அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

அலைகள் ஓய்கின்றன

மிகுந்த சந்தேகங்களுடன் இந்த வலைப்பதிவு தொடரை ஆரம்பித்தேன். என் மனைவியின் ஊக்கமே என்னைத் தொடர வைத்தது. கூடவே ஜோ, மஞ்சூர் ராசா, ரெஜினி ராம்கி போன்றோரின் வாழ்த்துக்கள், மற்றும் செயமோகன் அவர்களின் மின்னஞ்சல், தினமலர்வரை கொண்டுசென்றது. சில நேரங்களில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தபோதெல்லாம் யாராவது ஒருவர் ஒரு டானிக் பின்னூட்டம் போட்டுவிடுவார்.

மதி கந்தசாமியின் திறனாய்வு மறக்கமுடியாதது. அப்படிப்போடுவின் 'இவரை நட்சத்திரமாக்குங்கள்' எனும் கோஷம், வசந்தன், தாணு, ராகவன், கைப்புள்ள, பி.கே.எஸ், டி.பி.ஆர். ஜோசஃப், மாயவரத்தான், ஜான், கிறுக்கன், மணியன், சந்தோஷ், ராமச்சந்திரன் உஷா, காவியன், மகெஸ், தங்கமணீ, குமரன் ஆகியோரின் பின்னூட்டங்கள்... அல்ல சத்தூட்டங்கள், என்னை மேலும் எழுதத் தூண்டின. சீமாச்சு மீனே சாப்பிடாதவரானாலும் மீன் பற்றிய பதிவுக்கு பாராட்டளித்திருந்தார். எல்லோருக்கும் நன்றி.

வலைப்பதிவு எழுதுவது கடல் நடுவே தீவில் சிக்கித் தவிப்பது போன்றதொரு அனுபவம். யாராவது வந்து அங்கீகரிக்கும்வரை தனிமையும் வெறுமையும்தான். பின்னூட்டங்களின் மகிமை அதைப் பெறும்வரை புரிவதில்லை.

தமிழிலில் என் முதல் முயற்சி இது. ஆங்கிலத்தில் எழுதி பழக்கப்பட்டிருந்தேன். ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேனோ ஓரளவு அப்படியே தமிழிலும் எழுதினேன், இதுவே என் நடை நன்றாயிருக்கிரது என்கிற பாராட்டுக்களுக்கு காரணமாகலாம் என நினைக்கிறேன். திமிழிலக்கணம் படித்து வருடங்களாயிற்று, என் பதிவில் காணக்கிடைக்கும் இலக்கண, எழுத்துப்பிழைகளுக்காய் தமிழ்த்தாயிடமும், வாசகர்களிடமும், என் தமிழாசிரியர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகளை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன். ஒரு அத்தியாத்திற்குப்பிறகு நாவல் எழுதுவது ஒரு மிகப்பெரும் முயற்சியாகப் பட்டது. மனதிலுள்ளது அந்த எழுதப்படாத நாவலின் கதை. இன்னும் சில தகவல்கள் சேகரித்து இந்தப்பதிவை ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம்... விரைவில் இதற்கான முயற்சி துவங்கும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா பொகிறவர்கள் முட்டத்திற்கும் போகலாம். நாகர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து (வடசேரி அல்ல), முட்டம் மற்றும் கடியபட்டினத்திற்கு பஸ்கள் உள்ளன. கடிய பட்டினம் செல்லும் எல்ல பஸ்களும் முட்டம் செல்வதில்லை. லைட் ஹவுஸ் வந்ததும் இறங்கினால் மேற்கில் அழகிய கடற்கரை காணலாம். கோவில் லைட் ஹவுசிலிருந்து கிழக்கில் தெரியும்.

முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம்.

என் நினைவுப் பயணங்களில் என்னோடு பயணித்தமைக்கு நன்றி.

தொடர்ந்து தேனில் பதிக்கிறேன். பைபிள் கதைகள் தொடர் விரைவில் ஆரம்பம்.

Labels:

XVII. சக்கரத்தை கண்டுபிடித்தவன்

உருளும் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது மனித நாகரீகங்களின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டது. கால்நடையாக முன்னேறிக்கொண்டிருந்த மனிதர்கள் சக்கரம் மாட்டிக்கொண்டு பறந்தனர். இன்றும் போக்குவரத்து முன்னேற முன்னேற பட்டி தொட்டிகளும் பட்டணங்களாகிவருவதை காணலாம்.

முட்டமும் வெகுவாக மாறியிருக்கிறது. என் பதிவுகளில் வந்த பல பழக்கங்களும் இப்பொது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

திருமணங்கள் அதிகமாக மண்டபங்களிலேயே நடத்தப்படுகின்றன, சைக்கிள்களுக்குப் பதில் பைக்களும், கார்களும். ஒருமணி நேரம் பஸுக்காய் காத்திருந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறி பக்கத்து ஊருக்குப்போய் பஸ் பிடித்துக் கொள்கிறார்கள். ஊருக்குள்ளே ரோடுபோட்டு பஸ் ஓட ஆரம்பித்திருக்கிறது.


பொறியியல் முதல் பொருளாதாரம்வரை படித்தவர்கள் ஏராளம். கட்டுமரங்களுக்குப்பதில் விசைப்படகுகள். இன்னும் என்னென்னவோ மாற்றங்கள்.

சுற்றுலா என்ற பெயரில் முட்டம் கடற்கரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன ஓரளவுக்கு கடற்கரையின் அழகு குறைக்கப்பட்டாலும் இவை பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் என நினைத்து சாந்தப்படவேண்டியுள்ளது.

ஊரில் சண்டை சச்சரவுகள் குறைந்திருக்கிறது. பொருளாதாரம் விளங்கியிருக்கிறது. குடிசைகள் மாறி ஓட்டுவீடுகளாகி, மாடி வீடுகளாகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

போக்குவரத்து அதிகமான தெருக்களில் பிள்ளைகளின் விளையாட்டு எப்படி? அவர்களும் கேபிள் டி.வியின் முன்னமர்ந்து நிழல் வாழ்க்கையில் ஐக்கியமாகிறார்கள்.

இன்னும் எத்தனையோ மாற்றங்கள். அலைகள் பாறைகள் மணல்மேடுகளை தொடர்ந்து வாசிப்பவரானால் உங்களுக்குள் ஒரு கற்பனை முட்டம் வரந்து வைத்திருப்பீர்கள். இந்தப்பதிவு அதை கலைத்திருக்கலாம். இதுதான் நிதர்சனம், வாழ்க்கையின் பேருண்மை.

அழிக்கும் கடவுள் சிவன், அவன் பெயரின் அர்த்தம் 'மங்கலம்'. கொல்லும் கடவுளுக்கு 'மங்கலம்' என ஏன் பெயர். அவர் பழையதை அழிப்பதால்தான் புதியன உருவாகின்றன.

தாகூரின் கீதஞ்சலியில் வரும் பாடல் படித்திருப்பீர்கள்,

"எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,

செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,

எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்

அழைத்துச்செல்லப்படுகிறதோ..

அந்த சொர்க்கத்தில் இறைவா, என் நாட்டை எழச்செய்"

பழையன அழியும்போது சில முனகல்கள் தவிர்க்க இயலாது. நானும் என் பங்கிற்கு முனகியிருக்கிறேன். புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்.

புதுமை வளரட்டும். பழமை, நம் நினவுகளில், புத்தகத்தில் போட்டுவைத்த ரோஜாப்பூப்போல, வாடினாலும் வாசத்தோடு வாழட்டும்.

அந்த சக்கரத்தை காண்டுபிடித்தவனை மட்டும் அப்புறமா கவனிச்சுக்க வேண்டியதுதான்.

Labels:

XVI. ஆழி என்றொரு உலகம்

பூமியின் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். கடல்தான் பூமியில் பெரும்பங்கு. பொதுவாக இந்தக்கடலிலிருந்து மீன் மட்டும்தான் கிடைக்கிறது என நினைக்கிறோம். பள்ளிக்கூடத்தில் 'கடல்நீர் ஆவியாகி மேகமாகி இடி இடித்து மழை பெய்யும்' பாடம் பயின்றதை மறந்துவிடுகிறோம்.

கடலில்லாது பூமி உயிர்வாழத் தகுதியற்றதயிருந்திருக்கும். கடலில்தான் உயிர் விளைந்தது என்கிறது பரிணாம தத்துவம்.

முட்டத்தில் கடற்கரையில், பாறையொன்றில் அமர்ந்து தியானித்துப்பாருங்கள். ஆழி சென்று அறிவு பெற்றுத் திரும்பும் அந்தக் கடல் காற்று உயிரின் இரகசியங்களை உங்களுக்குச் சொல்லும். இன்னொரு விவேகானந்தனாக மாறிப்போகவும் வாய்ப்புள்ளது.

இந்தக் கடல்மேல் பயணிப்பது ஆத்மார்த்த அனுபவம்.

விசைப்படகொன்றில் ஒருநாள் கடலினுள், வெகுதூரம் பயணித்தோம். முதலில் அலைகள் படகை ஆட்டிவைக்கின்றன. இயந்திரங்கள் உயிர் பெற்றதும் இயற்கை சற்றே சிறுத்துப்போகிறது.

கடலுள்ளே செல்லச் செல்ல நிலம் மறைகிறது. சில வீடுகள் கண்ணுக்குத்தெரிகின்றன, ஒர் தெருவே தெரிகிறது, சில தெருக்கள் தெரிகின்றன, ஊரே தெரிகிறது, சில ஊர்கள் தெரிகின்றன...வெறும் கடல்தான் தெரிகிறது.

எங்கு பார்த்தாலும் நீலம். வெறும் கடலும் வானமும் மட்டுமே உலகில் உள்ளதைப்போன்றதொரு மாயம்.

அலைகள் இருபுறமும் கொட்டைச் சுவர்கள் போல எழுகின்றன. நடுவில் தொலைந்துபோனவர்கள்போல நாங்கள். பின்பு அலை தாழ்ந்துபோகிறது, மீண்டும் முன்னும் பின்னும் சுவர்போலெழுகிறது.

கடல்நீரின் தெளிவு கொஞ்சம் உள்ளே போனால்தான் தெரிகிறது. நீரில் ஓடும் மீன்களை வெறும் கண்கொண்டு பார்க்கலாம். இதற்கென மீனவர்கள் ஒரு கண்ணாடியும் வைத்துள்ளனர். தெளிந்த நீல நீரில் சூரியனின் ஒளிக்கோலங்களூடே நீந்தும் மீன்கள் காணப் புதுமை. உலகின் மொத்த அழுக்கையும் தாங்கிக்கொள்ளும் புனிதம் பெற்ற இந்தக்கடல் தன்னை தூய்மையாய் வைத்திருப்பது வியப்பு.

எங்கள் பயணம் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம். முட்டத்தின் கடற்கரையிலிருந்து கடலினுள் காணக்கிடைக்கும் மேக்கால், கீக்கால் பாறைகளை சுற்றிவந்தோம். இந்தப் பாறைகளின் அருகில் வெளிர் நீல வண்ணத்தில் நீர் காணப்படுகிறது. இந்தப் பாறைகளிலிருந்து மீன் பிடித்துத் தின்னும் கடல் நாரைகளும் பார்க்கமுடிந்தது.

'போங்கடா நீங்களும் ஒங்க ஒலகமும்' என்று இவை நம்மை விட்டு கடலுக்குள் வெகுதூரம் வந்து வாழ்கின்றன.

கடற்கரையில் கடல்நீரின் தெளிவை காண முடிவதில்லை. அலைகள் கலங்கியபடி காணப்படுவதற்கு நீரில் மணல் சேர்ந்து கொள்வதே காரணம்.

ஊரில் இருந்தவரை வருடத்திற்கு இரண்டு முறையாவது கடலில் குளித்துவிடுவோம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நாட்களில். ஒரு பொங்கல் நாளில் ஒரு பாறையின் கீழ் பொங்கலிட்டு உண்டுவிட்டு கடல் குளித்த ஞாபகம் இருக்கிறது.

மீன் வெட்டியதில் கழித்தவற்றை எடுத்து ஒரு துணியிலோ சின்ன, கைக்குட்டையளவு வலையிலோ கட்டி கரையில் நீருக்குள் கிடக்கும் பாறைகளருகே தூண்டில்போல போட்டு நண்டு பிடித்திருக்கிறோம். நீங்களும் செய்துபார்க்கலாம்.

இந்த நண்டுகள் விரலைத் துண்டிக்குமளவுக்கு கடிக்கும் திறனுடையவையாகையால் கவனம் தேவை.

முட்டம் போன்ற அலைமிகுந்த கடலில் குளிப்பதற்கு குறைந்தபட்சம் நீச்சலாவது தெரிந்திருக்கவேண்டும். சென்னை போல கரையில் குளிக்க விரும்புபவர்கள் குளிப்பதற்கான ஒரு கடல்நீர் நீச்சல் குளம் இயற்ககயே உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி கடற்கரையிலியங்கும் படகு கட்டும் இடத்திற்கு தெற்கேயுள்ளது.

அலைகள் அதிகமிருக்கும் நாட்களில் இங்குகூட குளிக்கமுடியாமல் போய்விடும்.

அலைகளை தவிர்க்க முடிந்தவரை கடலின் தரைப்பகுதி நோக்கி மூழ்கவேண்டும். அலைகள் கடலின் மேற்பரப்பிலேயே வேகமாய் வருகின்றன. ட்சுனாம்மி இதற்கு நேரெதிர், கடலின் மேல்மட்டம் அமைதியாக இருக்கும் ஆனால் அடிதளத்தை ஒட்டி ஆழிப்பேரலை வந்து கொண்டிருக்கும்.

அலைகளில்லாத சென்னைபோன்ற கடற்கரயில் கடல் குளிப்பது எளிதானதாகத் தோன்றும். நிஜத்தில் அமைதியான கடலுக்குள், அடியில் நீரோட்டங்கள் பல உள்ளன. இவற்றில் மாட்டுவது உயிர்மாய்க்கும் ஆபத்து.

வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தும், பூமியில் கடலைப்பார்த்தும் நம் சிறுமையை உணர்ந்துகொள்ளலாம். ஏதோ படைப்பின் சிகரெமே நாம்தான் என எண்ணிக்கொள்ளும் மனிதன் வெறும் ஒருசெல் உயிரிமுதல் குட்டிபோட்டு பால் தரும் உயிரினம் வரை வாழும் ஆழிஎன்றொரு உலகமுள்ளதை மறந்துவிட்டிருக்கிறான்.

தனித்திருந்து கடலை நோக்குவதும், இரவில் மொட்டைமாடியில் வானத்தை நோக்குவதும் ஏன் சுவைக்கிறது என்பது இப்பொது புரிகிறதா? நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் அந்தத் தருணங்கள் தத்துவார்த்தமானவை.

Labels:

XV. அப்பாவா? மாமாவா?

சொந்த ஊரைவிட்டு வெளியேறிப் போவது எத்தனை சோகமான அனுபவம் என்பது நம்மில் பலருக்கும் பழக்கமானது. எத்தனை சுகங்களை இழக்க நேரிடுகிறது? எத்தனை ஞாபகங்களை களையவேண்டியுள்ளது? எத்தனை மனிதர்களை மறக்கவேண்டியுள்ளது? இதிலும் நம் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு நாம் மட்டும் போகவேண்டுமென்றால்?!

நம்மூர் மீனவர்களுக்கு மத்திய கிழக்கு (வளைகுடா) நாடுகளில் வேலை கிடைக்கிறது. செல்வம் தேடி போகும் இவர்களின் சோகங்கள் பல.

குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 2 அல்லது 3 மாத விடுமுறை. இதில் ஊருக்கு வந்து கல்யாணம், காதுகுத்து, கருமாதி என எல்லா கடமைகளும் நிறைவேற்றிவிட்டுப் போகவேண்டும்.

இப்படி திருமணமாகி ஒரு மாதத்திலேயே மனைவியை விட்டுவிட்டுச்செல்லும் இளைஞர்கள் எத்தனையோபேர். அடுத்த மாதம் புதுப்பெண் கருத்தரித்திருப்பது கடிதம் மூலம் (முன்பெல்லாம் ஊரில் தொலைபேசி இல்லை) தெரிவிக்கப்படும். பின்பு அவர் பதில்கடிதம் வந்து சேருமுன் இந்தப்பெண் தாய் வீட்டுக்குப்போய், குழந்தையும் பெற்றெடுத்துவிடுவார்.

தந்தைமுகம் பார்க்காமலேயே இந்தக் குழந்தை வளரும். குழந்தைக்கு ஒருவயது முடிந்தபின் தந்தை வந்து பார்த்துவிட்டு, பாரின் பொம்மைகளும் இனிப்புகளும், பொம்மை படம்போட்ட பனிய்ன்களும் கொடுத்துவிட்டு திரும்பப்போய்விடுவார். அடுத்தமுறை இவர் ஊர் வரும்போது. இது அப்பாவா மாமாவா என இந்தப் பிள்ளைக்கு சந்தேகம் பிறக்கும்.

நான் சிறுவனாக இருந்தபோது முட்டத்தில் தனியாரிடத்தில் தொலைபேசி ஒன்றிரண்டுதானிருக்கும். கடிதங்கள் ஊரிலிருந்து வெளிநாடு போகிறவர்கள் எடுத்துச்செல்வதும், அங்கிருந்து வருபவர்கள் கொண்டுவருவதும் வழக்கம். அப்போது ஊரில் புகைப்படம் எடுத்துவைக்கும் பழக்கம் கூடக்குறைவு. பிஞ்சுக்குழந்தைகள் தந்த்தையின் வழிகாட்டலின்றி, தந்தையை அடையாளம் காட்டக்கூட இயலாமல் வளர்வது மாபெரும் சோகம்.

ஒன்றிரண்டு லட்சம் கடன்பட்டு விசா வாங்கி வெளிநாட்டுக்குப்போய் ஒன்றுமில்லாமல் திரும்பியவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனாளிகளாகவே வாழ்ந்த கதையும் உண்டு. இதில் முதலாளியிடம் அடி உதை வாங்கி ஓடிவந்தவர்களும் அடக்கம்.

ஃபாரின் போகிறவர்கள் எல்லோருக்கும் நல்ல வருமானம் கிட்டுவதுமில்லை. கஷ்டப்பட்டு வெறும் 5 அல்லது 7 ஆயிரம் மட்டும் ஊருக்கு அனுப்புபவர்கள் பலர். கூழோ, கஞ்சியோ ஊரிலேயே பிழைப்பு நடத்துவோம் என இருப்பவர்களும் பிறரின் செல்வச் செழிப்பான வாழ்வைக்கண்டு தூண்டப்படுகின்றனர்.

என் உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருக்கும்போது இறந்துபோனார். ஊரில் இளம் மனைவி. மிகவும் கஷ்டப்பட்டு சிலநாட்களுக்குப்பின் அவரது உடல் ஊர்வந்து சேர்ந்தது, அடைக்கப்பட்ட மருத்துவப் பெட்டியில். அதைத் திறக்கவும் அனுமதியில்லை. அவரின் முகத்தைக் கூட பார்க்கமுடியாமல் கதறியவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்லக்கூடும்?

இதில் இன்னொரு சோகம், இறந்தவர் எப்படி இறந்தார் என்பது எப்போதும் மர்மமாகவே இருக்கும்.

நாகரீகம், வளர்ச்சி என்ற பெயரில் நம் தேவைகளை நாமே வளர்த்துக்கொள்கிறோம். இவற்றை நிவர்த்தி செய்ய நாம் இழப்பவைகள் விலைமதிப்பில்லாதவை.

முன்பொரு பதிவில் கேட்டதை திரும்பக் கேட்கத்தோன்றுகிறது. ஊரில் 2000 சம்பளம் வாங்குபவருக்கும் சென்னையில் 20000 வாங்குபவருக்கும் தாங்கள் பெறும் சந்தோஷத்தில் வித்தியாசமிருக்கிறதா? இந்த சந்தோஷங்களை நாம் பெற்றுக்கொள்ளும் முறை வேண்டுமானால் வித்தியாசப்படலாம்.

பணத்திற்காக பாசத்தையும், தனத்திற்க்காக தாம்பத்யத்தையும், பொருட்செல்வத்திற்காக பிள்ளை செல்வத்தையும் தியாகம் செய்வதா?

என் உறவினர் இன்னொருவர், திருமணமாவதற்குமுன் வெளிநாடு போயிருந்தார். இப்போது அவர் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இன்றுவரை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்து போகிறார். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்களின் விறுப்பு வெறுப்புகளையும், அந்தப் பெண்கள் செய்யும் தியாகத்தையும் யாரும் எண்ணுவதில்லை? இவ்வளவு வருமானம் பார்த்தவருக்கு ஊரில் வந்து என்ன செய்வது என்பதே புதிராயிருக்கிறது.

பல நேரங்களில் குடும்பத்தில் சுக துக்கங்களில் இவர்களால் பங்குகொள்ள முடியாமல் போகிறது. பலரும் குடும்ப சுமைகளை ஏற்கத் தயங்கி திரும்பிச் செல்கிறார்கள்.

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?'

Labels:

XIV. ஏட்டுச்சுறாமீன்

கடற்கரையில், நிழலில் படுத்துக்கிடக்கும் மீனவனைப் பார்த்து சுற்றிப்பார்க்க வந்த ஒரு பணக்காரர் கேட்கிறார்

"ஏம்பா, தொழிலுக்கு போகல?"

"போயிட்டு வந்துட்டேனே", மீனவன்

"சும்மா படுத்துட்டிருக்கியே இன்னொருவாட்டி கடலுக்கு போயி மீன் பிடிச்சா என்ன?"

"அப்படி செஞ்சா?"

"அதிகமா பணம் கெடைக்கும்"

"அதிக பணம் வந்தா?"

"இன்னும் ரெண்டு மூணு போட் வாங்கலாம். தொழில பெருக்கலாம்."

"தொழில பெருக்குனா?"

"பணக்காரனாயிடலாம்."

"பணக்காரனாயிட்டா?"

"நல்லா படுத்து ஓய்வெடுக்கலாம்."

"இப்ப மட்டும் என்ன செய்றேனாம்."

இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். இதை ஏன் மீனவனை நாயகனாக வைத்துச் சொல்கிறார்கள்? மீனவர்கள் பொதுவாக செல்வம் சேர்ப்பது பற்றிய கவலையில்லாதவர்களாயிருந்தனர். நாளை பற்றிய கவலை இருந்தால் அலைக்களிக்கும் கடலலைகளினூடே தொழில் செய்யப் போகமுடியுமா?

குறைந்தபட்சத் தேவைகளே இருந்தன அவர்களுக்கு. கடற்கரைகளில் வங்கிகளே இருந்ததில்லை. சேமிப்பு? எதை நோக்கி சேமிப்பது. தொழில் செய்யக் கருவிகளிருந்தாலே போதுமானதாயிருந்தது.

சில பருவங்களில், இரால் அதிகமாகக் கிடைக்கும் போது கொஞ்சம் பணம் சேரும். மீன்பாடில்லாத அடுத்த பருவங்களில் அது கரைந்து போகும்.

வாழ்க்கையை அனுபவிக்க மறந்ததில்லை இவர்கள். மது, புகை, வெற்றிலை என ஏதாவது ஒரு பழக்கம் பலரிடமிருந்தது. மூக்குப்பொடி வைத்திருக்கும் ஒரு மாமாவிடம் அவ்வப்போது வாங்கி தும்மிக்கொள்வேன். முகுது சொறிவது, மூக்குப்பொடிபோட்டுத் தும்முவது, டவல் நுனியை சுருட்டி காது குடைவது போன்ற சிற்றின்பங்கள் நிறைந்ததுதான் சொர்க்கம் போலும்!

சினிமா முக்கியமான பொழுதுபோக்கு. கடன்வாங்கியாவது திருநாள் கொண்டாடுவதென்பது ஒரு எழுதப்படாத சட்டம். செலவு செய்யத் தயக்கமென்பதே இல்லை.

என் நண்பர் ஒருவர் எப்போதும் குறையாகச்சொல்வார்,"ஏன் இந்த சாமியார்கள்(பாதிரியார்கள்) இந்த மீனவ மக்களுக்கு சேமிக்கச் சொல்லித்த்ருவதில்லை?" என்று. முதலில் கூறிய கதைதான் பதிலாகுமென நினைக்கிறேன். பணம் சேரச் சேர நாம் மேலும் மேலும் ஆசைப்படுகிறோமென்பதுதான் உண்மை.

மீனவர்களை படிக்காதவர்கள் என எடைபோடும் பலர் உண்டு. இது முற்றிலும் பொய். குறைந்தபட்சம் எழுத படிக்கத்தெரிந்தவர்கள் மீனவர்கள். ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள் அதிகம். பெண்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது படிக்கிறார்கள். படிப்பறிவு கன்னியா குமரி மாவட்டத்தில் அதிகம். கேரளாவின் தாக்கமோ என்னவோ?

மேல் படிப்புக்கு வெளியூர் போகத்தான் வேண்டும். பலர் நாகர்கோவிலில் சென்று படிப்பதுண்டு. நான் நாகர்கோவிலில் 'கார்மல் மெனிலைப் பள்ளியில்'.

பஸ்ஸில் பள்ளி செல்வது தனி அனுபவம். எங்களோடே மீன் வியாபாரத்துக்குச் செல்லும் பெண்களும் பஸ்ஸில் பயணிப்பதுண்டு. பஸ்ஸே மண மணக்கும். யாராவது குறைசொன்னால், "இவரு பெரிய பிராமணரு" என்ற பதில்தான் கிடைக்கும்.

இந்த பஸ் பயணங்களில் பேசப்படும் காதல் கோர்ப்புக் கதைகளும், விழி சம்பாஷணைகளும், "நான் அந்த பொண்ண சைடடடிக்கிறேன். ஒன் ஆளு யாருடா?" போன்ற வினவல்களும் ஒரு தனி ஆட்டொகிரஃப் அனுபவம்.

கார்மல் பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் தரும் 'அடி'க்குப் பேர் போனது. அடி கொடுத்தே படிக்கவைக்கும் ஆசிரியர்கள் பலர். மாணவர்கள் சும்மாவா? கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுக்கும், சகிக்கவே முடியாத, பட்டப்பெயர்கள்.

குண்டான மொழு மொழு வாத்தியாருக்கு பெயர் 'தக்காளி'

எப்போதும் நேர்த்தியாய் ஆடை அணிந்து, ஒல்லியானவர் 'பொம்மை'

கறுப்பாய் ஒருவர் 'நீக்ரோ'

தத்துவமாய் பேசும் 'சாக்ரட்டீஸ்'

குனியவிட்டு பிடரியில் அடிக்கும் 'பண்ணி மேய்ச்சான்'

வேட்டிமட்டுமே கட்டிக்கொள்ளும் 'கொத்தனார்'

குள்ளமாய் ஒரு 'கட்டபொம்மன்'. எனப் பட்டப் பெயர்கள் பலவிதம். சைக்கிளில் போகும் வாத்தியாரின் பட்டப்பெயரை கூவிவிட்டு ஓடும் மாணவர்களை துரத்தும் காட்சி காணக்கண்கோடி வேண்டும்.

பட்டப்பெயர் இல்லாத வாத்தியாரே இல்லை கார்மலில். வரலாற்று சிரப்புள்ள ஒரு பள்ளி. கடலோர மாணவர்கள் பலர் இங்கு படிப்பது வழக்கம்.

என்ன படித்தாலும் கடல் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் பலருக்கும் இருந்தது, இதனாலேயே பலர் பாதியில் படிப்பை நிறுத்தினர். கஷ்டப்பட்டு ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் வரை படித்தவர்களும் உண்டு. இருந்தும் படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதுதான்.

கிராமத்து இளைஞர்களின் சோகமே இதுதான். படி.. படி என விளம்பரங்களும் வற்புறுத்தல்களும், பிறகு வேலையில்லாமல் திண்டாடும்போது, 'தம்பி, விவசாயம் மோசமானதுன்னு ஏன் நினைக்கிறீங்க?' என்ற கேள்வி.

பெண்கள் படித்து ஆசிரியராகவோ, கிறித்துவ கன்னியராகவோ மாறுவதுண்டு. கல்லூரிவரை படித்துவிட்டு கருவாடு காயப்போடும் பெண்களும் உண்டு.

படிக்க ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக மீன்பிடிக்கப் போன நண்பர்கள் சிலரோடு நான் படித்திருக்கிறேன். இவர்கள் ஏக்கமாக, கனவுகளை களைந்துவிட்டு விடைபெறுவது ஒரு மாபெரும் சோகம். மாறாக பள்ளிக்குப் போகமாட்டேன் என அடம்பிடித்து கடல்தொழிலுக்கு, சிறுவயதுமுதலே செல்லும் மாணவமணிகளும் உண்டு.

ஏட்டுச் சுறாமீன் புட்டுக்குதவாது என்பது இவர்களின் வாதம்.

Labels:

XIII. அழைக்கப்பட்ட நண்பர்கள்

முன்பெல்லாம் முட்டத்தில் திருமணங்கள் வீட்டிலேயே நடத்தப்பட்டன. நாகர்கோவிலில்தான் மண்டப வசதி இருந்தது, அந்தச் செலவுகளும் அலைச்சலும் எல்லோருக்கும் சாத்தியமாகாததால் ஊரிலேயே திருமணம்.

வீட்டிற்குமுன், தெருவை அடைத்துக்கொண்டு பந்தல் போடப்படும். ஒரு வாரத்திற்கு, தெருவில் போக்குவரத்து அடைபடும். கடல் மணல், பந்தலின் உள் பரப்பட்டிருக்கும். இந்தப் பந்தல்களுக்குள் ஒரு மணம் பரவும். திருமணம் முடிந்ததும் காணாமல் போய்விடும் அந்த மணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பே பந்தலில் மின்விளக்கு அலங்காரம் ஒளிரும். கொண்டை வைத்த ஒலிபரப்பி (குழல் ஒலிப்பான்) கட்டப்பட்டு முதலில் கிறித்துவப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'விண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகின்றார்', புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் பொதுவாக முதற் பாடல்.

இசைத்தட்டுகள்தான் அப்போது. சின்னதாகவும் பெரியதாகவும் கறுப்புத் தட்டுகள், சில சிவப்புதட்டுகளும் உண்டு. தட்டுக்கள் சுழலும்போது தூசியிலோ கீறலிலோ சிக்கித் தவிக்கும் பாடல்கள் பல. இப்படி சிக்கிய ஒலியுணர் முள்ளைத்தூக்கி அடுத்த வரியில் போடுவது ஒரு கலை. கொஞ்சம் தவறினாலும் பாடல் பல வரிகள் கடந்துவிடும்.

குர்பானி முதல் குடியிருந்த கோவில் வரை பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எம். ஜி. ஆர் ரசிகர்கள் அதிகமாயிருந்ததால் வாத்தியார் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் திருமணங்களும் உண்டு. சிலநேரம் மலையாளப் பாடல்கள் ஒலிப்பதும் உண்டு. செம்மீனின், 'பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே கண்ணாளே' மனதில் ஒலிக்கிறது.

கல்யாணப்பந்தலருகே சிறுவர்கள் விளையாட்டு எப்போதும் நடக்கும். பாடல்களுக்கு நளினம் பிடிப்பது இவர்களின் இரவுநேரத்துப் பொழுதுபோக்கு.

உயிரைப்பணயம் வைத்து, மின்சாரக் கம்பியில் கொக்கி போட்டு மின்னிணைப்பு பெறுவதில் இந்த ரேடியோ செட்காரர்கள் நிபுணர்கள். சில திருமணங்களுக்கும் அப்படியே மின்சாரம் பெறப்படும்.

இந்தப் பந்தல்களில் சீட்டாடுவது ஆண்களுக்கு பொழுது போக்கு. சிலநேரங்களில் இந்த விளையாட்டுக்களில் எழும் சண்டைகளில் கல்யாணங்களே நின்றுபோகும்போலத் தோன்றும்.

சினிமாவில் வருவதுபோல மணப்பெண் கவுனெல்லாம் உடுப்பதில்லை. பட்டுச் சேலை காற்றாடத்தான் கல்யாணம். தலையில் 'ரீத்' எனப்படும் ஒரு அலங்காரமும், தலை துவங்கி பின்புறம் கீழாக வலைபோன்ற துணியில் ஒரு அலங்காரமும் செய்யப்படும். இந்த நீளமான 'நெட்' துணி கீழே விழாமல் பிடிக்க ஒரு வாண்டு நியமிக்கப்படும்.

மாப்பிள்ளை கோட் சூட், அல்லது பட்டு வேட்டி பட்டு சட்டை. பெண்ணின் சகோதரர் மாப்பிள்ளைக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

தங்கத்தில்தான் தாலி. பொதுவாக கன்னியாகுமரி கடரற்கரைகலில் தங்கத்தை கயிறுபோல முறுக்கி செய்யப்பட்டிருக்கும் தாலிச்செயின் பிரபலம். இந்தத் தங்கத்தாலியின் திருகாணியையோ அல்லது கொக்கியையோ மாட்டுவதற்கு ஒரு நாடகமே நடக்கும்.

திருமணத்தின்போது மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவர் மற்றவர் பேரைச்சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

"ஜோசப் ஆகிய நான் மேரியாகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும், நோயிலும் ...உனக்கு பிரமாணிக்கமாயிருப்பேன் என வாக்குறுதியளிக்கிறேன்" எனும் பொருள்பட ஒரு ஒப்பந்தம் வாசிக்கப்படுகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணும், இரு சாட்சிகளும், திருமணம் செய்து வைத்த பாதிரியாரும் கையொப்பமிட்டு திருமணங்கள் கோவில்களில் பதிவு செய்யப்படுகின்றன.

திருமண பூசை முடிந்தபின் 'பேண்ட் வாத்திய'க் குழு இசை ஆரவாரங்களோடு பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். புதிதாய் வரும் மணப்பெண்ணை வரவேர்க்க 'மணமகளே மருமகளே வா வா' பாடல் போடப்படும்.

கல்யாணப்பந்தலில், கீழே பெஞ்களைப் பரப்பி, சேலைகளைத் தொடுத்து மேடை அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேசையில் சர்கரை அலங்காரத்தில் கல்யாண கேக் ஜொலிக்கும். கீழே பெரிதாய் துவங்கி மேலே சிறித்தாய் மூன்று முதல் நான்கு தட்டுகளில் கேக் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதில் மேலுள்ள சின்ன வட்டம் மட்டும்தான் கேக் என்பதை பின்னொருநாள் ஏமாற்றத்தோடு தெரிந்துகொண்டேன்.

கேக்கை மந்திரித்து பாதிரியார் புதுத்தம்பதியரை வாழ்த்துவது முடிந்ததும் தம்பதிகள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டுவது வழக்கம். கேக் வெட்டியதும் பந்தலில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேக்கும் பழரசமும் வழங்கப்படும்.

ஊர் பெருசுகள் சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்தி பேச விளைவார்கள். நண்பர்களின் வாழ்த்து மடல் சட்டம்(Frame) போடப்பட்டு வாசிக்கப்படும். இது துண்டுப் பிரசுரமக வினியோகிக்கப்படுவதும் ஊண்டு. தோழிகளின் பாட்டு, குழந்தைகளின் ஆட்டம் என திருமண வரவெற்பு நடந்துகொண்டிருக்கும்போதே முதல் பந்தி துவங்கும்.

பிரியாணி பிரபலாமவதற்குமுன்பு சாப்பாடுதான் விளம்ப்பப்பட்டது. கேரள மணம் வீசும் கல்யாணச்சாப்பாடு.

தேங்காய் போட்ட பருப்புக்குளம்போடு துவங்கும் பந்தி. இதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்பதுமுண்டு. அடுத்து சாம்பார், ரசம் மோர் எனத் தொடரும். பருப்பும், பயறும் போட்ட பாயாசம் அல்லது சேமியா அல்லது அடை பாயாசம். பாயாசத்தில் பழத்தைப்பிழிந்து இலையை வழித்து நக்கினால்தான் திருமணச்சாப்பாடு நிறைவுபெறும். மணக்கும் மலையாள அவியல் இல்லாமல் இருக்காது இந்த சாப்பட்டில். தேங்காயில்லாத பதார்த்தம் ஊறுகாய் மட்டும்தான்.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு முகச்சவரம் செய்யும் சடங்கு நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுச்சாப்பாடு போடப்படும். ஏற்கனவே சவரம் செய்யப்பட்ட மணமகன் முகத்தில் பால் தடவி சவரம் செய்வது போல நடக்கும் ஒரு சடங்கு. 'முகத்துவலை' (முகத்து வேலை மறுவியிருக்கிறது) என அழைக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வழக்கம் என்றே நினைக்கிறேன்.

இந்தச்சடங்கு துவங்குவதை ஒருவர் மைக் செட்டில் ஒலிபரப்புவார். கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் இதே அறிவுப்புத்தான், 'மாப்பிளைக்கு முகத்துவேலை ஆரம்பிக்க இருப்பதால்... அழைக்கப்பட்ட நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'.

இன்னும் சில திருமணங்கள் இப்படி தெருமணக்க, ஊர்மணக்க நடைபெறுகின்றன.

Labels:

முட்டம் புகைப்படங்கள் - மணல்மேடுகள் - II

இந்த நிழற்பட இடைவெளிக்குப்பிறகு 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' மீண்டும் தொடரும்.




Labels:

முட்டம் புகைப்படங்கள் - மணல்மேடுகள் - I

சிவந்தமண் இன்றைய படங்கள் முன்பு இந்த பள்ளங்களில் மிருதுவான மணல் நிரம்பியிருந்தது. கீழே S வடிவ ஓடையில் இருப்பது போல.

இவை ஒரு சின்ன பகுதியின் படங்கள். ஊரச்சுற்றி இன்னும் அகன்ற பள்ளங்கள் உண்டு.






Labels:

முட்டம் புகைப்படங்கள் - பாறைகள்

தவளைப் பாறை





கலங்கரை விளக்கம்





இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.

Labels:

முட்டம் புகைப்படங்கள் - அலைகள்

என்னிடமிருக்கும் சில முட்டம் புகைப்படங்கள். அவசரத்தில் பதித்தவை.



'கோட்டாமடை' எனப்படும் இடம், இங்கு பல திரைப்படங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பசங்க ஏதோ விளையாடிக்கிட்டிருகாங்க.
இங்குதான் கபடி ஆடுவது வழக்கம். கடல் குளிக்க நல்ல இடம்.


இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.

Labels:

XII. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்

கத்தோலிக்க சர்ச்களை 'மாதாக் கோயில்' என்றும் பிரிவினை (Protestand) சர்ச்களை 'சிலுவைக் கோவில்' என்றும் அடையாளப்படுத்துகின்றனர் பலர். கத்தோலிக்கர்கள், போப்பின் அதிகாரத்தின் கீழ் வருபார்கள், இயேசுவின் தாய் மேரியை (மாதா) மகிமைப்படுத்துகிறார்கள், அவரிடம் மன்றாடுகிறார்கள், அவரைப் புனிதர் என்று கைகொள்கிறார்கள்.

கடவுளிடம் நமக்காக பரிந்துபேசி, நம் மன்றாட்டுகளை பெற்றுத்தருபவர்களை கத்தோலிக்கத் திருச்சபை(சர்ச்), புனிதர்களாக ஏற்றுக்கொள்கிறது(இதைப் பற்றி தேனில் படிக்கலாம்). அன்னை தெரசாவிற்கும் மறைந்துபோன போப் இரண்டாம் சின்னப்பருக்கும் (பவுலுக்கு தமிழில் சின்னப்பர் எனப் பெயர்), இந்தப் புனிதர் பட்டம் வழங்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கத்தோலிக்க கோவிலும் ஒரு புனிதர், அல்லது மாதாவின் ஒரு அடையாளம்(வேளாங்கண்ணி, பாத்திமா, லூர்து என மாதாவிற்கு பல முகங்கள்), அல்லது இயேசுவின் ஒரு அடையாளத்தை மையமாக வைத்து, அதன் நினைவாகக் கட்டப்படுகின்றன. முருகன் கோவில், சிவன் கோவில் போல, லூர்துமாதா கோவில், அந்தோனியார் கோவில் (சென்னை பாரீஸ் கார்னர் புகழ்), திரு இதயக் கோவில் என பல வகைக்கோவில்கள்.

முட்டத்தில் உள்ள கோவில் சகல புனிதர்கள் கோவில். நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி சகல(எல்லா) புனிதர்களையும் கத்தோலிக்க திருச்சபை நினைவு கொள்கிறது. அன்றுதான் முட்டம் கோவில் திருநாள்.

பத்துநாட்கள் திருநாள். முதல் நாள் கொடியேற்றம் துவங்கி கடைசிநாள் கொடியிறக்கம்வரை கொண்டாட்டம். இந்தத் திருநாட்களின் போது ஊர் முழுக்க தோரணம் கட்டி மின்விளக்குகளும், தொடர் மின் விளக்குகளுமாக ஊரே ஜொலிக்கும். கொண்டை வைத்திருக்கும் குழலொலிப்பான்களில் எப்போதும் பாடல்கள்.

புதிதாய் மிட்டய்க்கடைகள் முளைக்கும், ராட்டினங்களும், பலூன் காரர்களுமாக கோலாகலிக்கும் ஊர். பனை ஓலையில் பின்னப்பட்ட பெட்டிகளில் தேன் குழலும் (ஒருவகை இனிப்பு), கார மிக்சரும் கட்டி திருவிழாவுக்கு வந்த உறவினர்களுக்கெல்லாம் வினியேகம் நடக்கும்.

முட்டம் கோவில் மேட்டில் இருக்குமாகையால் அதன் ஒளி அலங்காரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கடற்கரை கிராமங்கள்வரை காணக்கிடைக்கும். ஒன்பதாம் நாள் மாலை ஒரு சிறப்பு வழிபாடும், பத்தாம் நாள் காலை ஒரு சிறப்பு திருவழிபாடும்(பூசை/Mass) நடக்கும். பெரிதாய் நடக்கும் திருநாட்களுக்கு ஆயர் (Bishop) வருவது வழக்கம்.

திருவிழா நாட்களில் சப்பரம்(ஆட்கள் தூக்கிச்செல்லும் தேர்கள்) தூக்குவதும் வழக்கம்.

ஊர்த்திருவிழா போனால் கிறிஸ்துமஸ்தான். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தெருவுக்குத்தெரு சிறப்பக்கப்படும். ஒவ்வொரு தெருவிலும் பாடல்கள் ஒலிக்கப்படும், குடில் அலங்கரிக்கப்படும், கிறிஸ்துமஸ்மரம் நாட்டப்படும். ஊரில் எல்லா வீடுகளிலும் காகித/அட்டை நட்சத்திரம், விளக்கிடப்பட்டு தொங்கவிடப்படும்.

காத்தாடி எனப்படும் சவுக்கு மரங்கள் தான் ஊரில் கிறிஸ்துமஸ் மரம். சிவந்தமண் பகுதியில் கிடைக்கும், சுக்குநாறி(சுக்குபோல மணம் வரும்) செடிகளைப்பறித்து குடில் கட்டுவார்கள். இந்தச்செடியும், சொல்லிவைத்ததுபோல கிறிஸ்துமஸ் நாட்களில்தான் விளையும்.

தெருவுக்குத்தெரு போட்டி போட்டு நடத்தப்படும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். லாறிகளில் ஏறி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட, காரல்ஸ் (Carols) எனப்படும் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி, ஊராகச்செல்வதும் வழக்கம். கோவிலின் பாடகற்குழு ஊருக்குள் வீடு வீடாகச் சென்று காரல்ஸ் பாடுவது வழக்கம்.

குருசடிகள் என்பது சிறிய ஜெபக்கூடங்கள். பொதுவாக ஒரு புனிதரின் பேரில் அமைக்கப்பட்டிருந்தன, கடற்கரை ஊர்களில் ஊருக்கு இரண்டு மூன்றாவது இருந்தன. இவற்றின் திருவிழா கொண்டாடங்களும் சிறப்பாக்கப்பட்டன.

நான் சிறப்பாக ரசித்த திருநாள் முட்டம் கோவிலின் 75வது வருடக் கொண்டாட்டங்கள். அதிக செலவு செய்து கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்பட்டன. கடைசி நாள் இரவு சங்கர் கணேஷின் இன்னிசைக் கச்சேரி. அருமையாகப் போய்க்கொண்டிருந்தது நிகழ்ச்சி. திடீரென கூட்டத்தில் சல சலப்பு. ஒருவர் மேடையை நோக்கி ஓடிப்போய், "ஏல...சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் பாட்டுதவிர வேற பாட்டு இர்ந்தா பாடுங்க... இங்க யார் பாட்டு அதிகம் பாடுதீங்கணி சண்ட வரும்போல" என, சங்கருக்கு நடுக்கம். அதன்பின் 'செந்தமிழ் தேன் மொழியாள்' துவங்கி, சில ஊமைப்படங்களில் வரும் பாடல்கள்வரைப்(?) பாடியிருப்பார்கள், அத்தனையும், அத்தனை பழசு.

ஊர்த்திருவிழா மட்டுமல்லாமல் கன்னியாகுமரிமாவட்டத்திலுள்ள சில கோவில்களின் திருவிழாக்களை எல்லோரும் கொண்டாடுவது வழக்கம். கொளச்சல்/குளச்சலில் (துறைமுக கிராமம்) திருவிழாக்கள் பிரபலம், கோட்டாறு கோவில், பெரிய காடு அந்தோனியார் கோவில், கண்டன்விளை கோவில் என சில கோவில்கள் இதில் அடக்கம்.

பெரியகாடு அந்தோனியார் கோவில் திருவிழாவின் போது வானவேடிக்கைகள் நிகழும். இந்தக்கோவிலில் நேர்த்திக்கடனுக்காக (கிறித்தவர்கள் நேர்ச்சை என்கிறார்கள்), 'அந்தோனியார் மொட்டை' போடப்பட்டது. அந்தோனியாருக்கு இருப்பது போலவே வழுக்கையடிக்கப்படு, தலையின் கீழ் ஓரத்தில் மட்டும், தலையைச் சுற்றி வட்டமாக முடி விடப்படும். முன்பெல்லம் கத்தோலிக்க பாதிரியயர்களுக்கு டான்ஷர்(Tonsure) செய்வது வழக்கம். டான்ஷர் என்பது தலையின் உச்சியிலிருந்த்து கீழாக இவர்களது தலைமுடி மழிக்கப்பட்டிருந்த்து. அதன் எதொரொலிதான் 'அந்தோனியார் மொட்டை' .

பெரிய காட்டிலும் மற்றசில கோவில்களிலும் கல் உப்பும், முழு நல்லமிளகும், கையில் கட்டிக்கொள்ள அர்சிக்கப்பட்ட நூலும் வழங்கப்படும்.

சகல புனிதர்கள் திருநாளுக்கு அடுத்த நாள் (நவம்பர் 2) சகல ஆத்துமாக்கள் திருநாள். இறந்து போனவர்களை நினவுகூறும் திருநாள். எல்லா கத்தோலிக்க கோவில்களிலும் சிறப்பாக்கப் படுகிறது இந்த நினைவுநாள். இதை ஒட்டி எங்கள் வீட்டில் இறந்தவர்கள் நினைவாக சில ஏழைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

கடற்கரை ஊர்களில் ஈரமான கடல் மண்ணெடுத்து கல்லறைகளை புதுப்பித்து அலங்கரிப்பார்கள். முட்டதில் கடல் மணல் பல வண்ணங்களில் கிடைக்கும். கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பென பல நிறங்களில் மண்ணெடுத்து அலங்கரிக்கப்பட்ட கல்லறைகள் பார்பதற்கு அழகு.

கல்லறைகள் மந்திரிக்கப்பட்டு சிறப்பு ஜெபங்கள் செய்யப்பட்டன. தெளிக்கப்பட்ட புனித நீரோடு கண்ணீர்த்துளிகளும் அந்தக் கல்லறைக்காட்டை ஈரம் செய்தன.

அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளை பார்க்கும்போது 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' நாமும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே எனத்தோன்றியது.

Labels:

XI. கட்டு'மரக்' கதைகள்

கட்டுக்கதைகள், நம் கிராமங்களின் பொழுது போக்கு. இவற்றில் பேய்க்கதைகளே அதிகம்.

முட்டத்திலும் பனைமரம் நடந்த கதைகளும், பேயடித்து இரத்தம் கக்கி இறந்தவர் கதைகளும் ஏராளம். இரவு பயத்தில், நிழல்களின் அசைவையும், விலங்குகளின், மனிதர்களின் நடமாட்டத்தையும் சிலர் பேயின் ஆரவாரமென எண்ணுகின்றனர். எருக்கம் செடியின் மணம் வருகிறது என்றும் சலங்கை சத்தம் கேட்கிறது என்றும் இந்தக்கதைகளில் சுவாரஸ்யமான மேம்படுத்தல்கள்.


இந்தக் கதைகள் சில எளிய பொருள்விளக்கங்கள்தாம் (simple interpretations). வாழ்க்கையின் குழப்பமான பல கேள்விகளுக்கு மதங்கள் அளிக்கும் சில எளிய விடைகளைப்போல, இருட்டில் விளங்காத காட்சிகளுக்கு இவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அவரவரின் நம்பிக்கைகளுக்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும்.

பேய் பிடித்து பைத்தியமாகத் திரிபவர்களும், தீவிர மனநோயாளிகளே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கடவுளை நம்பவே கடினமாக இருக்கும்போது பேய்களை நம்புவது எனக்குச் சாத்தியமாகவில்லை.

முட்டத்தில் 'லேனம்மாள்' என்றழைக்கப்படுகிற புனித ஹெலன் (St. Helen) பேரில் ஒரு குருசடி உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு 'கல்' சிலுவை, கடலில் மித்ந்து வந்ததாகச் சொல்வார்கள். புனித ஹெலன், கான்ஸ்டாண்டி நோபிள் அரசரின் தாயார். இயேசு மரித்த சிலுவை மற்றும் பல புனித பொருட்களாக நம்பப்படுபவைகளை கண்டெடுத்தவர். இந்த சிலுவைக்கு கொப்பரத்தேங்காயில் எண்ணையூற்றி விளக்கேற்றுவது வழக்கம்.

இதேபோல சில பாறைகளில் காணப்படும் கால்தடம்போன்ற பதிவுகள் புனித சவேரியாரின் கால்தடங்கள் எனக் கூறுவதும் உண்டு.

முட்டத்தின் கிழக்கே, பிள்ளைத்தோப்பு. இந்த ஊர் தாண்டிய பிறகு ஒரு குறிப்பிட்ட கடற்கரை பகுதியில் நாய்கள் இருப்பதில்லை எனக் கேள்விபட்டிருக்கிறேன். அவ்வழியாக மதம் பரப்பிக்கொண்டு சென்ற புனித சவேரியாரைக் குரைத்த நாய்களை அவர் சபித்ததாகவும் அதனால் அந்தப்பகுதியில் இன்றுவரை நாய்களே இல்லை என்பதும் நம்பிக்கை.

புனித சவேரியார் (St. Francis Xavier) பற்றி இந்தப்பகுதிகளில் நிலவும் கதைகள் இன்னும் பல.

சவேரியார், ஒரு கிறித்துவ கோவில் கட்டும் பொருட்டு, அப்போது நாகர்கோவில் பகுதியை ஆண்டுவந்த மன்னரிடம் நிலம் கேட்கிறார். மன்னன் மறுக்கவே ஆட்டின் தோல் ஒன்றைக் காட்டி, "இந்தத் தோலை எவ்வளவு தூரம் என்னால் பரப்பமுடிகிறதோ அவ்வளவு இடம் தந்தால் போதும்", எனக் கேட்கிறர், மன்னன் சம்மதிக்கிறார். சவேரியார் அந்தத்தோலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துப் பெரிதாக்குகிறார். அரச மாளிகையைத்தாண்டி, கோட்டையைத்தாண்டி, தலைநகரைத்தாண்டி அந்த அரசனின் ராஜ்யம் முழுவதையும் அந்த ஆட்டுத்தோலால் மறைக்கிறார். மனம் வருந்திய மன்னன் சவேரியார் கேட்ட அளவு நிலத்தை அவருக்கு வழங்குகிறர். இவர் கட்டிய அந்தக்கோவில் மீது கட்டப்பட்டுள்ளது கோட்டாறு கோவில், இன்றும் அந்த குட்டிக்கோவிலைக் கோட்டாற்றில் காணலாம்.


முட்டத்திலிருந்து கடலுக்குள், சற்று தூரத்திலிருக்கும் இரண்டு பாறைகளைப் பார்க்கலாம். சுவாசிக்க மேல்வரும் இரு பெரும் திமிங்கலங்கள்போலக் காட்சிதரும் இவை. மேற்கிலிருக்கும் கல் 'மேக்கால்' (மேற்கு+கல்) என்றும் கிழக்கிலிருப்பது 'கீக்காலென்றும்' அழக்கப்படுகின்றன. முன்பு கடல் அந்தக் கற்களிருக்கும் தூரம் வரைதான் இருநதாம். மீனவர்களால் அவ்வளவுதூரம் சென்று தொழில் செய்ய முடியாமல் போனதை அறிந்த மன்னன் அந்தப் பாறையிலிருந்து தன் கட்டை விரலைக்கடித்து இரத்தம் தரையில் சிந்த நடந்து வந்தானாம். அவன் பின்னே கடலும் வந்ததாம். இதன்பேரில் வந்ததுதான் 'கடியப்பட்டினம்' எனும் கதையும் கேட்டிருக்கிறேன். அரசன் கையைக் கடித்த 'கை கடிப்' பட்டினம்தான் மறுவி கடியப்பட்டினமாயிற்றாம்.

இந்தப் பாறைகளில் முன்பெல்லாம் ஆடுமேய்ப்பவர்கள் ஆடுகளைப் புல்மேய்க்க அழைத்துச்சென்றிருப்பதால் இவை 'ஆடுமேய்ச்சான் பாறை' எனவும் வழங்கப்படுகின்றன.

கடல்வழியே போர்புரிய வந்த எதிரிப்படைகளை மிரட்ட கடற்கரையில் பனைமரங்களை வெட்டி பீரங்கிகள் போலவும், மீனவர்களின் மூங்கில் துடுப்புகளை துப்பாக்கிகளைப்போலவும் பிடித்து நின்றதாகவும், அதை பார்த்த எதிரி பயந்து ஓடியதாகவும் ஒரு தந்திரக் கதை.

கடியபட்டினம் கடற்கரையில் ஒரு பாறை. கதவுபோல ஒரு வடிவம் இதில் செதுக்கப்பட்டிருக்கிறது. 'கதவடச்சான் பாறை' என இதற்குப்பெயர். ஆபத்திற்குப் பயந்த ஒரு குடும்பம் இந்தப்பாறைக்குள் போய் 'கதவை' மூடிக்கொண்டதாக ஒரு கதை கேட்டிருக்கிறேன். மூடிய கதவு இன்றும் திறக்கவேயில்லை.

ஊரில் அம்மன்(அம்மை) நோய் பரவுகிறது. ஊரே அல்லோலப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க ஒரு பெண் ஊரிலுருந்து ஓடிப்போகிறாள். காட்டுவழியே போகும்போது ஒரு தனிக்குடில். இளைப்பார அமர்கிறாள்.

குடிலிலிருந்து ஒரு பெண் வருகிறாள். இவளை உபசரிக்கிறாள். உபசாரங்கள் முடிந்தபின், குடில்காரி, வந்தவளை தந்தலைக்குப் பேன் பார்கச்சொல்லுகிறாள். வந்த்தவளும் பேன் பார்க்கர்த்துவங்குகிறாள். குடில்காரியின் தலைமுடியை விலக்கிப்பார்கும்போது அந்தத் தலைமுழுவதும் கண்கள் . அலறித்துடிக்கிறாள் வந்தவள். அம்மன் தன் முழு உருவத்தையும் காட்டி அவளுக்குச்சொல்கிறாள், "நாந்தாண்டி அம்மன்... ஊரிலிருந்து ஓடினா ஒன்ன பார்க்கமுடியாதா? எனக்கு ஆயிரம் கண்ணுடீ.... ஊருக்குத் திரும்பிப்போ" என்று.

இந்தக்கதையில் வரும் ஆயிரம் கண்ணுள்ள தலையை மனதில் உருவப்படுத்திப்பாருங்கள்.

இன்றும் சில பெரியவர்களைக் கேட்டல் இந்தக்கதைகளும் இன்னும் கதைகளும், பல்வேறு கோணங்களில் சொல்லக் கேட்கலாம். கதை கேட்க நேரமிருக்கிறதா நமக்கு?

Labels:

X. செங்கால் மனிதர்கள்

சிவந்த மண்ணில் கடைகள் இல்லாததால் காலியான பொருட்களை பக்கத்து வீட்டில் வாங்கித்தான் சமைப்பார்கள். அடிக்கடி யாராவது ஒரு பையனோ பெண்ணோ வந்து "அம்மா.. கொஞ்சம் உப்பு கேட்டாங்க.. புளி கேட்டாங்க", என்று கேட்பது வழக்கம். நானும் போயிருக்கிறேன் இந்தக் கடன்வாங்கும் ஊர்வலம்.

'பால் பள்ளி' என்ற ஒரு பாலகர் பள்ளிக்கூடம் மட்டுமே சிவந்தமண்ணில் இருந்தது. குழந்தைகள் விளையாட வசதிகள் இருந்தன். மத்தியானம் மூன்று மணிபோல சுடச் சுட, பால் பொடி இட்டுக்காய்ச்சிய பால் வழங்கப்பட்டது. ஒரிரு ஆண்டுகளிலேயே 'பால் பள்ளி' மூடப்பட்டது.

யூ. எஸ் ஏய்ட் (USAID), என்ற அமெரிக்க தொண்டு நிறுவனம் கோதுமையும், பால் பொடியும் வழங்கும் நிலையமொன்றை நடத்தி வந்தது. பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

படிப்புக்கு, முட்டம் அல்லது கடியபட்டிணம்தான் செல்லவேண்டும். தினமும் சிவந்தமண்ணிலிருந்து, பின்னப்பட்ட கூடைகளில் புத்தகங்களை சுமந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. இந்த நேரங்களில் கொத்தாய் பூக்கும் ஒரு காட்டுச்செடியின் மலர்களில் தேனுறிஞ்சிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து பென்சில் பெட்டியில் (அப்போது ஜியாமெட்டரி பாக்ஸ்) அடைத்துக்கொள்வோம். இந்த மலர்களைப்பறித்து நாங்களே தேனுறுஞ்சுவதும் உண்டு. இந்தச்செடிகளில் பழம் கரு ஊதா நிறமாகப் பழுக்கும். இதை சுவைத்தால் நாக்கும் கருநீலமாகும்.

கோவக்காயை சமயலுக்கு பயன்படுதுவதில்லை. ஆனால் வேலியில் கிளியின் மூக்குபோல சிவந்து பழுத்திருக்கும் கோவைப்பழங்களை சுவைத்திருக்கிறேன். கள்ளிச்செடிகளின் புளித்த சுவையுடைய பழங்களை கவனமாகப் பிரித்து உண்டிருக்கிறோம். பல பெயர் தெரியாத செடிககளில் காய்க்கும் பழங்களும் காய்களும்கூட தின்பதுண்டு.

ஊருக்கு பால்பொடி ஏற்றிவரும் லாறி ஓட்டுனர் சிவந்தமண்காரர். பள்ளி விட்டு வரும் நேரம், ஒருநாள், அந்த லாறியில் ஏறி பால்கட்டிகளை வாயில்போட்டு மேல்வாய், கீழ்வாய் ஒட்ட ஒட்ட தின்றது ஞாபகத்திலிருக்கிறது.

முட்டத்தில் பெயர்போன படகு கட்டும் கம்பனி (Boat Building Center), சிவந்த மண்ணில்தான் இருக்கின்றது. வளையும் தன்மயுள்ள, ப்ளை வுட் (Ply wood) மரப்பலகை கொண்டு செய்யப்பட்டன இந்த படகுகள். இப்போது குமரியின் கடற்கரைகளில் கட்டுமரங்களை இந்தப் படகுகள் பதிலாடியிருக்கின்றன(replace). வேலைநாட்களில் செம்பு ஆணிகளை அறையும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்த படகுகட்டும் நிலயமும் ஒரு பன்னாட்டு உதவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டது. ஃபாதர் ஜில்லே எனெ அழக்கப்பட்ட பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த்த பாதிரியார்தான் சிவந்தமண் கோவிலில் பூசை செய்வார். இவருக்கு தமிழ் சொல்லித்தந்தவர்கள் விளையாட்டக கெட்டவார்த்தைகள் சிலவும் சொல்லித்தந்தது கிராமங்களுக்கே உரிய நகைச்சுவை. 'சமாதானம்' என்பதை இவர் 'சாமானம்' என்று கூற கோவிலென்றும் பாரமல் ஊரே சிரிக்கும்.

இவரின் நீலக்கண்களும் வெள்ளைத்தோலும் வியப்பூட்டின. சிறுவனாக அவரைப்பிடித்து தொங்கி விளையாடிய ஞாபகம், இப்போதும் பசுமை. நான் பார்த்த வெள்ளைக்காரர்களிலேயே வேட்டி கட்டிக்கொண்டவர் இவர் ஒருவர்தான். பஞ்சாயத்துக்குச் செல்லும் நாட்டாமை போல நேர்த்தியாக கட்டியிருப்பார்.

பெரிய/புனித வெள்ளிக்கிழமை அன்று பாடப்படும் "திருச்சிலுவை மரம் இதோ இதிலேதான் தொங்கியது.. உலகத்தின் இரட்சணியம்" என்ற பாடலை இவர்போல யாரும் பாடக் கேள்விப்பட்டதில்லை.

பல போராட்டங்களுக்குப்பிறகு சிவந்தமண் ஊருக்குத் தண்ணீர் வந்தது. ஊர் குழாயில் சாயுங்காலம் ஐந்து மணிக்கு தண்ணீர் வரும். பெரியவர்கள் தண்ணீர் பிடிக்கும் நேரம் சிறுவர்கள் விளயாட்டு துவங்கும். ஆண் பெண் என்ற பேதமின்றி சிறுவர்கள் ஒன்றாய், கண்ணாமூச்சியோ, நொண்டியடித்தோ விளையாடுவது வழக்கம்.

ஊரைச்சுற்றியுள்ள செம்மண்காடுகளில் விளையாடுவது மாபெரும் பொழுதுபோக்கு. இந்தப்பள்ளங்களில் வடக்கு நோக்கி நடந்தால் அவரற்றின் துவக்கம் தரையில் விழுந்திருக்கும் சிறிய கீற்று என்பது புலப்படும். சில பருவங்களில் இங்கே அடைமழை பெய்யும். அப்போது பெருக்கெடுத்து ஓடிவரும் செம்மணல் நீரில் ஓடிக்கோண்டோ உருண்டு கொண்டோ குளிக்கலாம்.

மழைக்குளியலென்பது சிவந்தமண்ணில் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாகவே இருந்தது. மழை ஓயும்வரை குளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து கொஞ்சம் நல்ல நீரில் குளிக்கவேண்டும். உலகின் மிகப்பெரிய ஷவரில் குளியல், நினைத்தாலே சுகம்.

'செங்கால் மனிதர்களான' சிவந்தமண் மக்களின் ஜீவிதம் சுகமானது. எத்தனை வசதி குறைவுகளிருந்தாலும், முட்டம் மற்றும் கடியபட்டிணத்திலிருந்த நெருக்கடி வாழ்க்கை இங்கில்லை. ஒரு கிராமத்தையே உருவாக்கி நிலைநிறுத்தும் சமபொறுப்பிருந்தது இங்கிருந்த எல்லா பெரியவர்களுக்கும். அதை செம்மையாகவே செய்தனர்.


பெரிய ஊர்களில் இருந்த சட்டதிட்ட கட்டுப்பாடுகள் எதுவுமில்லமலிருந்தது சிவந்தமண்ணில். எந்தக்களைப்போடும், கவலையோடும் வீட்டுக்குவந்தாலும் இளைப்பாறி இதம் பெறலாம்.

வண்டி ஒட்டமேதுமில்லாத தெருக்களில் பயமின்றி ஆடித்திரிந்திருந்தோம். இன்று நினைக்கயில் சிவந்தமண், சில கட்டுக்கதைகளில் குட்டிமனிதர்கள் மெய்மறந்து துள்ளிவிளையாடும் கற்பனை இடமென்றே தோன்றுகிறது. எங்கே போயிற்று அந்த களங்கமில்லா குழந்தை மனம்?

இந்தக்கிராமங்களை விட்டு வருபவர்கள் உடல்கள் மட்டுமே நகரங்களில் உலவுகின்றன. உணர்வுகள் ஊரில் மரமோடு மரமாக, செடியோடு செடியாக, புதரோடு புதராக விளைந்துகிடக்கின்றன.

Labels:

நன்றி ஜெயமோகன் மற்றும் தினமலர்

தினமலர் 20/01/2006 பதிப்பில் வந்திருக்கும் குறுஞ்செய்தி



முட்டம் பற்றிய இந்த தொடரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் மின் மடல்.

தமிழ் வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பாராட்டிற்குரியது. தமிழ்மணத்திற்கும் இணைய நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து வாசிக்கவும்.

மதி கந்தாசாமி அவர்களின் திறனாய்வு. நன்றி மதி.

http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302

Labels:

IX. சிவந்த மண்

முட்டத்தின் அழகியலில் அதன் செம்மண்காடுகளும் அடக்கம். இரத்தச் சிவப்பில் மண்மேடுகள். அகளிபோல பள்ளங்கள். மழை நாட்களில் இங்கு ஓடும் வெள்ளம் கடலை சிவப்பாக்கும்.

இவை வெறும் விலங்குகள் வாழும் காடுகளாகத்தான் இருந்தன. 60களின் இறுதியில் இங்கு மனை பிரித்து ஒரு ஊர் உருவாக்கப்பட்டது. பெயர் 'சிவந்த மண்'.

நான் பிறந்த்து வளர்ந்தது இங்குதான். அப்போது அறுபதுக்கும் குறைந்த வீடுகளே இருந்தன. எல்லா வீடுகளுக்கும் 15 செண்ட் நிலம். பெரிய வீடு போக மீதி இடத்தில் எல்லோரும் எதாவது மரங்கள் நட்டு வளர்த்தார்கள்.

எங்கள் வீட்டின் முன் மாமரங்கள் இரண்டு, கொய்யா மரம் இரண்டு, முருங்கை மரம் ஒன்று, பெரிய வேப்பமரம் ஒன்று, இலவம்பஞ்சு மரம் ஒன்று, பப்பாளி மரங்கள், மாதுளை மரம், தென்னை மரங்கள் என்று ஒரு பெரும் தோட்டமே இருந்த்து.

இந்த தோட்டதின் நடுவில் வாழ்வதன் இன்பம் சொல்லத்தேவையில்லை. இதைத்தான் 'வீடு பேறு' என்கிறர்கள் போல.

இந்தக் காடுகளில் அப்போது குள்ள நரிகள் வாழ்ந்து வந்தன. சிலேடையகச் சொல்லவில்லை. உண்மையான, இரவில் ஊளையிடுகின்ற காட்டு நரிகள் இங்கே இருந்தன. எத்தனையோ காலைகளில் இந்த நரிமுகங்களில் விழித்திருக்கிறேன்.

முயல்களும், பாம்புகளும் ஏராளம். கள்ளிச்செடிகளும், முட்புதர்களும், காட்டுச்செடிகளும் என இந்த நிலப்பரப்பு பயமூட்டக்கூடியதாகவும், அதே நேரம் வியப்பூட்டக்கூடியதாகவுமிருந்த்தது.

சிவந்தமண்வாசிகளை உலகில் எங்கு சென்றாலும் அடையாளம் சொல்லலாம், காலில் செம்மண் நிறம் எப்போதும் ஒட்டியிருக்கும். இதைக் கழுவக்கூட தண்ணி தட்டுப்பாடு.

ஊரில் ஒரு அடிபம்பு கூடக்கிடையாது. இரண்டு கிணறுகளில் இருக்கும் தண்ணீர் மொத்த 60வீடுகளுக்கும். சில சிறிய குளங்கள், அவற்றில் சேரும் செம்மண் நிற நீர்தான் செடிகளுக்கு. சிலநேரம் இந்த செம்மண் நீரில் குளித்து களிமண் மீசை ஒட்டிக்கொள்வதுமுண்டு. அரசாங்க நீர் ஊருக்கு வர சில வருடங்கள் ஆயிற்று. ஒரு புதிய ஊர் உருவாகியிர்ப்பதை அரசாங்கம் கடைசியாகத்தான் தெரிந்து கொள்கிறது போல.

மழைபெய்யும் நாட்களில் சில இடங்களில் பெரிதாகத் தோண்டிப்போட்டால் மிகவும் சுத்தமான நீர் ஊறிக்கிடக்கும். இந்த மண்மணக்கும் நீரில் குளியல் மணக்கும். குளித்துவிட்டு வீடுசேருமுன் கால்கள் மீண்டும் அழுக்காகியிருக்கும்.

ஊருக்கு போக வர மேடு பள்ளமான பாதைகள். மழை பெய்யும் நேரங்களில், பள்ளங்களின் சுவர்களில் படிவெட்டப்பட்டு இந்த பாதைகள் உருவாக்கப்பட்டிருந்த்தன.

ஒரு பத்து கிலோ அரிசியை வாங்கி கொண்டு வந்து ஊர் சேர்ப்பது மிகக் கடினமான வேலை.
சைக்கிள்தான் பெரியவர்களின் ஆஸ்த்தான வாகனம். அந்த சைக்கிளைக் கூட இரண்டுகிலோமீட்டர் உருட்டிக்கொண்டு சென்றபின் தான் ஏறிப்போகமுடியும்.

இந்தக் காடுகளில் முந்திரி நன்றாக விளைந்தது. முந்திரிப் பழத்தை சுவைப்பது சுவாரஸ்யம். இதில் பல வகைகள். சில பழங்களை உப்பு சேர்த்து சாப்பிட்டால் நல்லது, சில பழங்கள் அப்படியே சாப்பிடலாம். இவற்றைப் பிழிந்து சின்ன பாட்டில்களில் சாறை சேகரித்து, இரண்டு நாட்கள் களித்து குடித்தால் கள்போல சுவைக்கும். இவற்றை குடித்துவிட்டு வசந்த மாளிகை சிவாஜிபோல தள்ளாடி நடிப்போம்.

முந்திரிக் காடுகளில் முந்திரிக்கொட்டை திருடுவதும் தோட்டக்காரர் துரத்துவதும் ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. திருடிய கொட்டைகளை விற்று வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஒட்டுவோம்.

தென்னை மரங்கள் நன்றாகக் வளர்ந்தனவே தவிர காய்க்கவில்லை. சவுக்கு மரங்களும் நன்றாக வளர்ந்தன.

சிவந்தமண்ணை அடுத்த பகுதிகளிலும் பல படக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

இரவில் வெளிச்சமென்று நிலவு மட்டும்தான் இருந்தது. மின்மினிப்பூச்சிகள் ஏராளமிருந்தன சிவந்தமண்ணில். போர்வையை கூடாரம்போல் போர்த்திக்கொண்டு அதற்குள் மின்மினிப்பூச்சிகளை பறக்கவிடுவோம். அவை போர்வைக்குள் நட்சத்திரமாய் மின்னின.

சிவந்தமண்ணில் நீண்ட நாட்களுக்கு ரேடியோ இருக்கவில்லை, செய்தித்தாள்கள் வரவில்லை, டி.வி எல்லாம் கனவாகத்தான் இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பக்கத்து ஊருக்குத்தான் செல்லவேண்டும். ஒரு கடை கூட இருக்கவில்லை. இருந்தாலும் அந்த வாழ்க்கை திகட்ட திகட்ட இனித்தது.

கிராமங்களில் மாதம் இரண்டாயிரம் சம்பாதிக்கும் ஒருவரின் சந்தோஷத்திற்கும் பட்டினத்தில் இருபதாயிரம் வாங்குபவரின் சந்தோஷத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? உண்மையில், கிராமத்து வாழ்க்கையில் இருக்கும் உயிரோட்டம் வேறெங்குமில்லை.

எங்கெல்லாமோ அலைந்துவிட்டு கூட்டுக்குத்திரும்பும் பறவைகள் போன்ற அந்த வாழ்க்கைக்கு, வெறும் டி. வி பார்த்தே பொழுதுபோக்கும் இன்றைய வாழ்க்கை ஈடாகவில்லை, ஆயிரமிருந்தும்... வசதிகளிருந்தும்.


Labels:

VIII. பயணிகள் கவனத்திற்கு

சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லும்போது, மனம் இலகுவாகிறது. பொதுவாக ஊமையாய் இருப்பவரும்கூட ஆடிப்பாடி மகிழ்ந்து, இவருக்குள் இப்படி ஒரு சுக ஜீவியா என வியக்க வைப்பார். சில நேரங்களில் இந்த உற்சாகம் நம்மை நிலை மறக்கச்செய்கிறது. மனம் இளகிப் பறக்கிறது, கவனம் சிதைகிறது. தூண்டில் புழுவை துரத்தித்தின்னும் மீன் போல, ஆபத்தை தேடிக்கொள்கிறோம் நம்மில் பலர்.

ஒவ்வொரு சுற்றுலாத்தளத்திலும் சொல்லப்படும் சோகக்கதைகள் ஏராளம். முட்டத்திலும் அவ்வப்போது இந்த சோகங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

முதலில், கடலில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென மரித்து மிதந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஐரோப்பாவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள் அங்குவந்து தங்கி ஒய்வெடுப்பது வழக்கம். அவருக்கு அனேகமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.

என் உறவினர் ஒருவர், அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சில நண்பர்களோடு பெரிய பாறைஒன்றின்மேல் அமர்ந்து தூண்டில் போட்டுக்கொண்டிருந்தார். பெரிதாய் வந்த ஒரு அலைக்கு ஒதுங்கியதில், தவறி கீழே இருந்த பாறைமேல் விழுந்தார். முட்டத்தில் அப்போது வெகுஜன போக்குவரத்தாக பஸ் மட்டுமே இருந்தது, ஒருவருக்கு அடிபட்டுவிட்டால், அவசரத்திற்கு டாக்ஸி வசதிகள் எதுவுமிருக்கவில்லை. ஒரு ஆள் பக்கத்து ஊர்ருக்குப்போய் கார் பிடித்து வரும்முன்பே உயிர் போய் விடும். அவரும் இறந்து போனார்.

இளம் வயதில் அவரோடு சேர்ந்து இறந்துபோன கனவுகள் எத்தனையோ. அவர் சடலத்தின் மீது ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களும் வைத்திருந்த மலர்வளையங்கள், ஒரு குட்டிமலையாய் காட்சி அளித்தன. அவை அன்று வீசிய வாசம் இன்றும் நுகர முடிகிறது.

ஆனி ஆடி மாதங்களில் கடலில் அலைகள் ராட்சதமாகும். மீன்பிடித்தொழில் கெடும். மீனவர்களே ஆட்கொள்ள முடியாத அந்த அலைகளை மற்றவர்கள் எதிர்கொள்வது எப்படி? இந்த மாதங்களை 'கடலடி சீசன்' என்பார்கள்.

ஒரு கடலடி சீசன்போது, சில கல்லூரி ஆசிரியர்கள், பெண்கள் உட்பட, முட்டம் பார்க்க வந்தார்கள். கரையில் துவங்கி கடலுக்குள் வீழ்ந்து கிடக்கும் பாறை ஒன்றில் அமர்ந்து அலைகளை ரசித்துக்கொண்டிருந்தார்கள். சூரியன், பழுக்கச்சிவந்து மறையக்காத்திருந்தது.

வலிய அலை ஒன்று அந்தக் கூட்டத்தில் இருவரை கடலுக்குள் இழுத்துச்செல்கிறது. நீச்சல் தெரிந்தஒருவர் அவர்களைக்காப்பாற்ற கடலில் குதிக்கிறார். அலை கடலுக்குள்ளும், பாறைக்கருகிலும் இவர்களை அலைக்களிக்கிறது. பெண்ணொருவர் தனது சேலையை அவிழ்த்து வீசுகிறார். அதை எட்டிப்பிடிக்க இயலாமல் போகிறது.

ஆரவாரம் கேட்டு வந்த ஊர்க்காரர் ஒருவர், கடலில் குதித்து ஒருவரை கரை சேர்க்கிறார். இதற்குள் வலுவிழந்து போன அவரை மீண்டும் கடலலை உள்ளிழுக்கிறது. எல்லா போராட்டங்களுக்கும் பிறகு கடல் மட்டத்தில் தெரிந்துகொண்டிருந்த தலைகள் கடலுக்குள் மூழ்கிப்போகின்றன, ஒவ்வொன்றாய்.

முட்டத்தை உலுக்கிய நிகழ்சிகளில் இதுவும் ஒன்று. கடலில் இறந்தவர்களின் உடல் மூன்று நாள் கழித்து கரையேறிவிடும். அப்படி கரையேறியது இவர்களில் இருவரின் உடல்.பாறைகளில் சிக்கியிருந்த இன்னொரு உடலை, 'குளியாளிகள்' எனப்படும், கடலுக்குள் பலநிமிடங்கள் மூச்சைப்பிடித்து குளிக்கும் திறனுடைய மீனவர்கள், குளித்தெடுத்தார்கள்.

இரவு பகலென கடற்கரையில் அந்த உடல்களைக் கண்டெடுக்க நடந்த போராட்டங்கள் நினைவிருக்கின்றன.

சுற்றுலாபோது கூடவரும் பெரியவர்களோ, ஆசிறியர்களோ நம்மை எச்சரிப்பது எரிச்சலூட்டக்கூடியதாயிருக்கிறது. ஆனால் அது வானத்தில் பறக்கும் நம் கவனத்தை தரையிறக்கி சுற்றுச்சூழலை உணரவைக்கிறது. நமக்குப் பரிச்சயமில்லாத இடங்களுக்குத்தான் நாம் சுற்றுலா போகிறோம், எனவே அதிக கவனம் தேவைப்படுகிறது.

என்னதான் கடற்கரையில் பிறந்தாலும், அமைத்தியாகத்தோன்றும் சென்னை கடலில் நான் குளிக்கத்தயங்குவேன். அது பரிச்சயமில்லாத இடம் என்பதே அதற்குக் காரணம்.

இப்படி சுற்றுலா தளங்களில் நிகழும் விபத்துக்களை பலிகள் எனக்கூறும் (மூட?) நம்பிக்கை இருக்கிறது. "வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டாவது விழும்", என சிலர் கூறுவது, ஒரு புள்ளிவிவரத் தோராயமே தவிர வேரொன்றில்லை.

அவ்வப்போது கடற்கரையில் பிணம் ஒதுங்கிக்கிடக்கிறது என்கிற வதந்திகள் ஊரில் பரவும். சில நேரங்களில் இவை வெறும் வதந்திகளாக இருப்பதில்லை.

**********

பின் குறிப்பு: Iல் சொன்னது போல எனது நினைவுகளை தொகுக்கும் முயற்சியே இது. இந்த அத்தியாயம் முட்டத்தைப்பற்றி பயம் ஏற்படுத்த அல்ல. அழகு மிகுந்து நிற்கும் இடங்கள் பல ஆபத்து மிக்கதாகவும் இருக்கின்றன என்பதற்கு முட்டம் விதிவிலக்கல்ல என்பதற்காகவே.

Labels:

VII. நான்டா, ஒங்கப்பன்டா

கடல் மணலில் கபடி ஆடுவது ஒரு சுவையான அனுபவம். நல்ல உடற்பயிற்சியும்கூட. கபடி ஆடுவது, பல கலாச்சார அடையாளங்களைப் போல, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

முட்டத்தில், நாங்கள் கடல் குளிக்கப் போகும் நாட்களில் கடல்மணலில் கால்களால் கோடுகிழித்து கபடி ஆட்டம் களைகட்டும்.

சமதளங்களில் ஓடுவதைவிட கடல்மணலில் ஓடுவது கடினமாக இருக்கும், ஆனால் கபடியில் கீழே விழும்போது உடலில் மண் ஒட்டாத இடங்களே இல்லை, மீசை உட்பட. கடற்கரை மணல் பரிசுத்தமாயிருப்பதை இப்படி உருண்டு பார்த்தும் உணரலாம்.

தோராயமாக முப்பதுக்குப் பத்து என்ற அளவில் வரையப்பட்ட செவ்வகக் கட்டத்தை இரண்டாகப் பிரித்து நடுக்கோடிட்டு, பக்கத்திற்கு ஐந்து முதல் ஆறுபேர் உள்ள அணி விளையாடும். ஒரு அணியிலிருந்து ஓருவர் மூச்சு விடாமல் பாடி வந்து அடுத்த அணியிலிருந்து யாரையாவது தொட்டுவிட்டு திரும்பி அவரது அணிக்கு வந்து விட்டால், அவர் தொட்டு வந்தவர்கள் வெளியேறுவார்கள். இப்படிப் பாடி வரும் நபரை நடுக்கோட்டைத்தொட விடாமல் பிடிப்பது எதிர் குழுவின் குறி. அப்படிச் செய்துவிட்டால் அவர் வெளியேறவேண்டும்.

ஆட்கள் வெளியேற வெளியேற ஒரு குழு வலுவிழந்து போகும். கடைசி நபர் அவுட் ஆகும்போது எதிர்குழு வெற்றி பெரும்.

கணினியில், மின் துப்பாக்கிகளால் நிழல்மனிதர்களைக் கொன்று விளையாடிப் பழக்கமுடையவர்களுக்காகவும், பரிட்சைக்குப் பின், க்ளிப் வத்த அட்டையை வைத்தாவது கிரிக்கட் மட்டுமே ஆடிப்பழக்கமுடையவர்களுக்காகவும் கபடி பற்றிய இந்தக் குறிப்பு.

மூச்சுவிட்டாமல் பாடிவரும் பாடல்கள் பலவிதம்.இதில் 'நான்டா ஒங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா' எனத்துவங்கும் பாடல் பிரசித்தம். வெறும் 'கபடி, கபடி' என்ப் பாடினாலும் போதுமானது. 'கபாடி... கபாடி' என மெதுவகப் பாடுபவரும், மின்னல்போல் 'கபடிக்கபடிக்கபடிக்கபடிக்' என பாடிப்போகிறவரும் உண்டு. இதில் முயற்சியேதும் இல்லாமல் வெறுமனே பாடிப்போபவர்களைத் தடுக்க 'தொடு கோடு' எனப்படும் கோடு வரையப்படுவதும் உண்டு. எதிரணிக்குப் பாடி வருபவர், குறைந்த பட்சம் இந்த கோட்டையாவது தொட்டுச் செல்லவேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தேசிய விளையாட்டு. இந்தியில் கபடியென்றால் 'மூச்சைப் பிடி' என்று அர்த்தம்.
முட்டத்தின் செம்மண் காடுகளில் கபடி விளையாடிவிட்டு வீடுவரும்போது உடல் செந்நிறமாகியிருக்கும்.

'உப்பு அடுக்குவது' இன்னொரு விளையாட்டு. மணல் இருக்கும் இடங்களில் மட்டுமே இந்த விளையாட்டு சாதகம். நான்குக்கு பத்தடி கணக்கில் ஒரு செவ்வகக் கட்டம். நீளவாக்கில் ஒருமுனையில் உப்படுக்குபவர், மறுமுனையில் எதிரணி ஆள், கையில் பந்துடன். 'ரெடி' சொன்னவுடன் உப்படுக்குபவர், ஆடுகளத்தின் நீளவக்குக் கோட்டின் மேல், இருகைகளையும் கும்பிடுவதுபோலக் குவித்து குறுக்காய், மணலை அடுக்கிக்கொண்டே செல்வார்.

பந்துவைத்திருக்கும் எதிராளி இவர்மீது பந்தைக் குறிபார்த்து எறிவார். பந்து உப்படுக்குபவர் மேல் பட்டால் அவர் வெளியேறி அவர் குழுவிலிருந்து இன்னொருவர் வந்து மீதி கோட்டில் உப்படுக்குவார். தன்னை நோக்கி வரும் பந்தை உப்படுக்குபவர் கையில் பிடித்து தூரமாய் எறிந்துவிடலாம்.

பந்துவைத்திருக்கும் எதிராளியின் குழுவில் உள்ளவர்கள் இதுபோல எறியப்படும் பந்துகளையும், உப்படுக்குபவர்மேல் படாமல் வரும் பந்துகளையும், எடுத்து மறுமுனயில் பந்தெறிபவருக்குத் திருப்பித் தரவேண்டும். இதன் இடைப்பட்ட நேரங்களில் உப்பு அடுக்கிச் செல்லவேண்டும்.

செவ்வகத்தின் இரு நீளக் கோடுகளிலும் உப்படுக்கியபின் அந்தக் குழு வெற்றி பெறுகின்றது. ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் ஒருமுழ இடைவெளிக்குக் குறைவாக இருக்கவேண்டும். முழுக்கவனமும் செலுத்தி விளயாடும் விளையாட்டு இது. பந்தின் மீது கண்வைத்துக் கொண்டே உப்படுக்கவேண்டும். பந்து எதிர்முனையில் இருப்பவரிடம் வந்தவுடன் பின்வாங்க வேண்டும், எப்போதும் கோட்டுக்குள் ஒரு காலாவது இருக்கவேண்டும்.

'மட்டைப்பந்து', அமெரிக்காவில் பிரபலமான 'பேஸ் பால்' போன்ற விளையாட்டு. காய்ந்த, தென்னை மர மட்டை சுழற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். இதை கிரிக்கட் மட்டைபோல வெட்டி, துணியை நூலால் இறுகக்கட்டி செய்யப்பட்ட பந்து கொண்டு விளயாடும் விளையாட்டு.

பந்தடிக்க வருபவருக்கு மூன்று முறை பந்து எறியப்படுகிறது. பந்தை அடிக்க வகையில்லாமல் எறிந்தால் அது எண்ணத்தில் சேர்க்கப்படுவதில்லை. பந்தை அடித்துவிட்டு ஓடி வட்டக் கோர்வையில் குறிக்கப்பட்டிருக்கும் சிறு கட்டங்கள் (Box) ஒன்றில் நிற்கவேண்டும். இதற்குமுன் அவர்மீது எதிர் குழு பந்தெறிந்து வெளியேற்றலாம். குறிக்கப்பட்டுள்ள மூன்று கட்டங்களையும் கடந்து அவர் துவங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தால் ஒரு ஓட்டம்.

ஏழு ஓட்டுத்துண்டுகளை அடுக்கிவைத்து, அதை பந்தெறிந்து கலைத்து, எதிரணியினர் தன்மீது பந்தெறியாதபடி சென்று அந்த ஓட்டுத்துண்டுகளை திரும்ப அடுக்குவது 'செவன்டீஸ்' எனப்படும் விளையாட்டு.

ஒருவரைக் குனியவைத்து அவர்முதுகில் கையைவைத்து நம் உடலின் வேறெந்த பகுதியும் அவர்மேல் படாமல் அவரைத் தாண்டவேண்டும். ஒரு நிலையில் தாண்டியபின் குனிந்து நிற்பவர் சற்று நிமிர்ந்து அடுத்த நிலைக்கு செல்வார். இது ஒரு விளையாட்டு.

சவுக்கு - காத்தாடி- மரக்கிளைகளை வெட்டி கில்லியும் ஆடுவதுண்டு. 'குட்டிபுள்ளை' என இது அழைக்கப்பட்டது.

மழைப் பருவத்தில் செம்மண் குழங்களின் சேற்றால் படகு செய்து, காயவைத்து கட்டி இழுத்துச் செல்லும் பிள்ளைகளை பார்க்கலாம். இந்தக் களிமண் கொண்டு சிறிய வீட்டு உபயோகப் பொருட்களை விளையாடாகச் செய்து, மணலில் கோடிட்டு, "இது வரவேற்ப்பறை, இது சமையலறை" என 'வீடு கட்டி' ஆடுவதும் உண்டு.

நொங்கு கிடைக்கும் நாட்களில், சீவி சதை எடுக்கப்பட்ட நொங்குகள் இரண்டை குச்சியில் இணைத்து, சக்கரம் பூட்டிய வண்டி போல ஓட்டுவது வழக்கம்.

தரையில் கட்டங்களிட்டு ஒரு ஓட்டுத்துண்டை ஒவ்வொரு கட்டமாகப் போட்டு ஒற்றைக்காலில் நொண்டியடித்து ஆடும் ஆட்டமும் உண்டு. இதில் பெண்கள் பிரபலம்.

பஸ்களில் குறைவாகப்போயிருந்தாலும், கிடைக்கும் பயணச்சீட்டுகளைக் கொண்டு, முனைகள் கட்டப்பட்ட கயிற்றிற்குள் குழந்தைகள் நின்று, முன்னால் நிற்பவர் ஓட்டுனராகவும் பின்னால் நிற்பவர் நடத்துனராகவும் பாவித்து ஊரைச்சுற்றி பயணிப்பது குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு.

கடற்கரையில் பெரியவர்கள் சீட்டு விளையாட ஓய்வெடுக்க கூடங்கள் இருக்கும். 'சீட்டுப் பிரை' எனப் பெயர். இந்த ஓலை வெய்தக் கூடங்களில் உறங்குவது சகல ரோக நிவாரணம் தரும். வயிறு நிறைய உண்டுவிட்டு, கடற்கரையில், நிழலில், கடல் மணலைப்பரப்பி, ஒரு துணித் துண்டை விரித்து உறங்குவது மனதை தூய்மைப்படுத்தும் மருத்துவம்.

இரு மூங்கில் கழிகளுக்கு நடுவே வெள்ளைத்துணி கட்டி திரைப்படங்கள் காண்பிப்பது ஊருக்குப் பொதுவான பொழுதுபோக்கு. திருவிழாக்கள் மட்டுமல்லாமல் பிறப்பு தொடங்கி இறப்புவரை வரும் எந்த வைபோகமானாலும் திரைப்படம் காண்பிப்பது சில கடற்கரை ஊர்களின் வழக்கமாயிருந்தது. இதில், மழைபெய்தோ, திரை கிழிந்தோ, ப்ரொஜெக்டர் எரிந்தோ பாதியிலேயே நின்று போன படங்கள் ஏராளம். திரையரங்குகளில் காண்பிக்கப்படுவதற்கு முன்பே ஊரில் காண்பிக்கப்பட்ட படங்களும் உண்டு. ஒவ்வொரு சுருள் மாற்றும்போதும் வரும் இடைவெளிகளில் கடலை, முறுக்கு வியாபாரம் கொடி கட்டும்.

திரைப்படம் போடும் குழு வரும்வரை கட்டிய வெள்ளைத்திரையையே பார்த்து காத்திருக்கும் நேரங்கள், படம் பார்ப்பதைவிட இனிமையாகக் கழிந்தன.

Labels:

VI. யுத்த காண்டம்

'மானம்', 'தன் மானம்' தமிழில் அதிகமாக துஷ்பிரயோகப் படுத்தப்படுகிற வார்த்தைகள். இவற்றின் அர்த்தமும் உபயோகமும் முழுமையக பலருக்கும் தெரிந்திருக்கவில்லையாகிலும், இவற்றின் பேரில் நடக்கும் யுத்தங்களும் உயிர்த்தியாகங்களும்(பலிகள் என்றும் கொள்ளலாம்), அதைப் புகழ்ந்தெழும் இலக்கியங்களும் படைப்புகளும் வியப்பூட்டுகின்றன. 'ஒழுக்கம்' போன்ற படிப்பினைகள்போலவே இவையும் தனி மனித ஆய்வுக்கும், பொருளாக்கத்திற்கும் உட்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

ஒருவரது அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் இழுக்கு வராமல் காத்துக்கொள்வது மானமாய் வாழ்வது என்ற அர்த்தத்தில், மீனவர்கள் மானம் மிகுந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். சாதாரணமாகச் சொன்னால், சுரணை மிக்கவர்கள், பலர் முன்கோபிகளும் கூட, ஆனால் மூர்க்கமானவர்கள் அல்ல.

பரவலாக நம்பப்படுவதுபோலல்லாமல், கடற்கரை கிராமங்களில் அவ்வப்போதுதான் ஊர்க்கலவரங்கள் உருவாகின்றன, முட்டத்திலும்.

சில குழாயடிச் சண்டைகள் எப்போதும் நடக்கும், எந்த கிராமமும் அதற்கு விலக்கல்ல. உப்பு போட்டு உண்பதற்கும் உணர்ச்சிகளுக்கும் தொடர்புள்ளதென்றால், உப்புக்காற்றையே சுவாசிக்கும் இவர்கள் எளிதில் உணர்ச்சிமயமாகக்கூடியவர்கள்.

ஜாதிக்கலவரங்கள், தெருவுக்கும் தெருவுக்கும் சண்டை என ஊர்க்கலவரங்களுக்குப் பல முகங்கள். எந்தப்பெரிய கலவரங்களுக்கும், சில போர்களுக்கும்கூட, மூலமாக ஓரிருவரின் செயல்/எண்ணங்களே உள்ளன, சூர்ப்பநகையும், சகுனியும் போல.

முட்டத்தின் கலவரங்களில் பொதுவாக கைகலப்புகளே நடைபெற்றன. மீன்பிடிக்கும் உபகரணங்களைக் கொண்டு தாக்குவதும் உண்டு. கலவரம் தீவிரமாகப் போகும்போது ஊரிலிருந்து ஆண்கள் வெளியேறி உறவினர் ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள், கைதாவதைத் தவிர்க்க. ஊர்க்கோவில் பூட்டப்பட்டு பூசைகள் நிறுத்தப்படும். பஸ் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படும். இந்த நேரங்களில் ஊருக்குள் நான் உலவியிருக்கவில்லை, அந்த வெறுமையும் அமைதியும் கல்லறைத் தோட்டங்களையே ஞாபகப்படுத்தும் என அனுமானிக்கிறேன்.

சிலமாதங்களாய் நடந்த ஊர்க்கலவரங்களும் உண்டு. ஜாதி தவிர பிற பிரிவினைகளும் இருந்தன. ஒரே மதம், ஒரே கோவில் ஒரே கடவுள், ஊர்க்காரர், உறவினர் என்ற பொது எண்ணங்கள் 'நான்' என்ற மாயைக்குள் மறைந்து போகின்றன.

ஊரைக்கூட்ட கோவிலில் மணியடிப்பது வழக்கம். மணிக்கூண்டில் இருக்கும் அத்தனை மணிகளையும் ஒன்றாய் அடிப்பார்கள். 'கூட்டமணி' என்று இதற்குப்பெயர். பொதுவாக இரண்டு அல்லது மூன்று பெரிய வெண்கல மணிகள் கூண்டில் இருந்தன. இவை ஒன்றாக ஒலிப்பது கல்லறை உறக்கத்தையும் கலைக்கும். கடலோரக்கவிதைகளின் கதையில் இந்த மணியடிக்கும் பழக்கம் கையாளப்பட்டுள்ளது ஞபகமிருக்கலாம்.

மண்டைக்காட்டு கலவரத்தை பலர் மறந்திருப்பார்கள். அது நல்லதே. குமரி மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு வெட்டுக்காயம். மற்றசில இடங்களை ஒப்பிடும்போது, இந்தக் காயம் மிக விரைவிலேயே ஆறிப்போனது.

'வரலாறு', பாடம் படிப்பதற்கு நல்லது, அன்று நடந்தவைகள இன்று பின்பற்ற முயல்வதோ அல்லது பரிகாரங்கள் தேடுவதோ, பகுத்தறிவு (பரவலான பொருள்கொள்ளவும்) வழிகாட்டும் இந்த நாட்களில் ஒத்துவராது என எண்ணுகிறேன்.

மண்டைக்காடு ஒரு மதக்கலவரம். குமரியின் கிறித்துவர்களும் இந்துக்களும் போட்டுக்கொண்ட ஒரு குடும்ப சண்டை. தீவிர குடும்ப சண்டை. இந்தக் கலவரத்தின்போது கடற்கரை கிராமக்கள் மற்ற ஊர்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. ஊருக்குள் வரும் சாலைகளில் அகளிபோல பள்ளங்கள் வெட்டப்பட்டன. பெண்கள் கோவிலில் இடைவிடாது ஜெபம் செய்தனர். அத்தியாவசியமான பொருட்கள் கடல்மூலம் வந்துசேர்ந்தன. இரவுகளில் வெடிகுண்டு சப்தம் எப்போதாவது கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு நள்ளிரவில், சிறுநீர் கழிக்க விழித்துக்கொண்டேன்(அப்போது சிறுவன்), பயம் காரணமாய் கூடவே அம்மாவும். கோவில் மணிச்சத்தம் இரவுப்பூச்சிகளை மெளனித்தது. என் அம்மாவிடம் ஒரு டவலை (துவாலி?) வாங்கிவிட்டு, அப்பா கட்டிய வேட்டியுடன், வேறெதுவும் சொல்லாமல், மணி சத்தம் நோக்கி ஒடினார். இன்று நினத்தாலும் உடல் சிலிர்க்கும்.

மூன்று நாட்கள் கழிந்து அப்பா வீடு திரும்பினார், யாருடைய சட்டையையோ பொட்டுக்கொண்டு. என் தந்தை ஒரு ஆசிரியர் என்பதை கருத்தில் கொள்ளவும்.

இதுபோன்ற பல தந்தைகளும், அண்ணன்களும், சில பெண்களும் கூட ஊரைக்காக்க புறப்பட்டதுண்டு. இந்தக் கலவரத்தின்போது இரகசியமாக ஊரைக்கூட்ட 'இறைவன் நமது வானகத் தந்தை' என்ற பாடல் கோவிலின் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டது. கடற்கரை வழியே பல மைல்தூரம் கால்நடையாக நடந்து வெளியூர்களில் உள்ளவர்கள் ஊர்திரும்பக் கண்டிருக்கிறேன்.

மண்டைக்காடு போன்ற மதக்கலவரங்களும்கூட, சுமூகமாக பேசி முடிக்கக் கூடிய, முடிக்க வேண்டிய சிறிய நிகழ்சிகளை மையமாகக் கொள்கின்றன என்பதை ஆய்தல் வேண்டும். உணர்ச்சிகளை மட்டும் முன்வைத்து பிரச்சனைகளை ஆரய்வது இழிபலன்களயே தரும் என்பதில் இன்னொரு கருத்து இருக்கமுடியாது.

கருத்துக்களுக்கும், இலக்கியங்களுக்கும் எழும் எதிர்வினைகளைப் பார்க்கும்போதும், மொழி, இனம் தொடர்பான உணர்ச்சிகள் அரசியல்படுத்தப்படுவதை எண்ணும்போதும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலெல்லாம் நம்மில் பலருக்குப் பொறுமையில்லை எனத் தோன்றுகிறது. இதற்கு மீனவர் என்றோ, விவசாயி என்றோ, இலக்கியவாதி என்றோ அரசியல்வாதி என்றோ, கலைஞன் என்றோ, வலைஞன் என்றோ எந்த விதிவிலக்கும் இல்லை.

Labels:

V. ஒளியூட்டு, படம்பிடி, நடி

முட்டத்தை பலருக்கும், ஒருவகையில் எனக்கும், அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான். நாம் பிறந்து வளர்ந்த மண்ணானாலும் அதன் அழகு பிறர் கூறத்தான் நமக்குப் புலப்படுகிறது. நான் முட்டத்தில் வழ்ந்த நாட்களைவிட சென்னையிலிருந்து அங்கு சென்று வந்த நாட்களை மிகவும் ரசித்தேன்.

முட்டத்தின் அழகு அதன் பாறைகள். நாய்குட்டிகள் செல்லமாய் கடித்து விளையாடுவதுபோல அலைகள் பாறைகளை அடித்து விளையாடும்.

தவளைபோல் ஒன்று, பூமியில் விழுந்து உறைந்துபோன விண் தட்டு போல ஒன்று, குகை அமைப்பில் இன்னொன்று என்று வகை வகையாய் பாறைகள். இந்த கற்களைச் சுற்றி சொல்லப்பட்ட மென்மையான காதல் திரைக்கதைகளில் முட்டமும் ஒரு பாத்திரம்.

படப்பிடிப்பு, காண்பதற்கு ஒரு சலிப்பான அனுபவம். பலமுறை இதை உணர்ந்திருக்கின்றேன். ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தப்போது கடற்புறத்தில் படம்பிடிக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு சீருடையோடு ஓடினேன்.

பாறைமேல் பாரதிராஜாவின் படக்குழு. மீசையில்லாத இளம் கார்த்திக், பதின்ம வயது ராதா.

கார்த்திக்: "போகலாமா?"

ராதா: "ம்"

கார்த்திக்: "போகலாமா?"

ராதா: "ம்"

"கட். கட்"


அலைகள் ஓய்வதில்லையில் கோர்க்கப்படாத(?) ஒரு காட்சியை இயக்கிக்கொண்டிருந்தார் பாரதிராஜா. நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இதுதான்.

'அலைகள் ஒய்வதில்லை' முட்டத்தின் முதல் வெற்றிப்படம். அதற்கு முன் 'பூட்டாத பூட்டுகள்' என்ற படம் எடுக்கப்படது. வெளிவந்ததாகத் தெரியவில்லை.

'பகல் நிலவு' படத்தின் ஒரு பாடல் காட்சி, முதன் முதலில் முட்டத்தில் அமைக்கப்பட்ட கனவுப் பாடல். மெழுகுத்திரி போன்ற ஒன்றை எரிய வைத்து பல வணங்களில் புகையெழுப்பினார்கள். அலங்கார ஆடைகளில் நடனப் பெண்கள். ஒவ்வொரு பதிப்பிற்கும் வரிசையாக நின்று இரண்டு மூன்று நளினங்கள் செய்துவிட்டுத்திரும்புவது வேடிக்கையாக இருந்தது.

மணிரத்தினத்தின் 'பகல் நிலவு' படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது பார்த்த ரேவதி இப்போதும் அப்படியே இருக்கிறார். முரளி ட்ராக்டர் மீது அமர்ந்து நண்பர்களோடு பாடும் முதல் பாடல் படப்பிடிப்பு பார்த்திருக்கிறேன், அவரும் இன்னும் அப்படியே. மணிரத்தினம் அப்போது பொதுவாக அறியப்பட்டிருக்கவில்லை. அவரைப் பார்த்த ஞாபகம் இல்லை.

அம்மன் கொவில் கிழக்காலே படத்தில் வரும் ஒரே சண்டைக்காட்சி முட்டத்தின் செம்மண்காட்டில் படமாக்கப்பட்டது. இந்த செம்மண்காடுகள் பற்றி பின்பொரு பதிவு செய்கிறேன். விஜயகாந் கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தார், ராதா ரவி மற்றும் படக்குழுவினரோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

படப்பிடிபுகளின்போது வரும் குழுவினர் பேசும் சென்னைத் தமிழ் வியப்பூட்டியது. அப்போது வெறும் வானொலி மற்றும் சில பழைய திரைப் படங்கள் மூலம் மட்டுமே வெளியுலகைப் பார்த்திருந்தேன்.

நான்பாடும்பாடலில் சில காட்சிகள், விஜயின் நிலாவே வா, மோகனின் பாடு நிலாவே, உயிரே உனக்காக, ராமராஜனின் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, அர்ஜூனின் தாய்மேல் ஆணை, பிரபு நடித்த சின்னப்பூவே மெல்லப்பேசு, இன்னும் பல வெற்றிப்படங்கள் முட்டத்தைப் பதிவு செய்திருக்கின்றன.

உயிரே உனக்காகவில் வரும் மோகனின் வீட்டை பாதி கட்டிய ஒரு வீட்டின் வெளிப்புறமாக செட் போட்டு செய்திருந்தார்கள். சினிமாவின் மாயத்தனம் அப்போதுதான் முதலில் அறிந்தேன். முட்டத்தில் போடப்பட்ட பெரிய திரைக்கலையமப்பு இதுதான்.


தாய்மேல் ஆணை, அர்ஜூன் ஓய்வெடுக்க அவரின் நகல் நடிகர் உயிரைப் பணயம் வைத்து கர்ணம் போட்டுக்கொண்டிருந்தார்.

எத்தனை படங்களானாலும் முட்டத்து மக்களுக்கு கடலோரக் கவிதைகளே செல்லம். அதுவே ஊரின் அடையாளமக ஆயிற்று. எனக்கு, எந்த ஊர் என கேட்கும் தமிழர்களுக்கும், சில தெலுங்கர்களுக்கும், கடலோரக் கவிதைகள் (கக) முட்டம் என்று கூறியே பழக்கம். கக தெலுங்கிலும் ஆக்கப்படது.

ககவைவிட கடல் பூக்களில் மீனவர் வாழ்க்கை முகங்கள் வெளிப்பட்டிருந்தன. ககவின் காதல் கதைக்கு முட்டம் ஒரு தளம் மட்டுமே ஆயினும் மணி அடித்தால் ஊர் கூடுவது என்ற குமரி மாவட்ட கடலோர வழக்கு இந்தப் படத்தில் கையாளப்பட்டிருந்தது.

கடலோரக்கவிதைகள் முழுவதும் முட்டத்தில் பதிக்கப்படவில்லை. கடலை ஒட்டி மலை இருப்பது போன்ற இடங்கள் விசாகப்பட்டினத்தில் எடுத்தது என கேள்வி பட்டிருக்கிறேன்.
முட்டத்தில் ரயில் நிலையமோ, போக்குவரத்தோ கிடையாது. இதை பலர் என்னிடம் கேட்டுள்ளனர். உண்மையில், தனது வாழ்நாளில் ரயிலையே பார்க்காதவர்கள் முட்டத்தில் பலர் இருந்தார்கள்.

'கோட்டாமடை' எனப்படும், முட்டம் கடல்கரையின் ஒருபகுதி மிக அழகாக இருக்கும். இங்குதான் தற்போது நிழல்கூடை அமைக்கப்பட்டுள்ளது. பல காமெராக்கள் இந்தக் கடற்கரையை பல கோணங்களில் படம் பிடித்துள்ளன.

முன்பெல்லாம் பேருந்து தவிர வேறெந்த வாகனம் வந்தாலும் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரியும். யார் வந்து படம் எடுத்தபோதும் முட்டத்தில் படப்பிடிப்பு பார்க்க கூட்டம் அவ்வளவாகக் கூடுதுவதில்லை.

கடலோரக்கவிதையில் ஒரு காட்சி. சத்தியராஜ், ரேகா மற்றும் ராஜாவுக்கு ஊரைச் சுற்றிக் காண்பிக்கின்றார். குகைபோன்ற அமைப்புடைய ஒரு பாறைத்தொகுப்பு. சொல்வதை எதிரொலிக்கிறது அந்தக்குகை.

"உங்களுக்கு புடிச்சவங்களோட பேர சொல்லுங்க", சத்தியராஜ்

"ஜெனிபர்", ராஜா

"ஜெனிபர், ஜெனிபர், ஜெனிபர்", குகை.

முகம் கடுக்கிறார் சத்தியராஜ்.

முட்டத்தில் குகைபோன்ற அமப்புடைய ஒரு பாறைத்தொகுப்பு இருந்தது ஆனால் அங்கு எதிரொலி வருவதில்லை. நான் ரசித்து வியந்த ஒரு காட்சி.

ஒளியூட்டு, படம்பிடி, நடி? Lights, Camera, Action தான் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன்.



Labels:

IV. சுட்ட மீனும் சுறாபுட்டும்.

நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.

பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் உபயோகிகின்றோம். இவையாவும் (அவருக்கு) கற்பிக்கபட்டவையே என்பதை நாம் பொதுவாக எண்ணி பார்ப்பதில்லை.

நம்மில் இருக்கும் பல பழக்கங்கள் யாரோ நமக்கு சொல்லித்தந்தது அல்லது யாரை பார்த்தோ நாம் கற்றுக்கொண்டது. மதங்களும, ஜாதி பற்றிய கொள்கைகளும்கூட யாரோ நமக்கு ஊட்டிய பால்தான். ஏதோ அவை நாமே உருவாக்கியது போல சில நேரங்களில் நடந்துகொள்கிறோம்.

ஜப்பானில் பல ஜந்துக்களை ருசித்து உண்கின்றனர். அமெரிக்காவில் மாட்டிறச்சியை சுட்டு சாப்பிடுகின்றனர், இதெல்லாம் நம்மில் பலருக்கு வியப்பளிப்பது போலவே நாம் பட்டை இலவஙத்தைப் போட்டு குழம்பு வைத்து அதை சோறில் ஊற்றி சாப்பிடுவது அமெரிக்கர்களுக்கு வியப்பளிக்கிறது. பட்டை மணம் மெற்கு நாடுகளில் இனிப்புகளில் (மட்டும்?) பயன்படுத்தப் படுகின்றது.

பச்சை மீனை சுட்டு உண்பதை மீன் உண்பவர்கள்கூட புரிந்து கொள்வதில்லை. கடல்புறங்களில் பேர்போன ஒரு பழக்கம் அது.

காலப் பயணமாக பின் சென்று நம் முன்னோர்கள்போல வாழும் ஒர் அரிய அனுபவம். இதன் சுவை பற்றி கவிதைகள் வரையலாம். மாமிசம்/மீன் உண்ணாதவர்கள் சில கிழங்கு வகைகளை சுட்டு உண்டு பார்க்கவும். மற்றவர்கள் இந்த அனுபவத்தை பெறுவார்களாக.

சுடுவதற்கு ஐஸ் மீன் உகந்ததல்ல. கடற்கரையில் கிடைக்கும் வாடாத மீன்களைச் சுடுவதே நல்லது. எல்லா வகை மீன்களும் சுட்டால் ருசிப்பதில்லை. அதற்கென்று சில மீன் வகைகள் உள்ளன. சாளை(மத்தி), அயிலை, போன்ற மீன்கள் பெயர்போனவை. முட்டத்தின் கள்ளுக்கடைகளில் சுட்ட பச்சை மீன் மிகப் பிரபலம்.

அவித்த மரச்சீனி(மரவள்ளி) கிழங்கும் சுட்ட பச்சை மீனும் நிகரில்லா இணைகள். இதற்கு மாற்று மரவள்ளிக் கிழங்கும் அவித்த தோடும். தோடு (mussel) என்பது ஒருவகைச் சிப்பி. ஒரு பருவத்தில் முட்டம் மற்றும் கடியப்பட்டிணத்தின் பாறைகளில் அதீதமாக விளையும் இந்தத் தோடுகள். இதைக் கழுவி உப்பு கூட போடாமல் அவிக்கலாம். உப்பு அதிலேயே இருக்கும். மரச்சீனிக் கிழங்குக்கும் இந்த தோடுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கள்ளுண்ன சிறந்த கூட்டு.

இந்த அவித்த தோடுகள் அமெரிக்காவின் சீன பஃபேக்களில்(buffet) கிடைக்கின்றன.

எச்சரிக்கை: சென்னை அடுக்கு மாடி வீடுகளில் மீன்சுடுவது உங்கள் பின்புலனை பறைசாற்றுவது போலாகும். மகாபலிபுரம் போன்ற கடற்கரைகளுக்கு சிற்றுலா(picnic) போகும்போது இதை செய்து பார்க்கவும்.

மரவள்ளிக்கிழங்கை, மசாலாவுடன் நெத்திலி போன்ற சிறிய மீன்களைப் போட்டு மசிய அவித்தால் 'கிழங்குக் களி'. சரவணாபவனின் முதல் மாமிச உணவாக இதை சேர்க்கலாம். மிகச் சத்தான உணவு. இந்தக் கிழங்கை துண்டுகளாக வெட்டி காயப்போட்டால் 'வெட்டுக் கிழங்கு'. இதுவும் இடித்துக் களியாக்கப்படும்.

'கூனி' எனப்படும் சிறிய இரால் வகை ஒன்றை காயவைத்து அதை மிளகு, மசாலாவுடன் இடித்து பொடிசெய்வார்கள். நெத்திலி கருவாடும் இவ்வாறு பொடி செய்யப் படும்.

கடற்கரையின் இட்லி பொடி இது. தேனீர் தவிர வேறெந்தெ உணவுக்கும் சுவை சேர்க்கும். நான் இதை அமெரிக்கவிற்கு அனுமதியின்றி இறக்குமதி செய்திருக்கின்றேன், எனக்கு மட்டுமாக.

கடல்புறங்களில் ஊருக்கு ஊர் மீன்குளம்பு வேறுபடும். மணம் நிறம் குணம் மாறும். எனக்கு சிறிது புளிப்பு தூக்கலக பச்சை மிளகாய் போட்டு வைத்த குளம்பு பிடிக்கும். வேலு மிலிட்ரி போல பூண்டு போட்டு மீன் குளம்பு வைப்பதில்லை.(அதையும் ரசித்து ருசித்திருக்கிறேன்).

மூரை எனப்படுவது கடல் பாறைகளில் ஒட்டி வளரும். மெல்லிய, மண்டையோட்டின் மேற்புரம் போன்ற கூட்டின்மேல், முள் போன்ற குச்சிகள் நீண்டு நிற்கும். காய்ந்த இதன் குச்சிகளை சிலேட்களில் எழுதப் பயன்படுத்துவதுண்டு.

மூரையை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒர் இளந்திடப்(semi solid) பொருள் இருக்கும். இதை சமைக்காமல் பச்சையாக உண்ணலாம். பாறையிலிருந்து எடுத்து சில மணி நேரங்களுக்குள் இவற்றை உண்ண வேண்டும். முட்டத்தில் பாறைகள் அதிகமானதால் மூரைகளும் அதிகம். எல்லா நேரங்களிலும் இவை கிடைப்பதில்லை. டிசம்பரில் கட்டாயம் கிடைக்கும். மூரைகள் எனக்குப் பிரியம்.வேறெந்த மீனையும் சமைக்காமல் உண்பதில்லை.

குமரிமாவட்டத்தில் அநேகமாக எல்லா பதார்த்தங்களிலும் தேங்காய் சேர்ந்திருக்கும். தலைக்கு தினமும் தேங்கய் எண்ணைதான், சமையலுக்கும். மீன்குழம்புகள் இந்த விதிக்கு விலக்கல்ல.
தேங்காய் இல்லாமல் சமைக்கும் 'மஞ்சள் தண்ணி' எங்கள் வீட்டில் பிரசித்தம், தூண்டிலில் பிடித்த மரத்து மீன்களே இதற்கு சிறந்தவை.

சின்ன வெங்காயம் (குமரியில் 'உள்ளி'), மஞ்சள், புளி, சின்ன சீரகம் சேர்த்து அரைத்து கூட்டப்படும் குளம்பு. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நம் வீட்டின் சமையலை வெளிப்படுதும் குளம்புகளில் இதுவொன்று. மற்றது நண்டுக்கறி.

பழைய சோற்றிற்கு மஞசள் தண்ணி அசாத்திய சுவை சேற்கும். சுடு சோற்றை நன்கு ஆறவைத்தால்தான் மஞசள் தண்ணியின் குணம் தெரியும்.

தேங்காய் இல்லாமல், மாங்காய் போட்டு அவியல் என்று ஒன்று. இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும். மீன்போட்ட புளிக்காய்ச்சல் இது.

சுறாபுட்டு அதிகமாகப் புழங்கவில்லை. எப்போதாவது சின்ன சுறா மீன்கள் கிடைத்தால் அதை அவித்து, உதிர்த்து, வறுத்து புட்டு செய்வதுண்டு. இந்தப்புட்டை வடைபோல உருட்டி முட்டையில் தோய்த்து பொரிப்பார்கள் சிலர். சைவம் உண்பவர்கள் ஏமாந்து போகுமளவுக்கு இருக்கும். சுறா மீன்களில் மசாலா எளிதில் பிடிபதில்லை அதனால் குளம்பை விட அவியல் அல்லது புட்டுக்குத்தான் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, திருக்கையும் அதுபோலத்தான்.

சுறா மட்டுமன்றி வாளை மீனிலும் புட்டு நன்றாக வரும். இதில் சதைக்குள் முள் அதிகமிருக்கும் 'துப்பு வாளை' புட்டுக்குச் சிறப்பு. சாப்பிடும்போது, முள்ளை, துப்பிக்கொண்டே சாப்பிடவேண்டும். உதிர்த்து விடுவதால் புட்டில் முள் இருப்பதில்லை.

பாம்புபோல நீளமாக, ஆனால் தட்டையாக வெள்ளி பூசிய பட்டை போலிருக்கும் வாளை மீன். முதுகுப்புறத்தில் பச்சை கலந்த நீல நிறம்.

துப்பு வாளை அல்லாத வாளையில் நெய் சுரக்கும். நெய்மீனை விட சுவையாக இருக்கும் அதன் குளம்பு. வாளைக் குளம்பை சுடச்சுட சாப்பிட்டால் மட்டனை மறக்க நேரிடும்.

மீனவர்கள் தட்டு நிறைய சோறு போட்டு சாப்பிடுவது வியப்பாக இருக்கலாம். அத்தனை உடலுழைப்புக்குப் பிறகு அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும்கூட. மீன் இல்லமல் சாப்பாடு இறங்குவதில்லை கடலோர மக்களுக்கு. மீன்பிடிக்கச்செல்லாத நாட்களில் கருவாடு அல்லது இறைச்சிக் குழம்பு கட்டாயம் இருக்கும்.

மீனை பொரித்து உண்பது ஒரு சிறப்பு உணவு. கருவாட்டைப் பற்றி வர்ணிக்கத்தேவயில்லை திரைப்படப் பாடல்களே சான்று.

பெரிய மீன்களை பக்கவாட்டில் இரண்டாய்க் கீறி உப்பு, சில நேரம் மஞ்சள், தடவி காய வைப்பது ஒருவகை, நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை அப்படியே காயப்போட்டு எடுப்பது இன்னொரு வகை. சில பருவங்களில் ஊர் முழுவதும் மீன்கள் காயும். அந்த நேரங்களில் சளி பிடித்திருப்பது நல்லது. கருவாடாகும்வரைதான் இந்த ஊர் மணக்கும் நிலை.

நெத்திலி கருவாடு வீட்டின் அறைகள் முழுக்க, காற்றும் புக முடியாதபடி நிரப்பி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். காயப் போட்ட மீன் மீது பஸ் ஏற்றிச் சென்று அடி/திட்டு வாங்கிய ஓட்டுனர்கள் பலர்.

கருவாட்டுக்கு இடம் விட்டுவிட்டு ரோடு போட்டிருக்கலாமோ?

Labels:

III. ஏலேலோ ஐலசா.

கடல்மீன் பிடித்தலைப்போல் ஒரு கடினமானத் தொழில் இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் உடல் உழைப்பை வைத்து மட்டுமல்ல, பலன் இருக்கும் என்ற உறுதியற்றபோதும் அலை கடந்து தொழில் செய்யும் நிலை.

பருவங்களின் தாக்கமிருக்கும் தொழிலானபோதும், ஸ்த்திரத்தன்மை ஒருபோதும் இருந்ததில்லை.

விவசாயத்திலும் ஸ்த்திரநிலை இல்லைதான் ஆனால், அதிகாலையில் வயலுக்குச் சென்றுவிட்டு செருப்பில் சகதியோடு பாடமெடுக்கும் ஆசிரியர்களிடம் நான் பயின்றிருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் முழு நாள் வேலை என்பது அதில் இல்லை.

மீனவனின் உறக்கம்கூட ஒரு வேலைதான், அந்த ஓய்வு இல்லாமல் அடுத்த நாள் கடலுகுப் போக முடிவதில்லை அவர்களால்.

உயிரை முதலீட்டும் மீனவர் தொழில் ஒப்பிடக் கடினமானது.

அதிகாலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் கடற்கரை சுறுசுறுப்பாகிவிடும். கட்டுமரங்களை அலைகள் நிலம் வந்து கடல் செல்லும்போது கடலுக்குள் தள்ளிச் செல்வார்கள். அது அறிவியலா கலையியலா என விவாதிக்கலாம். அத்தனை நேர்த்தி. கட்டுமரங்கள் வெறும் 'மரங்கள்' என்றே அழைக்கப்படன, இனி இங்கும் 'மரங்கள்'தான்.

ஒரு மரத்திற்கு இரண்டு முதல் ஐந்துபேர் வரை. மரத்தில் மீன் பிடிக்க தேவையான வலைகள், தண்ணீர் மற்றும் முந்தைய நாள் சமைக்கப்பட்ட கஞ்சி. பழைய கஞ்சி போல ஒரு சுவையான, சத்தான உணவு கிடைப்பது அரிது. விவசாய கிராமங்களில் மீன் போட்டு தயார் செய்த கூழ் மட்டும் இதற்கு விதி விலக்கு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதை வாங்கி என் நினைவாகப் பருகுங்கள்.

கட்டுமரங்கள் இலவம்பஞ்சு மரங்களால் செய்வார்கள். மற்ற சில ஒத்த குணமுடைய மரங்களையும் உபயோகிப்பதுண்டு. எல்லோராலும் கட்டுமரங்களை செய்ய முடிவதில்லை. இதற்கென ஊரில் சில நிபுணர்கள் உண்டு. மரத்தை காயவைத்து, கடலில் கல்லை கட்டி மிதக்கவிட்டு ஊரப்போடுவார்கள். பின்பு செதுக்கி, ஒன்றாகக் கட்டி கட்டுமரத்தை உருவாக்குகிறார்கள்.

அடிப்பகுதியில் மூன்று பெரிய மரங்கள், பக்கவாட்டில் தடுப்பாக இருமரங்கள்.இரு முனைகளிலும் பெருவாரியான நீரைத்தடுக்க கொம்பு போன்ற வடிவுடைய தடுப்புகள். நீர உயர நியதிகள் அதிகம் இல்லதது மரம் கட்டும் முறை. கண்ணளந்ததே அளவு.

மரங்களை கயிற்றால் கட்டியே ஒன்று சேர்க்கிறார்கள். இதனால்தான் 'கட்டு' மரம்.

மரங்களை தொடுப்பதற்கு மூங்கில் மரத்தின் தடித்த அடிப்பாகத்தை பிளந்து தொடுப்பு. இதை தூக்கி தொடுப்பது பெரும் சாகசம். 'தொளவை' என இவை அழைக்கப்பட்டன.

வலைகள் பலவிதம். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப. பொதுவாக நைலான் நூலிழைகளை கோர்த்து கட்டப் பட்டிருக்கும் இந்த வலைகள். கயிற்றில் கட்டப்பட்டவலைகளும், நூல் வலை களும் உண்டு. வலைத்தொகுப்பை 'மடி' என்று சொல்வது வழக்கம். கடலுக்கு வலைகொண்டு மீன் பிடிக்கச் செல்வதை "மடிக்குப் போகிறது" என்று சொல்வதும் உண்டு.

வலைகோர்ப்பது மீனவப்பெண்களின் பொழுதுபோக்காக இருந்தது. கோர்த்த வலைகளை இவர்களே பயன்படுத்துவதில்லை. அது பீடி சுற்றுவதைப் போலான ஒரு அமைப்பு. வலை பின்னத் தேவையான நூல் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள், பின்பு பின்னிய வலைகளை வாங்கி செல்வார்கள். வலையின் நீளத்திற்கு ஏற்ப்ப கூலி. இப்போது பெண்கள் வலை பின்னுவதில்லை, ஏதாவது யந்திரங்கள் பின்னும்.

ஒருமுறை 'டிஸ்க்கோ' வலை என்று ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டது. 80களில் வந்த பொதுஜன உபயோகப் பொருட்கள் பல 'டிஸ்க்கோ' அடைமொழி கொண்டிருந்தன. அது ஒரு பல் பயன் (multi-purpose) வலையாக இருக்கலாம். இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல மரங்களில் பாய் ஏற்றி செல்வார்கள். இதற்கென ஒருவகை துணி இருந்தது. நேர்த்தியாக தைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாய்கள். பாய்களை மரங்களில் ஏற்றுவதற்கு ஒரு நீள மூங்கில் கம்பு.

முக்கோணப் பாயின் ஒரு பக்கம் மூங்கிலோடு கட்டப்பட்டிருக்கும். பாயை ஏற்றுவது நேர்த்தியாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டிய வேலை. நேர்த்தி பிறழ்ந்தால் மரம் கவிழும். இந்தப் பாய்த்துணி வாங்கி வரும் போது வெள்ளையாகத்தான் இருக்கும். புளிவிதையை இட்டு இந்தப்பாயை அவித்தபின் அந்தக் கரும் பழுப்பு நிறத்தை அடைகிறது.

தூண்டிலில் மீன்பிடிப்பதும் உண்டு. ஆழ்கடலில் கிடைக்கும் சில பெரிய மீன்களை தூண்டிலிட்டே பிடிக்கின்றனர். கரையிலிருந்து கண்ணெட்டும் தூரத்தில் சென்று தூண்டில் மீன் பிடிப்பதை "ஒத்னா மரம்" (ஒத்தை மரம் என்று வாசிக்கலாம்) என்று அழைக்கிறார்கள். இந்த மரங்களில் தனியாகவே செல்வார்கள்.கரையிலிருந்து இந்த மரங்களில் இருக்கும் தங்கள் கணவர்களை பெண்களால் அடையாளம் சொல்ல முடியும்.

இந்தத் தூண்டில் மீன்கள் (முட்டத்தில் இதை 'மரத்து மீன்' என்று அழைப்பார்கள்), வீடு வந்து சட்டியில் கழுவும் போதும் உயிரோடு துடிக்கும். குளம்பு வைத்தால், அன்று மலர்ந்த மலர்களை நுகர்வதுபோல் ஒரு அனுபவம் தோன்றும். முட்டத்தில் மதிய வேளைகளில் இந்த மரத்து மீன்கள் கிடைக்கும்.

"கரை மடி" எனப்படும் கரையிலுருந்தே மீன் பிடிக்கும் முறயும் உண்டு. இதற்கென பிர்த்யோகமான ஒரு வலை.

இருபுறமும் வடங்கள் நடுவில் வலை. ஒரு சிறிய படகில் அல்லது மரத்தில் வலையேற்றப்படும். வடத்தின் ஒருமுனை கரையில் ஒரு குழு வைத்திருக்கும் மறுமுனை படகில். படகு வலையை கடலுக்குள் தளர்த்திக்கொண்டே ஒரு அரை வட்டம் வந்து கரையை சேரும். மறுமுனை இன்னொரு குழு கையில் தரப்படும், இரு குழுவும் தரையில் இருந்தபடியே வலையை கரை நோக்கி இழுக்கும். குளத்திலோ ஆற்றிலோ டவல் வைத்து மீன் பிடிப்பது போலத்தான். இது கொஞ்சம் பெரிய முயற்ச்சி.

இந்தக் கரைமடியில் பொதுவாக சின்ன மீன்களே கிடைக்கும். இவையும் குழம்பிற்க்கினியவை. ஜெல்லி மீன்களும் பேத்தை எனப்படும் உடம்பெல்லாம் முள் கொண்ட ஒரு வகை மீனும் கிடைக்கும். பேத்தைகள் உண்பதற்க்காகாது.

கரைமடி வலைகளை இழுக்கும் போது மட்டுமே 'ஏலேலோ ஐலசா' பாடுவார்கள். நான் கேட்டவரை இது ஒரு இட்டு கட்டி பாடும் பாடலகவே இருந்தது, 'ஏலேலோ ஐலசா' என்ற பதங்களைத் தவிர மற்றவை பாடுபவரின் சொந்த வரிகளாகவே தென்பட்டது. அழகியலைவிட
நகைச் சுவையே மிகுந்திருந்தது அந்த கடலோரக் கானாவில்.

Labels:

II. ஊர் குறிப்பு

கடற்கரை கிராமங்களைப்பற்றி பலருக்குத் தெரிவதில்லை. நகரங்களில் வாழ்பவர்கள் தங்களை அடுத்துள்ள கிராமங்களையே புரிந்துகொள்ள முனைவதில்லை, அவர்களிடம் கடல் சார்ந்த ஊர்களைப்பற்றிய அறிதலை எதிர்பார்க்க முடியாது.

விவசாய கிராமத்து மக்களிடமும் மீனவக் கிராமங்களைப் பற்றி மேலோட்டமான மதிப்பீடுகளே இருந்துவருகின்றன.

மீனவர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளாததே இதற்கு முதற் காரணம். கரையிலிருந்து கடல் நோக்கியே பழக்கப்பட்டிருந்தன அவர்கள் பார்வைகள்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களிலும் கடற்கரை கிரமங்களுக்கும் மற்ற கிராமங்களுக்கும் புவியியல் இடைவெளி இருந்தது. இன்றும் இருக்கின்றது. இதுவும் ஒரு காரணம்.

நெய்தல் நிலத்தின் இன்றையப் பெருமைகளை தமிழில் எழுதிவைத்தவர்களும் குறைவே. சில ஆரய்ச்சிகள் இருந்தாலும், வெகுஜன பதிவுகள் மிகக்குறைவு. படித்து மீனவர் கிராமங்களிலிருந்து வெளியேறுபவர்களும் தங்களின் மூலத்தை(Origin என்று வாசிக்கவும்) மறைத்தே வாழ்கின்றனர். எது ஈனம்? சொந்த அடையாளங்களைத் தொலைத்து நிற்பதா இல்லை அணிந்து அலங்கரிப்பதா?

முட்டம் கடற்கரை கிராமங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மீனவர்கள், மீன் வியாபாரிகள், ஆசிறியர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் என்று இங்குவாழும் மக்களை எளிதாய் வகைப்படுத்திவிடலாம்.

பரவர் முக்குவர் என்ற குமரி மாவட்டத்தின் இருபெரும் மீனவ ஜாதி மக்கள் ஒன்றாய் (ஒற்றுமையாய் என்றும் வாசிக்கலாமோ?) வாழும் ஊர். இரண்டு பள்ளிக்கூடங்கள், உயர்நிலை வரை(இப்போது மேல்நிலை).

கடலைமறைத்து நிற்கும் தேவாலயம், பல ஊர் தாண்டிக் கேட்கும் கோவில் மணிகள், மணிகள் உறங்கக் கூண்டு.உரோமாபுரியிலிரிந்து கப்பலில் வந்தவை இந்த மணிகள். (கடலோரக் கவிதைகள் படத்தில் ஆர்ட் டைரக்டர் செய்த அட்டை மணிதான் உபயோகப்படுத்தப்பட்டது).
ஊரின் முகப்பில், கலங்கரை விளக்கம்(light house), அஞ்சல் நிலையம், பேருந்து நிலையம். ஊரைவிட்டு சற்றுத் தள்ளி அரசு மருதுவமனை.

இந்தியாவின் சில கிராமங்களோடு ஒப்பிட்டால் முட்டம் ஒரு நகரமாகத் தோன்றும்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களின் மையப் புள்ளியாக முட்டத்தை கருதலாம்.

புவியியலில் முட்டம் கிழக்கையும் மேற்கையும் பிரித்து, கடலுக்குள் முட்டி நிற்கும். கன்னியாகுமரியிலிருந்து பார்த்தால் முட்டம் அதன் மெற்கே உள்ள ஊர்களை மறைத்து நிற்கும். மேற்கிலிருந்து பார்த்தால் கிழக்கை மறைக்கும். கன்னியாகுமரியைப்போல் இங்கிருந்தும் சூரிய உதையத்தையும் மறைவையும் ஒரே இடத்திலிருந்து பார்க்கமுடியும்.
வாழ்வியலிலும் முட்டம், பரவர் சமுதயத்தின் மேற்கு எல்லையாகக் கருதப்படுகிறது. முட்டதிற்கு மேற்கே பெர்னாண்டோஸ் என அழைக்கப்படும் பரவர் சமுதயத்தினர் பரவலாக இல்லை. அதேபோல் முட்டத்திற்கு கிழக்கே முக்குவர் கிராமங்கள் சிலவே உள்ளன. (ஜாதி பற்றிய பதிவுகளை எந்தவித விறுப்பு வெறுப்புகளுமின்றி, சமூக வாழ்வியல் தகவலாகவே வைக்கிறேன்.)

முற்றிலும் கத்தோலிக்க கிறித்துவர்கள்.

குமரியின் மீனவக்கிராமங்களில் கத்தோலிக்க கிறித்துவர்கள் மட்டுமே உள்ளனர். புனித சவேரியாரால்(St. Francis Xavier) மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். இவர் உடல்தான் இன்றும் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது.

16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்கோடிகளில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கிறித்துவம் தழைக்க புனித சவெரியாரே காரணம்.

கடற்புறங்களில் காவல் நிலையங்கள் இருந்ததில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் மீனவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களோ எனத்தோன்றும். ஊரின் பிரச்சனைகளை ஊர் பங்குக் குழு நிவாரணம் செய்தது. பங்கு என்பது கத்தொலிக்க கிறித்துவ அமைப்பின் கடைசிக் கிளை. ஒரு பெரிய ஊரின் கோவிலை(சர்ச் என்று வாசிக்கவும்) நிர்வகிக்கும் குழு. ஊர் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு. அந்த்தந்தக் கோவிலின் முதன்மை பாதிரியார் இதற்கு தலைமை தாங்குவார்.இந்த பங்குக்குழுவே ஊரின் பல சமூக, பொருளாதர முகங்களை நிர்வகித்தது. இவர்கள் அவ்வப்போது சட்டங்கள் இயற்றுவதும் உண்டு.

தனிமனிதர் மற்றும் குடும்பத் தகறாருகளுக்கும் இவர்களே சிலவேளை பஞ்சாயத்து செய்துவைத்தனர். போலீஸ் கேஸ் எல்லாம் மிகக் குறைவே. ஊர்க்கலவரங்களின்போது மட்டும் போலிஸ் தலையீடு இருந்தது.

ஊரின் முக்கியத் தொழில், மீன் பிடித்தல். மற்ற சில மீனவ கிராமங்களைப்போல் அல்லாமல் முட்டத்தில் அதிகம்பேர் வளைகுடா நாடுகளுக்குச் செல்லவில்லை.
இதற்கு தனிப்பட்ட காரணஙகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிழக்கேயுள்ள ஊர் பிள்ளைதோப்பு, மேற்கே கடியப்பட்டணம். வடக்கே அம்மாண்டி விளை தெற்கே நீலக்கடல்.

முட்டத்தின் மேடுபள்ளமான நிலப்பரப்பு அதன் வாழ்வியலை பிரதிபலித்தது.

Labels:

I. பின்புலம் - எனக்கும், ஊருக்கும்.

முட்டம், கிட்டத்தட ஒரு குன்றுதான். கடலை இருபக்கங்களிலும் உள்விட்டு நிலம் முட்டிக்கொண்டிருக்கும். பாறைகள் நிலமெங்கும், கரையெங்கும். அலைகள் கரைகளை தினம் தினம் மாற்றியமைத்துக்கொண்டிருந்தன.

கடல் மட்டதில் கீழமுட்டம், குன்றாக மேலமுட்டம், செம்மண் நிலப்பரப்பாக மேலமுட்டத்துக்கும் மேலே, சிவந்தமண் எனப்பட்ட ஜேம்ஸ் நகர்.

முட்டம் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். கன்ன்னியாகுமரியை தவிர்த்தால் குமரி மாவட்டத்தில் பெயர்போன ஒரு கடற்கரை கிராமம். உபயம்- பாரதிராஜா.

முட்டத்தின் அழகே அதன் பாறை நிறைந்த சமச்சீரற்ற நிலப்பரப்புதான். அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் பரவலாக 'சேரியா முட்டம்' என்றும் 'லைட்ஹவுஸ் முட்டம்' என்றும் அறியப்படுகிறது. தமிழகத்தில் எங்கும் 'கடலோரக்கவிதைகள் முட்டம்'.

நான் உங்களுக்கு அறிமுகமாயிருக்க வாய்ப்பில்லை. பிறந்து 15 வருடங்கள் முட்டத்தில், அதன்பின் சென்னையில். இடையிடையே தமிழகத்தில் சில பகுதிகளில் வாழ்ந்தவன். சில வருடங்களை அமெரிக்கவிலும் கழித்துள்ளேன். கல்லூரி, சென்னை இலயோலா.

அப்பா அம்மா ஆசிறியர்கள். கன்னியாகுமரியின் மிகப் பெருமைக்குரிய தொழில். குடும்பதிற்கு ஒருவர் வாதியாராகவேண்டுமென எழுதாத சட்டம்.

இது போதும் இப்போது.

இந்தத் தொடர் எந்தவித ஆராய்ச்சியும் இன்றி, என் சொந்த அனுபவங்களின் தொகுப்பாகவும், அவற்றைப் பற்றிய என் கருத்துக்களின் வெளிப்பாடாகவும் அமையும். வாழ்க்கை பற்றிய என் என்ணங்களை பதிக்கவும் முனைகிறேன்.

Labels: