அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

VIII. பயணிகள் கவனத்திற்கு

சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லும்போது, மனம் இலகுவாகிறது. பொதுவாக ஊமையாய் இருப்பவரும்கூட ஆடிப்பாடி மகிழ்ந்து, இவருக்குள் இப்படி ஒரு சுக ஜீவியா என வியக்க வைப்பார். சில நேரங்களில் இந்த உற்சாகம் நம்மை நிலை மறக்கச்செய்கிறது. மனம் இளகிப் பறக்கிறது, கவனம் சிதைகிறது. தூண்டில் புழுவை துரத்தித்தின்னும் மீன் போல, ஆபத்தை தேடிக்கொள்கிறோம் நம்மில் பலர்.

ஒவ்வொரு சுற்றுலாத்தளத்திலும் சொல்லப்படும் சோகக்கதைகள் ஏராளம். முட்டத்திலும் அவ்வப்போது இந்த சோகங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

முதலில், கடலில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென மரித்து மிதந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஐரோப்பாவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள் அங்குவந்து தங்கி ஒய்வெடுப்பது வழக்கம். அவருக்கு அனேகமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.

என் உறவினர் ஒருவர், அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சில நண்பர்களோடு பெரிய பாறைஒன்றின்மேல் அமர்ந்து தூண்டில் போட்டுக்கொண்டிருந்தார். பெரிதாய் வந்த ஒரு அலைக்கு ஒதுங்கியதில், தவறி கீழே இருந்த பாறைமேல் விழுந்தார். முட்டத்தில் அப்போது வெகுஜன போக்குவரத்தாக பஸ் மட்டுமே இருந்தது, ஒருவருக்கு அடிபட்டுவிட்டால், அவசரத்திற்கு டாக்ஸி வசதிகள் எதுவுமிருக்கவில்லை. ஒரு ஆள் பக்கத்து ஊர்ருக்குப்போய் கார் பிடித்து வரும்முன்பே உயிர் போய் விடும். அவரும் இறந்து போனார்.

இளம் வயதில் அவரோடு சேர்ந்து இறந்துபோன கனவுகள் எத்தனையோ. அவர் சடலத்தின் மீது ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களும் வைத்திருந்த மலர்வளையங்கள், ஒரு குட்டிமலையாய் காட்சி அளித்தன. அவை அன்று வீசிய வாசம் இன்றும் நுகர முடிகிறது.

ஆனி ஆடி மாதங்களில் கடலில் அலைகள் ராட்சதமாகும். மீன்பிடித்தொழில் கெடும். மீனவர்களே ஆட்கொள்ள முடியாத அந்த அலைகளை மற்றவர்கள் எதிர்கொள்வது எப்படி? இந்த மாதங்களை 'கடலடி சீசன்' என்பார்கள்.

ஒரு கடலடி சீசன்போது, சில கல்லூரி ஆசிரியர்கள், பெண்கள் உட்பட, முட்டம் பார்க்க வந்தார்கள். கரையில் துவங்கி கடலுக்குள் வீழ்ந்து கிடக்கும் பாறை ஒன்றில் அமர்ந்து அலைகளை ரசித்துக்கொண்டிருந்தார்கள். சூரியன், பழுக்கச்சிவந்து மறையக்காத்திருந்தது.

வலிய அலை ஒன்று அந்தக் கூட்டத்தில் இருவரை கடலுக்குள் இழுத்துச்செல்கிறது. நீச்சல் தெரிந்தஒருவர் அவர்களைக்காப்பாற்ற கடலில் குதிக்கிறார். அலை கடலுக்குள்ளும், பாறைக்கருகிலும் இவர்களை அலைக்களிக்கிறது. பெண்ணொருவர் தனது சேலையை அவிழ்த்து வீசுகிறார். அதை எட்டிப்பிடிக்க இயலாமல் போகிறது.

ஆரவாரம் கேட்டு வந்த ஊர்க்காரர் ஒருவர், கடலில் குதித்து ஒருவரை கரை சேர்க்கிறார். இதற்குள் வலுவிழந்து போன அவரை மீண்டும் கடலலை உள்ளிழுக்கிறது. எல்லா போராட்டங்களுக்கும் பிறகு கடல் மட்டத்தில் தெரிந்துகொண்டிருந்த தலைகள் கடலுக்குள் மூழ்கிப்போகின்றன, ஒவ்வொன்றாய்.

முட்டத்தை உலுக்கிய நிகழ்சிகளில் இதுவும் ஒன்று. கடலில் இறந்தவர்களின் உடல் மூன்று நாள் கழித்து கரையேறிவிடும். அப்படி கரையேறியது இவர்களில் இருவரின் உடல்.பாறைகளில் சிக்கியிருந்த இன்னொரு உடலை, 'குளியாளிகள்' எனப்படும், கடலுக்குள் பலநிமிடங்கள் மூச்சைப்பிடித்து குளிக்கும் திறனுடைய மீனவர்கள், குளித்தெடுத்தார்கள்.

இரவு பகலென கடற்கரையில் அந்த உடல்களைக் கண்டெடுக்க நடந்த போராட்டங்கள் நினைவிருக்கின்றன.

சுற்றுலாபோது கூடவரும் பெரியவர்களோ, ஆசிறியர்களோ நம்மை எச்சரிப்பது எரிச்சலூட்டக்கூடியதாயிருக்கிறது. ஆனால் அது வானத்தில் பறக்கும் நம் கவனத்தை தரையிறக்கி சுற்றுச்சூழலை உணரவைக்கிறது. நமக்குப் பரிச்சயமில்லாத இடங்களுக்குத்தான் நாம் சுற்றுலா போகிறோம், எனவே அதிக கவனம் தேவைப்படுகிறது.

என்னதான் கடற்கரையில் பிறந்தாலும், அமைத்தியாகத்தோன்றும் சென்னை கடலில் நான் குளிக்கத்தயங்குவேன். அது பரிச்சயமில்லாத இடம் என்பதே அதற்குக் காரணம்.

இப்படி சுற்றுலா தளங்களில் நிகழும் விபத்துக்களை பலிகள் எனக்கூறும் (மூட?) நம்பிக்கை இருக்கிறது. "வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டாவது விழும்", என சிலர் கூறுவது, ஒரு புள்ளிவிவரத் தோராயமே தவிர வேரொன்றில்லை.

அவ்வப்போது கடற்கரையில் பிணம் ஒதுங்கிக்கிடக்கிறது என்கிற வதந்திகள் ஊரில் பரவும். சில நேரங்களில் இவை வெறும் வதந்திகளாக இருப்பதில்லை.

**********

பின் குறிப்பு: Iல் சொன்னது போல எனது நினைவுகளை தொகுக்கும் முயற்சியே இது. இந்த அத்தியாயம் முட்டத்தைப்பற்றி பயம் ஏற்படுத்த அல்ல. அழகு மிகுந்து நிற்கும் இடங்கள் பல ஆபத்து மிக்கதாகவும் இருக்கின்றன என்பதற்கு முட்டம் விதிவிலக்கல்ல என்பதற்காகவே.

Labels: