அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XIV. ஏட்டுச்சுறாமீன்

கடற்கரையில், நிழலில் படுத்துக்கிடக்கும் மீனவனைப் பார்த்து சுற்றிப்பார்க்க வந்த ஒரு பணக்காரர் கேட்கிறார்

"ஏம்பா, தொழிலுக்கு போகல?"

"போயிட்டு வந்துட்டேனே", மீனவன்

"சும்மா படுத்துட்டிருக்கியே இன்னொருவாட்டி கடலுக்கு போயி மீன் பிடிச்சா என்ன?"

"அப்படி செஞ்சா?"

"அதிகமா பணம் கெடைக்கும்"

"அதிக பணம் வந்தா?"

"இன்னும் ரெண்டு மூணு போட் வாங்கலாம். தொழில பெருக்கலாம்."

"தொழில பெருக்குனா?"

"பணக்காரனாயிடலாம்."

"பணக்காரனாயிட்டா?"

"நல்லா படுத்து ஓய்வெடுக்கலாம்."

"இப்ப மட்டும் என்ன செய்றேனாம்."

இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். இதை ஏன் மீனவனை நாயகனாக வைத்துச் சொல்கிறார்கள்? மீனவர்கள் பொதுவாக செல்வம் சேர்ப்பது பற்றிய கவலையில்லாதவர்களாயிருந்தனர். நாளை பற்றிய கவலை இருந்தால் அலைக்களிக்கும் கடலலைகளினூடே தொழில் செய்யப் போகமுடியுமா?

குறைந்தபட்சத் தேவைகளே இருந்தன அவர்களுக்கு. கடற்கரைகளில் வங்கிகளே இருந்ததில்லை. சேமிப்பு? எதை நோக்கி சேமிப்பது. தொழில் செய்யக் கருவிகளிருந்தாலே போதுமானதாயிருந்தது.

சில பருவங்களில், இரால் அதிகமாகக் கிடைக்கும் போது கொஞ்சம் பணம் சேரும். மீன்பாடில்லாத அடுத்த பருவங்களில் அது கரைந்து போகும்.

வாழ்க்கையை அனுபவிக்க மறந்ததில்லை இவர்கள். மது, புகை, வெற்றிலை என ஏதாவது ஒரு பழக்கம் பலரிடமிருந்தது. மூக்குப்பொடி வைத்திருக்கும் ஒரு மாமாவிடம் அவ்வப்போது வாங்கி தும்மிக்கொள்வேன். முகுது சொறிவது, மூக்குப்பொடிபோட்டுத் தும்முவது, டவல் நுனியை சுருட்டி காது குடைவது போன்ற சிற்றின்பங்கள் நிறைந்ததுதான் சொர்க்கம் போலும்!

சினிமா முக்கியமான பொழுதுபோக்கு. கடன்வாங்கியாவது திருநாள் கொண்டாடுவதென்பது ஒரு எழுதப்படாத சட்டம். செலவு செய்யத் தயக்கமென்பதே இல்லை.

என் நண்பர் ஒருவர் எப்போதும் குறையாகச்சொல்வார்,"ஏன் இந்த சாமியார்கள்(பாதிரியார்கள்) இந்த மீனவ மக்களுக்கு சேமிக்கச் சொல்லித்த்ருவதில்லை?" என்று. முதலில் கூறிய கதைதான் பதிலாகுமென நினைக்கிறேன். பணம் சேரச் சேர நாம் மேலும் மேலும் ஆசைப்படுகிறோமென்பதுதான் உண்மை.

மீனவர்களை படிக்காதவர்கள் என எடைபோடும் பலர் உண்டு. இது முற்றிலும் பொய். குறைந்தபட்சம் எழுத படிக்கத்தெரிந்தவர்கள் மீனவர்கள். ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள் அதிகம். பெண்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது படிக்கிறார்கள். படிப்பறிவு கன்னியா குமரி மாவட்டத்தில் அதிகம். கேரளாவின் தாக்கமோ என்னவோ?

மேல் படிப்புக்கு வெளியூர் போகத்தான் வேண்டும். பலர் நாகர்கோவிலில் சென்று படிப்பதுண்டு. நான் நாகர்கோவிலில் 'கார்மல் மெனிலைப் பள்ளியில்'.

பஸ்ஸில் பள்ளி செல்வது தனி அனுபவம். எங்களோடே மீன் வியாபாரத்துக்குச் செல்லும் பெண்களும் பஸ்ஸில் பயணிப்பதுண்டு. பஸ்ஸே மண மணக்கும். யாராவது குறைசொன்னால், "இவரு பெரிய பிராமணரு" என்ற பதில்தான் கிடைக்கும்.

இந்த பஸ் பயணங்களில் பேசப்படும் காதல் கோர்ப்புக் கதைகளும், விழி சம்பாஷணைகளும், "நான் அந்த பொண்ண சைடடடிக்கிறேன். ஒன் ஆளு யாருடா?" போன்ற வினவல்களும் ஒரு தனி ஆட்டொகிரஃப் அனுபவம்.

கார்மல் பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் தரும் 'அடி'க்குப் பேர் போனது. அடி கொடுத்தே படிக்கவைக்கும் ஆசிரியர்கள் பலர். மாணவர்கள் சும்மாவா? கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுக்கும், சகிக்கவே முடியாத, பட்டப்பெயர்கள்.

குண்டான மொழு மொழு வாத்தியாருக்கு பெயர் 'தக்காளி'

எப்போதும் நேர்த்தியாய் ஆடை அணிந்து, ஒல்லியானவர் 'பொம்மை'

கறுப்பாய் ஒருவர் 'நீக்ரோ'

தத்துவமாய் பேசும் 'சாக்ரட்டீஸ்'

குனியவிட்டு பிடரியில் அடிக்கும் 'பண்ணி மேய்ச்சான்'

வேட்டிமட்டுமே கட்டிக்கொள்ளும் 'கொத்தனார்'

குள்ளமாய் ஒரு 'கட்டபொம்மன்'. எனப் பட்டப் பெயர்கள் பலவிதம். சைக்கிளில் போகும் வாத்தியாரின் பட்டப்பெயரை கூவிவிட்டு ஓடும் மாணவர்களை துரத்தும் காட்சி காணக்கண்கோடி வேண்டும்.

பட்டப்பெயர் இல்லாத வாத்தியாரே இல்லை கார்மலில். வரலாற்று சிரப்புள்ள ஒரு பள்ளி. கடலோர மாணவர்கள் பலர் இங்கு படிப்பது வழக்கம்.

என்ன படித்தாலும் கடல் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் பலருக்கும் இருந்தது, இதனாலேயே பலர் பாதியில் படிப்பை நிறுத்தினர். கஷ்டப்பட்டு ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் வரை படித்தவர்களும் உண்டு. இருந்தும் படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதுதான்.

கிராமத்து இளைஞர்களின் சோகமே இதுதான். படி.. படி என விளம்பரங்களும் வற்புறுத்தல்களும், பிறகு வேலையில்லாமல் திண்டாடும்போது, 'தம்பி, விவசாயம் மோசமானதுன்னு ஏன் நினைக்கிறீங்க?' என்ற கேள்வி.

பெண்கள் படித்து ஆசிரியராகவோ, கிறித்துவ கன்னியராகவோ மாறுவதுண்டு. கல்லூரிவரை படித்துவிட்டு கருவாடு காயப்போடும் பெண்களும் உண்டு.

படிக்க ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக மீன்பிடிக்கப் போன நண்பர்கள் சிலரோடு நான் படித்திருக்கிறேன். இவர்கள் ஏக்கமாக, கனவுகளை களைந்துவிட்டு விடைபெறுவது ஒரு மாபெரும் சோகம். மாறாக பள்ளிக்குப் போகமாட்டேன் என அடம்பிடித்து கடல்தொழிலுக்கு, சிறுவயதுமுதலே செல்லும் மாணவமணிகளும் உண்டு.

ஏட்டுச் சுறாமீன் புட்டுக்குதவாது என்பது இவர்களின் வாதம்.

Labels: