அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XVI. ஆழி என்றொரு உலகம்

பூமியின் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். கடல்தான் பூமியில் பெரும்பங்கு. பொதுவாக இந்தக்கடலிலிருந்து மீன் மட்டும்தான் கிடைக்கிறது என நினைக்கிறோம். பள்ளிக்கூடத்தில் 'கடல்நீர் ஆவியாகி மேகமாகி இடி இடித்து மழை பெய்யும்' பாடம் பயின்றதை மறந்துவிடுகிறோம்.

கடலில்லாது பூமி உயிர்வாழத் தகுதியற்றதயிருந்திருக்கும். கடலில்தான் உயிர் விளைந்தது என்கிறது பரிணாம தத்துவம்.

முட்டத்தில் கடற்கரையில், பாறையொன்றில் அமர்ந்து தியானித்துப்பாருங்கள். ஆழி சென்று அறிவு பெற்றுத் திரும்பும் அந்தக் கடல் காற்று உயிரின் இரகசியங்களை உங்களுக்குச் சொல்லும். இன்னொரு விவேகானந்தனாக மாறிப்போகவும் வாய்ப்புள்ளது.

இந்தக் கடல்மேல் பயணிப்பது ஆத்மார்த்த அனுபவம்.

விசைப்படகொன்றில் ஒருநாள் கடலினுள், வெகுதூரம் பயணித்தோம். முதலில் அலைகள் படகை ஆட்டிவைக்கின்றன. இயந்திரங்கள் உயிர் பெற்றதும் இயற்கை சற்றே சிறுத்துப்போகிறது.

கடலுள்ளே செல்லச் செல்ல நிலம் மறைகிறது. சில வீடுகள் கண்ணுக்குத்தெரிகின்றன, ஒர் தெருவே தெரிகிறது, சில தெருக்கள் தெரிகின்றன, ஊரே தெரிகிறது, சில ஊர்கள் தெரிகின்றன...வெறும் கடல்தான் தெரிகிறது.

எங்கு பார்த்தாலும் நீலம். வெறும் கடலும் வானமும் மட்டுமே உலகில் உள்ளதைப்போன்றதொரு மாயம்.

அலைகள் இருபுறமும் கொட்டைச் சுவர்கள் போல எழுகின்றன. நடுவில் தொலைந்துபோனவர்கள்போல நாங்கள். பின்பு அலை தாழ்ந்துபோகிறது, மீண்டும் முன்னும் பின்னும் சுவர்போலெழுகிறது.

கடல்நீரின் தெளிவு கொஞ்சம் உள்ளே போனால்தான் தெரிகிறது. நீரில் ஓடும் மீன்களை வெறும் கண்கொண்டு பார்க்கலாம். இதற்கென மீனவர்கள் ஒரு கண்ணாடியும் வைத்துள்ளனர். தெளிந்த நீல நீரில் சூரியனின் ஒளிக்கோலங்களூடே நீந்தும் மீன்கள் காணப் புதுமை. உலகின் மொத்த அழுக்கையும் தாங்கிக்கொள்ளும் புனிதம் பெற்ற இந்தக்கடல் தன்னை தூய்மையாய் வைத்திருப்பது வியப்பு.

எங்கள் பயணம் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம். முட்டத்தின் கடற்கரையிலிருந்து கடலினுள் காணக்கிடைக்கும் மேக்கால், கீக்கால் பாறைகளை சுற்றிவந்தோம். இந்தப் பாறைகளின் அருகில் வெளிர் நீல வண்ணத்தில் நீர் காணப்படுகிறது. இந்தப் பாறைகளிலிருந்து மீன் பிடித்துத் தின்னும் கடல் நாரைகளும் பார்க்கமுடிந்தது.

'போங்கடா நீங்களும் ஒங்க ஒலகமும்' என்று இவை நம்மை விட்டு கடலுக்குள் வெகுதூரம் வந்து வாழ்கின்றன.

கடற்கரையில் கடல்நீரின் தெளிவை காண முடிவதில்லை. அலைகள் கலங்கியபடி காணப்படுவதற்கு நீரில் மணல் சேர்ந்து கொள்வதே காரணம்.

ஊரில் இருந்தவரை வருடத்திற்கு இரண்டு முறையாவது கடலில் குளித்துவிடுவோம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நாட்களில். ஒரு பொங்கல் நாளில் ஒரு பாறையின் கீழ் பொங்கலிட்டு உண்டுவிட்டு கடல் குளித்த ஞாபகம் இருக்கிறது.

மீன் வெட்டியதில் கழித்தவற்றை எடுத்து ஒரு துணியிலோ சின்ன, கைக்குட்டையளவு வலையிலோ கட்டி கரையில் நீருக்குள் கிடக்கும் பாறைகளருகே தூண்டில்போல போட்டு நண்டு பிடித்திருக்கிறோம். நீங்களும் செய்துபார்க்கலாம்.

இந்த நண்டுகள் விரலைத் துண்டிக்குமளவுக்கு கடிக்கும் திறனுடையவையாகையால் கவனம் தேவை.

முட்டம் போன்ற அலைமிகுந்த கடலில் குளிப்பதற்கு குறைந்தபட்சம் நீச்சலாவது தெரிந்திருக்கவேண்டும். சென்னை போல கரையில் குளிக்க விரும்புபவர்கள் குளிப்பதற்கான ஒரு கடல்நீர் நீச்சல் குளம் இயற்ககயே உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி கடற்கரையிலியங்கும் படகு கட்டும் இடத்திற்கு தெற்கேயுள்ளது.

அலைகள் அதிகமிருக்கும் நாட்களில் இங்குகூட குளிக்கமுடியாமல் போய்விடும்.

அலைகளை தவிர்க்க முடிந்தவரை கடலின் தரைப்பகுதி நோக்கி மூழ்கவேண்டும். அலைகள் கடலின் மேற்பரப்பிலேயே வேகமாய் வருகின்றன. ட்சுனாம்மி இதற்கு நேரெதிர், கடலின் மேல்மட்டம் அமைதியாக இருக்கும் ஆனால் அடிதளத்தை ஒட்டி ஆழிப்பேரலை வந்து கொண்டிருக்கும்.

அலைகளில்லாத சென்னைபோன்ற கடற்கரயில் கடல் குளிப்பது எளிதானதாகத் தோன்றும். நிஜத்தில் அமைதியான கடலுக்குள், அடியில் நீரோட்டங்கள் பல உள்ளன. இவற்றில் மாட்டுவது உயிர்மாய்க்கும் ஆபத்து.

வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தும், பூமியில் கடலைப்பார்த்தும் நம் சிறுமையை உணர்ந்துகொள்ளலாம். ஏதோ படைப்பின் சிகரெமே நாம்தான் என எண்ணிக்கொள்ளும் மனிதன் வெறும் ஒருசெல் உயிரிமுதல் குட்டிபோட்டு பால் தரும் உயிரினம் வரை வாழும் ஆழிஎன்றொரு உலகமுள்ளதை மறந்துவிட்டிருக்கிறான்.

தனித்திருந்து கடலை நோக்குவதும், இரவில் மொட்டைமாடியில் வானத்தை நோக்குவதும் ஏன் சுவைக்கிறது என்பது இப்பொது புரிகிறதா? நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் அந்தத் தருணங்கள் தத்துவார்த்தமானவை.

Labels: