அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XIII. அழைக்கப்பட்ட நண்பர்கள்

முன்பெல்லாம் முட்டத்தில் திருமணங்கள் வீட்டிலேயே நடத்தப்பட்டன. நாகர்கோவிலில்தான் மண்டப வசதி இருந்தது, அந்தச் செலவுகளும் அலைச்சலும் எல்லோருக்கும் சாத்தியமாகாததால் ஊரிலேயே திருமணம்.

வீட்டிற்குமுன், தெருவை அடைத்துக்கொண்டு பந்தல் போடப்படும். ஒரு வாரத்திற்கு, தெருவில் போக்குவரத்து அடைபடும். கடல் மணல், பந்தலின் உள் பரப்பட்டிருக்கும். இந்தப் பந்தல்களுக்குள் ஒரு மணம் பரவும். திருமணம் முடிந்ததும் காணாமல் போய்விடும் அந்த மணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பே பந்தலில் மின்விளக்கு அலங்காரம் ஒளிரும். கொண்டை வைத்த ஒலிபரப்பி (குழல் ஒலிப்பான்) கட்டப்பட்டு முதலில் கிறித்துவப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'விண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகின்றார்', புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் பொதுவாக முதற் பாடல்.

இசைத்தட்டுகள்தான் அப்போது. சின்னதாகவும் பெரியதாகவும் கறுப்புத் தட்டுகள், சில சிவப்புதட்டுகளும் உண்டு. தட்டுக்கள் சுழலும்போது தூசியிலோ கீறலிலோ சிக்கித் தவிக்கும் பாடல்கள் பல. இப்படி சிக்கிய ஒலியுணர் முள்ளைத்தூக்கி அடுத்த வரியில் போடுவது ஒரு கலை. கொஞ்சம் தவறினாலும் பாடல் பல வரிகள் கடந்துவிடும்.

குர்பானி முதல் குடியிருந்த கோவில் வரை பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எம். ஜி. ஆர் ரசிகர்கள் அதிகமாயிருந்ததால் வாத்தியார் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் திருமணங்களும் உண்டு. சிலநேரம் மலையாளப் பாடல்கள் ஒலிப்பதும் உண்டு. செம்மீனின், 'பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே கண்ணாளே' மனதில் ஒலிக்கிறது.

கல்யாணப்பந்தலருகே சிறுவர்கள் விளையாட்டு எப்போதும் நடக்கும். பாடல்களுக்கு நளினம் பிடிப்பது இவர்களின் இரவுநேரத்துப் பொழுதுபோக்கு.

உயிரைப்பணயம் வைத்து, மின்சாரக் கம்பியில் கொக்கி போட்டு மின்னிணைப்பு பெறுவதில் இந்த ரேடியோ செட்காரர்கள் நிபுணர்கள். சில திருமணங்களுக்கும் அப்படியே மின்சாரம் பெறப்படும்.

இந்தப் பந்தல்களில் சீட்டாடுவது ஆண்களுக்கு பொழுது போக்கு. சிலநேரங்களில் இந்த விளையாட்டுக்களில் எழும் சண்டைகளில் கல்யாணங்களே நின்றுபோகும்போலத் தோன்றும்.

சினிமாவில் வருவதுபோல மணப்பெண் கவுனெல்லாம் உடுப்பதில்லை. பட்டுச் சேலை காற்றாடத்தான் கல்யாணம். தலையில் 'ரீத்' எனப்படும் ஒரு அலங்காரமும், தலை துவங்கி பின்புறம் கீழாக வலைபோன்ற துணியில் ஒரு அலங்காரமும் செய்யப்படும். இந்த நீளமான 'நெட்' துணி கீழே விழாமல் பிடிக்க ஒரு வாண்டு நியமிக்கப்படும்.

மாப்பிள்ளை கோட் சூட், அல்லது பட்டு வேட்டி பட்டு சட்டை. பெண்ணின் சகோதரர் மாப்பிள்ளைக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

தங்கத்தில்தான் தாலி. பொதுவாக கன்னியாகுமரி கடரற்கரைகலில் தங்கத்தை கயிறுபோல முறுக்கி செய்யப்பட்டிருக்கும் தாலிச்செயின் பிரபலம். இந்தத் தங்கத்தாலியின் திருகாணியையோ அல்லது கொக்கியையோ மாட்டுவதற்கு ஒரு நாடகமே நடக்கும்.

திருமணத்தின்போது மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவர் மற்றவர் பேரைச்சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

"ஜோசப் ஆகிய நான் மேரியாகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும், நோயிலும் ...உனக்கு பிரமாணிக்கமாயிருப்பேன் என வாக்குறுதியளிக்கிறேன்" எனும் பொருள்பட ஒரு ஒப்பந்தம் வாசிக்கப்படுகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணும், இரு சாட்சிகளும், திருமணம் செய்து வைத்த பாதிரியாரும் கையொப்பமிட்டு திருமணங்கள் கோவில்களில் பதிவு செய்யப்படுகின்றன.

திருமண பூசை முடிந்தபின் 'பேண்ட் வாத்திய'க் குழு இசை ஆரவாரங்களோடு பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். புதிதாய் வரும் மணப்பெண்ணை வரவேர்க்க 'மணமகளே மருமகளே வா வா' பாடல் போடப்படும்.

கல்யாணப்பந்தலில், கீழே பெஞ்களைப் பரப்பி, சேலைகளைத் தொடுத்து மேடை அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேசையில் சர்கரை அலங்காரத்தில் கல்யாண கேக் ஜொலிக்கும். கீழே பெரிதாய் துவங்கி மேலே சிறித்தாய் மூன்று முதல் நான்கு தட்டுகளில் கேக் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதில் மேலுள்ள சின்ன வட்டம் மட்டும்தான் கேக் என்பதை பின்னொருநாள் ஏமாற்றத்தோடு தெரிந்துகொண்டேன்.

கேக்கை மந்திரித்து பாதிரியார் புதுத்தம்பதியரை வாழ்த்துவது முடிந்ததும் தம்பதிகள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டுவது வழக்கம். கேக் வெட்டியதும் பந்தலில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேக்கும் பழரசமும் வழங்கப்படும்.

ஊர் பெருசுகள் சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்தி பேச விளைவார்கள். நண்பர்களின் வாழ்த்து மடல் சட்டம்(Frame) போடப்பட்டு வாசிக்கப்படும். இது துண்டுப் பிரசுரமக வினியோகிக்கப்படுவதும் ஊண்டு. தோழிகளின் பாட்டு, குழந்தைகளின் ஆட்டம் என திருமண வரவெற்பு நடந்துகொண்டிருக்கும்போதே முதல் பந்தி துவங்கும்.

பிரியாணி பிரபலாமவதற்குமுன்பு சாப்பாடுதான் விளம்ப்பப்பட்டது. கேரள மணம் வீசும் கல்யாணச்சாப்பாடு.

தேங்காய் போட்ட பருப்புக்குளம்போடு துவங்கும் பந்தி. இதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்பதுமுண்டு. அடுத்து சாம்பார், ரசம் மோர் எனத் தொடரும். பருப்பும், பயறும் போட்ட பாயாசம் அல்லது சேமியா அல்லது அடை பாயாசம். பாயாசத்தில் பழத்தைப்பிழிந்து இலையை வழித்து நக்கினால்தான் திருமணச்சாப்பாடு நிறைவுபெறும். மணக்கும் மலையாள அவியல் இல்லாமல் இருக்காது இந்த சாப்பட்டில். தேங்காயில்லாத பதார்த்தம் ஊறுகாய் மட்டும்தான்.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு முகச்சவரம் செய்யும் சடங்கு நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுச்சாப்பாடு போடப்படும். ஏற்கனவே சவரம் செய்யப்பட்ட மணமகன் முகத்தில் பால் தடவி சவரம் செய்வது போல நடக்கும் ஒரு சடங்கு. 'முகத்துவலை' (முகத்து வேலை மறுவியிருக்கிறது) என அழைக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வழக்கம் என்றே நினைக்கிறேன்.

இந்தச்சடங்கு துவங்குவதை ஒருவர் மைக் செட்டில் ஒலிபரப்புவார். கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் இதே அறிவுப்புத்தான், 'மாப்பிளைக்கு முகத்துவேலை ஆரம்பிக்க இருப்பதால்... அழைக்கப்பட்ட நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'.

இன்னும் சில திருமணங்கள் இப்படி தெருமணக்க, ஊர்மணக்க நடைபெறுகின்றன.

Labels: