொடர ஊக்கமளிக்கின்றன.

நன்றி..- ஆமா..ஔடுத்தது எதப்பத்தி எழுத?

 
At 7:36 AM, Blogger Unknown said...

//அடுத்தது எதப்பத்தி எழுத?//

அடுத்தது கடல் மேல் வாழ்க்கையைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள். கரையைப் பற்றி இன்னும் கூட எழுதலாம் இல்லை?., கடல் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று., ஏனெனில் கடல் எங்கள் ஊரில் (திருச்சியில்) இல்லை., காவிரிக் கரையில் வாழும் வாழ்க்கையே இவ்வளவு சுகமாக இருக்கிறதே (தோழிகள் வீடு செல்லும் போது!!)., கடல் புறத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என எண்ணிக் கொள்வேன். கரிப்பு மணியுடன்(உப்பு)., கண்ணீர் துளி சேர்த்து வாழும் திருச்செந்தூரில் உள்ளது போன்ற கடல்புறங்கள் ஒரு முகமென்றால்., கட்டுக்கடங்காத சுதந்திரத்துடன் கரையா உப்பாய் வாழும் நாகை, கன்னியாகுமரி கடல்புறங்கள் இன்னொரு முகம். சிலவிடங்களில் வறுமை பொதுச் சொத்துதான் என்றாலும் எந்த அவசர உலக ஆட்படுத்தலுக்கும் பணியாது., எதிர்வரும் புதுக்காற்றை ஈரமுடம் சுவாசிக்க கொடுத்துவைத்த அந்த வாழ்க்கையினும் மேம்பட்ட வாழ்க்கையொன்று உண்டா?. சுனாமி வந்து இக்கருத்துகளை அசைத்துப் பார்த்தாலும்., வாழ்ந்துதான் பார்க்க வேண்டும் கடல்புறத்தில் சில காலம்.

 
At 8:23 AM, Anonymous Anonymous said...

ungal pathivugal suvarasyamaai ullathu...
thodarnthu kallakungal...engal appa patti urril moii kodukathavarkalai mikela
announce seithu moii koduthu sellumara kuruvar...antha urr muluvatham ethu kekkum.....
nenakavai siripa varuthu...
kalakal pathivukal....
valthukal!

 
At 9:27 AM, Blogger ஜோ/Joe said...

//சுனாமி வந்து இக்கருத்துகளை அசைத்துப் பார்த்தாலும்., வாழ்ந்துதான் பார்க்க வேண்டும் கடல்புறத்தில் சில காலம்.//
வாங்க!வாங்க! நான் வளர்ந்த வீடு கடலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில்..இப்போது தான் 500 மீட்டர் தூரத்தில் வேறு வீடு .சுனாமிக்கு பின்னும் அதை விட்டு நகருவதாக இல்லை.

 
At 9:32 AM, Blogger ஜோ/Joe said...

அப்படிப்போடு,
என்னுடைய பழைய பதிவு கடற்கரை மணலில் M.G.R படம் படித்தீர்களா? உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

 
At 9:34 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

காவியன் என்ன சொல்றாருன்னா..

//உங்கள் பதிவுகள் சுவரஸ்யமாய் உள்ளது...
தொடர்ந்து கலக்குங்கள்...எஙள் அப்பா பாட்டி ஊரில் மொய் கொடுக்காதவர்களை மைக்ல
அனவுன்ஸ் செய்து மொய் கொடுத்து செல்லுமாறு கூறுவர்...அந்த ஊர் முழுவதும் இது கேக்கும்.....
நினைகவே சிரிப்பா வருது...
கலகல் பதிவுகள்....
வழ்த்துகள்!//


நன்றி காவ்யன்.

 
At 9:35 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அப்படிப்போடு..கடல்மேல் வாழ்க்கைபற்றிய பதிவு உங்களுக்காக விரைவில்.

 

Post a Comment

<< Home